Home » அனைத்துத் தரப்பினருக்கும் பயன் தரும் பட்ஜட்

அனைத்துத் தரப்பினருக்கும் பயன் தரும் பட்ஜட்

by Gayan Abeykoon
November 15, 2023 1:00 am 0 comment

நாட்டில் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட வரவு செலவுத்திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிலைபேறான அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டதாக இவ்வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ளது.

கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி கட்டம் கட்டமாக மீட்சி பெற்று நாடு மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ள சூழலில், இவ்வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துவதையும் கடந்த வருடத்தின் ஆரம்பப்பகுதியில் முகம்கொடுத்தது போன்ற பொருளாதார நெருக்கடிக்கு மீண்டும் உள்ளாகி விடக்கூடாது என்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது இவ்வரவு செலவுத்திட்டம்.

நாட்டின் அனைத்துத் துறைகளதும் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இவ்வரவு செலவுத்திட்டம், பொருளாதார மறுமலர்ச்சிக்கும் சுபீட்சத்திற்கும் நிச்சயம் பங்களிக்கும் என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

அரச ஊழியர்களுக்கும் ஒய்வூதியக்காரர்களுக்கும் மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிப்பட்டுள்ள இவ்வரவு செலவுத்திட்டத்தில் வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவென அஸ்வெசும திட்டத்திற்கு 250 பில்லியன் ரூபா, சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்புனவு அதிகரிப்பு, வடமாகாண மீனவர்களின் ஊக்குவிப்புக்கு 50 கோடி ரூபா, வடக்கு கிழக்கில் வீடமைப்புக்கென 200 கோடி ரூபா, மலையக மக்களுக்கு காணி வழங்கவென 400 கோடி ரூபா என்றபடி நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேநேரம், சுற்றுலா மற்றும் சுகாதாரத் துறைகளை மேலும் மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை உள்ளடக்கியுள்ள இவ்வரவு செலவுத் திட்டம் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மாவட்டங்களில் முதலீட்டு வலயங்கள், உயர் கல்வித்துறை மேம்பாட்டுக்கு புதிய பல்கலைக்கழகங்கள் என பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஹிங்குராகொடவில் மற்றொரு புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கான திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் 2013 ஆம் ஆண்டு வரையும் சர்வதேச விமான நிலையமாக கட்டுநாயக்க விமான நிலையம் விளங்கியது. ஆனால் இவ்விமான நிலையம் 2001 இல் அன்றைய புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாததத் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனால் வழமை போன்று உலகின் நாலாபுறங்களில் இருந்தும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களை அந்த துரதிர்ஷ்டகர சூழலில் தென்னிந்தியா, மாலைதீவு, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையம் மீள இயங்க ஆரம்பிக்கும் வரையும் அவ்விமானங்கள் அந்தந்த விமான நிலையங்களில் தரித்து நிற்க ​வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக அந்த விமான நிலையங்களுக்கு பெருந்தொகை கட்டணங்களை இலங்கை செலுத்தும் நிலைக்கும் உள்ளானது.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் தேவையும் முக்கியத்துவமும் பெரிதும் உணரப்பட்டது. அந்த அடிப்படையில் ஹம்பாந்தோட்டையில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு ஏற்ப 2013 முதல் மத்தள இந்நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக உருவானது.

ஆன போதிலும் அண்மையில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் மற்றொரு சர்வதேச விமான நிலையத்தின் தேவை உணரப்பட்டிருக்கிறது. அதாவது நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் கட்டுநாயக்காவிலோ மத்தளவிலோ விமானங்களை தரையிறக்க முடியாத நிலை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு தடவை ஏற்பட்டது. இலங்கைக்கு வந்த விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்து சில மணித்தியாலயங்கள் அங்கு தரித்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் இந்நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தை வடமத்திய மாகாணத்தின் ஹிங்குராகொடவில் அமைப்பதற்கு இவ்வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டிருக்கிறது.

நாடொன்றின் அபிவிருத்திக்கு விமான நிலையங்களும் அளப்பரிய பங்களிப்பை நல்கக் கூடியவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆகவே நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட இவ்வரவு செலவுத்திட்டத்தின் அனைத்து முன்மொழிவுகளும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட ஆதரவும் ஊக்குவிப்பும் அளிக்கப்பட வேண்டும். அதுவே நாட்டின் துரித அபிவிருத்தியை விரும்பும் அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT