அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப் குழு) அமர்வுகள் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றையதினம் விடயமொன்றை சபையில் முன்வைத்தபோது, அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அது தொடர்பில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கோப் குழுவின் அமர்வு நேற்றையதினம் (17) மதியம் ஒரு மணிக்கு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொழுகைக்காக அந்த நேரத்தில் செல்வார்களானால் அவர்களால் அந்த குழு அமர்வில் கலந்து கொள்ள முடியாது போகும்.
குறிப்பாக ரவூப் ஹக்கீம், எஸ்.எம்.மரிக்கார் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த குழு அமர்வில் கலந்துகொள்ள முடியாமல் போகும்.
அது தொடர்பில் கவனத்திற் கொள்ளுமாறு சபாநாயகரைக் கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சபையில் குறிப்பிட்டார்.
கோப் குழு தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட கருத்துக்களையடுத்து சபையில் அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர், நேற்றைய தினம் மதியம் ஒரு மணிக்கு கூடவிருந்த அமர்வு இடம்பெற மாட்டாது என்றும் அது மட்டுமன்றி மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சபையில் தெரிவித்தார்.
அதனையடுத்து குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி., கோப்குழு அமர்வை பிற்பகல் 02 மணிக்கு நடத்த முடியும் என்றும் ஆலோசனையொன்றை முன் வைத்தார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர்,கோப் குழுவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் குழு அமர்வை நடத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம்