அரசாங்க தபால் சேவை ஊழியர்கள் நேற்று முதல் 48 மணித்தியாலய பணிப்பகிஷ்கரிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். நுவரெலியா நகரிலுள்ள பழைமையான தபாலகக் கட்டடத்தை புதிய முதலீடுகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்தே தபால் சேவைத் தொழிற்சங்கங்கள் இப்பணிப் பகிஷ்கரிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றன.
இத்தபாலகக் கட்டடம் புதிய முதலீடுகளுக்காக வழங்கப்பட்டாலும் தபாலகத்திற்கென பொருத்தமான பிறிதொரு கட்டடம் வழங்கப்படும் என்று நகர அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்துள்ளது. இது தொடர்பில் வெகுஜன ஊடக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
அவ்வாறிருந்தும் கூட புதிய முதலீடுகளுக்காக நுவரெலியா தபாலகக் கட்டடத்தை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்து தபால் சேவை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையால் தபாலகங்களின் வழமையான சேவைகள் நேற்று பாதிக்கப்பட்டிருந்தன. இத்தொழிற்சங்க நடவடிக்கையினால் மக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். தபால் சேவைகளின் நிமித்தம் தபாலகங்களுக்கு வருகை தந்த மக்கள் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பும் துரதிர்ஷ்ட நிலைக்கு உள்ளாகினர்.
அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய புதிய முதலீடுகளுக்காகவே நுவரெலியா தபாலகக் கட்டடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ள நாட்டில், மீண்டும் அவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி இனியொரு போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.
அந்நிலையில்தான் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாகக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறான நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிப்பது ஆரோக்கியமானதல்ல. இலங்கையில் நஷ்டத்தில் இயங்கும் திணைக்களங்களில் தபால் திணைக்களமும் ஒன்றாகும். வருடமொன்றுக்கு 7 பில்லியன் ரூபா நஷ்டத்திற்கு முகம்கொடுக்கும் இத்திணைக்களத்தின் நஷ்டம் இவ்வருடம் 3 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. மூன்று பில்லியன் ரூபா என்பதும் சாதாரண ஒரு தொகை அல்ல. அதனால் அந்த நஷ்டத்தையும் குறைக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில்தான் தபால் திணைக்களத்தின் நுவரெலியக் கட்டடத்தை புதிய முதலீடுகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கே தபால் சேவை தொழிற்சங்கங்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றன.
அப்படி என்றால் இத்தொழிற்சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் தொடர்ந்தும் நஷ்டத்தில் இயங்க வேண்டும் என்று விரும்புகிறதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. ஆனால் எந்தவொரு நிறுவனமும் தொடராக நஷ்டத்தில் இயங்குவதை எவரும் விரும்பவே மாட்டார்கள். அதனால் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தையும் இலாபமீட்டும் நிறுவனமாக கட்டியெழுப்புவது இன்றியமையாததாகும்.
அரச நிறுவனமொன்று நஷ்டத்தில் இயங்குகின்றது என்றால் அதன் சுமை மக்கள் மீதே விழும். அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டிய நிலைமை மக்களுக்குத்தான் ஏற்படும். அதனால் அரச நிறுவனங்கள் இலாபமீட்டுபவையாக இல்லாவிட்டாலும் நஷ்டம் ஏற்படாத வகையில் இயங்கும் நிறுவனங்களாக கட்டியெழுப்பப்படுவது அவசியம். அதுவே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.
இருந்த போதிலும் இவை எதனையும் கருத்தில் கொள்ளாத தபால் சேவைத் தொழிற்சங்கங்கள் 48 மணித்தியாலய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தன.
அதனால் தபால் மாஅதிபர் எம்.ஆர்.ஜி. சத்குமார, தபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறைகள் அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு இரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பையும் மீறி தபால் சேவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் தபால் சேவை நேற்று பிற்பகல் முதல் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் விஷேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரகடனம் நடைமுறையில் இருக்கும் போது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவும் முடியாது. விடுமுறையில் இருக்கவும் முடியாது. இப்பிரகடன ஒழுங்குவிதிகளை மீறிச் செயற்படுவது சட்டப்படி குற்றமாகும்.
ஆகவே தபால் சேவை முகம் கொடுத்துவரும் நஷ்ட நிலையைக் குறைத்து கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அப்போதுதான் தபால் சேவை நஷ்டத்தில் இயங்காத நிலையை அடையும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.