Home » பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பட்ஜட்

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பட்ஜட்

by sachintha
November 17, 2023 6:00 am 0 comment

சுதந்திர இலங்கையின் 78 ஆவது வரவுசெலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் கடந்த திங்களன்று சமர்ப்பித்தார். ஆனால் இவ்வரவு செலவுத்திட்டம் எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்தபடி அமைந்திருக்கவில்லை.

கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அதனால் கடும் பொருளாதார சுமை மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டது. எரிபொருள், எரிவாயு அடங்கலாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களினதும் விலைகள் பெரிதும் அதிகரித்திருந்தன. இப்பொருளாதார சுமைக்கு நிவாரணம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தினர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடி அரசியல் கொதிநிலையை ஏற்படுத்தியதோடு, ஆட்சியையும் கூட புரட்டிப் போட்டது.

அவ்வாறான நெருக்கடிக்கு உள்ளான நாடொன்றில் எதிர்பார்க்கக் கூடிய வரவு செலவுத்திட்டமாக இவ்வரவுசெலவுத் திட்டம் அமைந்ததாக இல்லை. மாறாக அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஒய்வூதியக்காரர்களுக்கான கொடுப்பனவு, வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு சுமையை ஈடுசெய்வதற்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு மாத்திரமல்லாமல் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு புதிய அபிவிருத்தி திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விளைவாக, இது தேர்தலை இலக்காகக் கொண்ட வரவு செலவுத்திட்டம் எனக் கூறும் நிலைக்கு எதிரணியினர் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் ​போது ‘நாட்டின் பொருளாதாரத்தை வழித்தடத்திற்கு கொண்டு வருவதே எனது முதல் பணி. பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்டம் குறித்து சிந்திப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை நிலைபேறானதாகக் கட்டியெழுப்புவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும். பொருளாதாரம் ஸ்திர நிலையில் இருந்திருந்தால் கடந்த வருடத்தில் அவ்வாறான நெருக்கடிக்கு நாடும் மக்களும் முகம்கொடுக்க நேர்ந்திருக்காது. ஆனாலும் அவ்விதமான நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது. அதற்கேற்ப பொருளாதார வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார். இதனைக் கருத்தில் கொள்ளாது இது தேர்தலை இலக்காகக் கொண்ட வரவு செலவுத்திட்டம் எனக் குறிப்பிடுவது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதுவே மக்களின் கருத்தாகும்.

நாட்டின் தலைமையை ஏற்றதும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னுரிமை அடிப்படையில் ஆரம்பித்தார். அதன் பயனாக பொருளாதார நெருக்கடி கட்டம் கட்டமாக நீங்கலானாது.

இவ்வாறான சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த நவம்பரில் தனது முதலாவது வரவு செலவுத்திட்டத்தை (2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவ்வரவுசெலவுத் திட்டம் பொருளாதார நிலைப்படுத்தலுக்கான யோசனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விரைவாக மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அவ்வரவு செலவுத்திட்டம் பக்கபலமாக அமைந்திருந்தது. அதன் பயனாக பொருளாதாரம் மறுமலர்ச்சிப் பாதையில் நம்பிக்கையோடு பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது. அத்தோடு பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அசௌகரியங்களும் நீங்கிவிட பெரும்பாலும் வழிவகுத்தது.

இந்நிலையில் பொருளாதார மறுசீரமைப்புக்கான யோசனைகளை உள்ளடக்கியதாக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. புதிய பொருளாதாரத்திற்கான பிரவேசத்தை ஏற்படுத்தல், அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரித்தல், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சிகளை வலுவூட்டல் உட்பட அனைத்துத் துறைகளும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. சிறந்த அரச சேவைக்கு சம்பள அதிகரிப்பு அவசியமானது. புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அஸ்வெசும கொடுப்பனவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

பசுமை வலுசக்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதால் பசுமைப் பொருளாதாரத் துறையை முன்னேற்றம் அடையச் செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. உலர் வலயத்தில் விவசாயத்தை நவீனமயப்படுத்தல், மீன்பிடித்துறையை விரிவுபடுத்தல், சுற்றுலாத்துறை பிரச்சினைகளை அறிந்து கொண்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை 05 மில்லியன்களாக அதிகரிப்பதற்கான யோசனையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பங்களாதேசம் போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுடன் போட்டியிடுவதற்கு காணப்படும் சவால்களை அறிந்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அவசியமான சூழலையும் இவ்வரவுசெலவுத் திட்டம் உருவாக்கியுள்ளது. அதேபோன்று பொருளாதார மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்ற வகையில் கல்வித்திட்ட மேம்பாட்டுக்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 2030-_2035 காலப்பகுதிக்குள் நவீன பொருளாதார இலக்குகளை அடைவதற்கு தேவையான பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்வதையும் இவ்வரவுசெலவுத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

ஆகவே நாட்டின் பொருளாதாரத்தை நிலைபேறான வகையில் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை உள்ளடக்கியுள்ள இவ்வரவு செலவுத்திட்டத்தை அற்ப அரசியல் இலாபம் பெறும் வகையில் நோக்குவது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு அவர்களும் ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT