பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் அந்த நாட்டு அரசின் சார்ச்சைக்குரிய திட்டம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இது, பிரிட்டனை நோக்கிய அகதிகள் படையெடுப்பைத் தடுப்பதாக உறுதியளித்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ருவாண்டாவுக்கு அகதிகள் அனுப்பப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரிட்டனில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பினால், அந்த நாடு அவர்களை பாதுகாப்பற்ற மூன்றாவது நாட்டுக்கு அனுப்பி வைக்கும் என்பதற்கான தர்க்கம் உள்ளது என்று கூறியது. இதனை உச்சநீதிமன்றமும் ஆமோதிக்கிறது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எனவே, அகதிகளுக்கு ருவாண்டா பாதுகாப்பானது இல்லை என்ற அகதிகள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. இதன் மூலம், அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பி வைப்பதற்கான அரசின் முடிவு சட்டவிரோதம் என்று அறிவிக்கப்படுகிறது என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.