Home » உணவுப் பொருட்களின் தரத்தில் மிகுந்த விழிப்புணர்வு அவசியம்!

உணவுப் பொருட்களின் தரத்தில் மிகுந்த விழிப்புணர்வு அவசியம்!

by Rizwan Segu Mohideen
November 18, 2023 6:04 am 0 comment

உணவுப் பொருட்களின் தரம் குறித்து கூடுதலான கரிசனை செலுத்த வேண்டிய அவசியத்தில் மக்கள் இன்று உள்ளனர். உணவுப் பொருட்களில் நச்சுத்தன்மையான இரசாயனங்கள் கலந்துள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளிவருவதனாலேயே இது தொடர்பான அக்கறை மிகவும் அவசியமாகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் ஊடகமொன்றில் அதிர்ச்சியான செய்தியொன்று வெளியாகியிருந்தது. வெளிநாடொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயின் தரம் குறித்து அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த செத்தல் மிளகாயில் நச்சு இரசாயனப் பதார்த்தம் கலக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நச்சுப்பொருளானது புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டதெனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நச்சு இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குறித்த செத்தல் மிளகாய் அடங்கிய கொள்கலன் உரிய நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அந்த நச்சு இரசாயனம் கலந்த செத்தல் மிளகாயை உணவுக்குப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு மற்றொரு அச்சம் ஏற்படுகின்றது. இது போன்ற நச்சு இரசாயனங்கள் கலந்த உணவுப் பொருட்கள் ஏற்கனவே நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்குமோ என்பதே அந்த அச்சம்! அவ்வாறு அவை நாட்டுக்குள் வந்து சேர்ந்திருக்குமானால், அதனை மக்கள் தங்களது உணவுக்காகப் பயன்படுத்தியிருப்பரோ என்பது முக்கிய அச்சமாகும்.

எவ்வாறாக இருப்பினும் இவ்வாறான நச்சு இரசாயனப் பொருட்கள் கலந்த உணவுப் பொருட்களைக் கண்டுபிடித்து, அவற்றை நாட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதற்குக் காரணமாகவிருந்த அதிகாரிகளைப் பாராட்டுவது இவ்விடத்தில் முக்கியமாகும். அது மாத்திரமன்றி எதிர்காலத்தில் இவ்வாறான தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து அதிகாரிகள் மாத்திரமன்றி, சாதாரண பொதுமக்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் தரமற்ற உணவுப் பொருட்களினால் உண்டாகின்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாப்புப் பெற முடியும்.

இன்று உலகின் ஒவ்வொரு நாட்டிலும் அதிகரித்துவரும் சனத்தொகைக்குப் போதுமான அளவில் உணவுப் பொருட்கள் இல்லாத காரணத்தாலும், அவற்றின் விலையேற்றம் காரணமாகவும் விஞ்ஞான உலகம் புதிய கண்டுபிடிப்புகளான கலப்பினப் பயிர்களையும், விவசாய இரசாயனங்களையும், இரசாயனப் பசளைகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.

உண்மையில் இவை விவசாய உற்பத்தியை அதிகரித்த போதிலும், இவ்விவசாய இராசாயனங்களின் அதிகரித்த பாவனையின் விளைவாக விஞ்ஞான உலகும், விவசாய உலகும் பல்வேறுபட்ட சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆபத்துகளில் முக்கியமானது விவசாய உற்பத்தி நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்படுகின்ற பீடைநாசினிகளும் இரசாயனப் பசளைகளுமாகும்.

விவசாயப் பயிர்களை பீடைகளிலிருந்து பாதுகாப்பதற்காகவும், உணவு உற்பத்திப் பொருட்களை நீண்ட காலத்திற்குச் சேமித்து வைத்துப் பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மையான விவசாய இரசாயனங்கள் உண்மையிலேயே மிகவும் ஆபத்தானவையாகும். அவை மனித உடலுக்குள் சென்று பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. புற்றுநோய் போன்ற ஆபத்தான வியாதிகளையும் ஏற்படுத்துகின்றன. ஆகவே இவ்விடயம் குறித்து அலட்சியமாக இருந்துவிட முடியாது.

நாங்கள் கடைகளில் வாங்குகின்ற பழங்கள் பலவற்றிலும் உடலுக்கு ஒவ்வாத நஞ்சுப் பதார்த்தங்கள் உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இப்பழங்களை பல நாட்களுக்குப் பாதுகாத்து வைப்பதற்காகவே விற்பனையாளர்கள் இக்காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவில் நடைபெற்ற ஆய்வொன்றின் பிரகாரம் மனித உடல் ஏற்றுக்கொள்ளக்கூடிய நஞ்சினைவிட 40 மடங்கு நச்சுப் பதார்த்தங்கள் மனிதனது உடலுக்கு உணவினூடாக செல்கின்றதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாம் கடைகளில் வாங்குகின்ற உணவுகள் பலவற்றில் நிறமூட்டல் மற்றும் மணமூட்டலுக்கான இரசாயனங்களும், அவற்றைப் பாதுகாப்பதற்கான இரசாயனங்களும் உள்ளன. இவை உடலில் பாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன என்பதை மறந்துவிடலாகாது.

இவ்வாறு பல வழிகளிலும் நச்சுப்பொருட்கள் எமது உடலுக்குள் செல்வதால், உணவுப்பொருட்களின் தரம் குறித்த விழிப்புணர்வு எவ்வேளையிலும் எமக்கு அவசியமாகின்றது. எமது இளம்பராயத்தினர் இக்காலத்தில் பலவாறான உணவுகளை விரும்பி உண்கின்றனர். பிள்ளைகளின் வற்புறுத்தலுக்காக பெற்றோரும் அவ்வாறான உணவுப் பொருட்களை தங்களது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர்.

இக்காலத்தில் உணவகங்களில் கிடைக்கின்ற உணவுப்பொருட்கள் அத்தனையுமே தரமானவையல்ல என்பதை மறந்து விடலாகாது. இளவயதினரை ஈர்ப்பதற்காக பலவகையான சுவையூட்டிகளை உணவுப்பண்டங்களில் கலக்கின்றனர். அந்த உணவுகளால் மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை உணவக உரிமையாளர்கள் பொருட்படுத்துவரென்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே மக்களே தங்களது ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகின்றது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x