Home » நிலநடுக்கம் எவ்வேளையில் ஏற்படுமெனக் கூற முடியாது!

நிலநடுக்கம் எவ்வேளையில் ஏற்படுமெனக் கூற முடியாது!

அச்சத்துடன் வாழும் நேபாளம் மக்கள்!

by gayan
November 11, 2023 12:34 pm 0 comment

அடிக்கடி பாதிக்கப்படும் காத்மாண்டு பிரதேசம்!

நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இதனால் உயிரிழப்புகளும் உடைமை அழிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்னரும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நிலநடுக்கத்தால் 150 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 2 இலட்சம் பேர் வீடின்றிப் பரிதவிக்கின்றனர். அவர்கள் கடும் குளிரில் திறந்தவெளியில் உறங்குகின்றனர்.வீடற்ற மக்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இதுவரை 159 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்குச் செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து திறந்தவெளியில் பரிதவிக்கின்றனர். நேபாளத்தில் குளிர் காலமும் தொடங்கியுள்ளது. கடும் குளிரைப் பொருட்படுத்தாமல் கடந்த வாரம் ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்ட மக்கள் திறந்தவெளியில் உறங்கினர்.

வீடுகளை இழந்த மக்களுக்காக நேபாள அரசினால் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை போதுமானதாக இல்லை. இதுதொடர்பாக ஜாஜர்கோட் மாவட்டம் பெண் ஒருவர் கூறுகையில், “நிலநடுக்கத்தால் எங்களது குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு, உடைமைகளை முழுமையாக இழந்துவிட்டேன். இப்போது ஆதரவின்றி தெருவில் நிற்கிறேன். உறங்குவதற்குக்கூட இடமில்லை” என்றார்.

நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியிலேயே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 400- இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான வீடுகள், கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

நேபாளத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் 300 மீட்டர் ஆழமான களிமண் அடுக்கு உள்ளது. இது பள்ளத்தாக்குக்குள் நிலநடுக்கத்தின் நிலஅதிர்வு அலைகளைப் பிரதிபலிக்கிறது மற்றும் தீவிரப்படுத்துகிறது.

நேபாளம் சுமார் 80 ஆண்டுகளாக நிலநடுக்கங்களைச் சந்தித்து வருகிறது. மிதமானது முதல் மிகக்கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கம் வரை ஏராளமான வகைகளையும் சந்தித்துள்ளது.

பூமியின் மேலோடு பெரிய டெக்டோனிக் தகடுகளால் ஆனது. சில நேரங்களில் முழு கண்டங்களையும் உள்ளடக்கிய இந்த நிலப்பரப்புகள், தொடர்ந்து நகர்ந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருக்கின்றன. ஒரு சில தகடுகள் சேரும், ஒரு சில தகடுகள் விலகும். இந்த இரண்டு செயலாலும் புவியியல் மாற்றங்கள் உண்டாகும்.

இந்தியா, நேபாள், சீனா, பாகிஸ்தான் நாடுகளில் பரவியிருக்கும் இமயமலை புவியியலில் சொல்லப்படும் 2 டெக்டானிக் தட்டுகளின் இணைவால் ஏற்படுகிறது. ஐரோப்பிய-, ஆசிய மற்றும் இந்திய தட்டு இணையும் இடத்தில் அதன் அழுத்தம் காரணமாக நிலம் மேல்நோக்கி வளர்ந்து வருகிறது.

இரண்டு தட்டுகளும் ஒன்றின் மேல் மற்றொன்று அழுத்தம் கொடுப்பதால் இந்த இணைவுப் பகுதியில் நிலம் நகர்வுகளுக்கு உட்படும். அதனால் எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம் முதலானவை ஏற்படும். இந்த இரண்டு தட்டுகள் இணையும் இடத்தில் நேபாளம் அமைந்துள்ளது. இந்த இரண்டு தட்டுகளும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செ.மீ என்ற வீதத்தில் ஒன்றுக்கொன்று எதிராகவும் கீழும் அழுத்திக் கொள்கின்றன.

இந்த டெக்டானிக் தட்டுகளின் அழுத்தத்தால் கீழ் அடுக்கில் உராய்வும் மோதலும் நடைபெறும். அதை மையம் என்று சொல்வர். அந்த மோதலின் தாக்கம் நிலத்தில் மேற்பரப்பை அடையும் போது நிலநடுக்கம் உணரப்படும். நிலம் உறுதியாக இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். நேபாளம் மலைப் பிரதேசம் என்பதால் நிலை ஸ்திரத்தன்மை விரைவாக குலையும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

நேபாளத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் 300 மீட்டர் ஆழமான களிமண் அடுக்கு உள்ளது. இது பள்ளத்தாக்கிற்குள் நிலநடுக்கத்தின் நில அதிர்வு அலைகளை பிரதிபலிக்கிறது மற்றும் தீவிரப்படுத்துகிறது. இதன் விளைவாக மண் திரவமாக்கல் ஏற்படுகிறது. அதிர்வுகளால் திடமான நிலம் புதைமணல் வடிவத்துக்கு மாறும் போது இது நிகழ்கிறது.

கீழடுக்கு முதல் மண் புரள்வதால் அது மேலே வரும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிலத்தில் விரிசல் ஏற்படுவது, கட்டடங்கள் வீழ்வது, கோபுரங்கள் சரிவது, புதிய பள்ளங்கள், மேடுகள் உருவாவதை பார்க்க முடியும். இதை ரிக்டர் அளவுகளில் குறிப்பிடுவர்.

ஏப்ரல் 2015 இல், நேபாளத்தை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான பேரழிவுகரமான நிலநடுக்கத்தால் சுமார் 9,000 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 22,000 பேர் காயமடைந்தனர். இது 800,000 வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன.

நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் அங்கு வாழ்கின்ற மக்கள் எந்நேரமும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். நிலநடுக்கம் எவ்வேளையில் ஏற்படுமென்று தெரியாததால் தாங்கள் உறக்கமின்றித் தவிப்பதாக நேபாளத்தின் நிலநடுக்கப் பிரதேச மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT