Friday, May 3, 2024
Home » உலகக் கிண்ணத்தில் சோபிக்காததற்கு ‘மன்னிப்புக் கேட்டது’ இலங்கை அணி

உலகக் கிண்ணத்தில் சோபிக்காததற்கு ‘மன்னிப்புக் கேட்டது’ இலங்கை அணி

by damith
November 13, 2023 6:00 am 0 comment

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணத்தில் தோல்விகளை சந்தித்து சோபிக்கத் தவறிய இலங்கை கிரிக்கெட் அணி பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி ஏழு தோல்விகள் மற்றும் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை அணி கடந்த வெள்ளிக்கிழமை (10) அதிகாலை நாடு திரும்பியது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் தலைமையத்தில் நேற்று (12) நடைபெற்ற உலகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கருத்துக் கூறிய அணித் தலைவர் குசல் மெண்டிஸ், அணி சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதேபோன்று இந்த உலகக் கிண்ணத்தில் சோபிக்கத் தவறியதில் எந்த அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் காரணமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேநேரம், ஆட்டத்தில் சோபிக்கத் தவறியதற்கு அணித் தலைமை பெறுப்பை ஏற்றது காரணமா? என்ற கேள்விக்கு பதிலளித்த குசல் மெண்டிஸ், எதிர்பாராத வகையில் தலைமைத்துவத்தை ஏற்றது தனது ஆட்டத்தில் சிறு பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாகி இருக்கக் கூடும் என்றும் முன்னரும் தலைமை பதவியை வகித்திருப்பதால் அது முழுமையான காரணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

“கடைசி நான்கு இடங்களுக்குள் எவ்வாறு தெரிவாவது என்பதிலேயே நாம் அவதானம் செலுத்தினோம். அது அழுத்தத்தை ஏற்படுத்தியது. அணித் தலைமை எனக்கு பெரிய அழுத்தமாக இருக்கவில்லை” என்று குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.

இலங்கை அணியின் நிரந்தரத் தலைவராக உலகக் கிண்ணத்திற்கு சென்ற தசுன் ஷானக்க முதல் இரு போட்டிகளின் பின் காயமடைந்து அணியில் இருந்து வெளியேறியதை அடுத்தே குசல் மெண்டிஸிடம் அணித் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.

இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் சோபிக்கத் தவறி இருக்கும் சூழலில் அரசியல் தலையீட்டை காரணமாகக் கூறி சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் இலங்கை கிரிக்கெட்டை இடைநிறுத்தியுள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் மீதான தடை விரைவில் நீக்கப்பட்டு இலங்கை அணிக்கு விளையாட விரைவில் வாய்ப்புக் கிடைக்கும் என்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆலோசனை பயிற்சியாளருமான மஹேல ஜயவர்தன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ஏனையவர்களின் பிரச்சினைகள் எமக்கோ அல்லது வீரர்களுக்கோ சம்பந்தம் இல்லாதது என்றும் மஹேல கூறினார். வீரர்களின் திறமையை மேம்படுத்துவது மற்றும் அனுபவங்கள் மூலம் தவறுகளை சரி செய்வதை மாத்திரமே எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இருக்கின்ற வீரர்களை வைத்து தேர்வுக் குழுவினர் சிறந்த அணி ஒன்றையே தேர்வு செய்ததாகவும் ஆனால் அவர்கள் உலகக் கிண்ணத் தொடரில் சோபிக்கத் தவறிவிட்டதாகவும் மஹேல ஜயவர்தன வலியுறுத்தினார்.

இலங்கை அணி எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதோடு எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2024 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியும் இலங்கையில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் ஐ.சி.சி. தடையில் இருந்து விரைவாக வெளியேறும் நெருக்கடியும் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT