இந்தியாவின் சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தினங்களில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்திலும் நவம்பர் 7- ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3- ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் 12 மாவட்டங்கள், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளன. இந்தப் பகுதியில் மொத்தம் 2900 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 650 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் விடுதலைக்குப் பின்னர் பழங்குடி மக்கள் முதன் முறையாக வாக்களிக்கும் வகையில் 126 கிராமங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகள் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹெலிெகாப்டரில் கொண்டு செல்லப்பட்டன.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 765 வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு கண்காணிக்கப்படுகிறது.
நாளை வாக்குப் பதிவு நடைபெறும் சத்தீஸ்கர், மிசோரமில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. மேலும் நேற்று மாலைக்குப் பிறகு நவம்பர் 30 ஆம் திகதி வரை எந்த கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியிடக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள், சட்டசபைத் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தனர்.
தற்போது நடைபெறும் தேர்தல் போலியானது என்றும் மக்கள் யுத்தம் மூலமே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதால் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகள் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் மாவோயிஸ்டுகளால் பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கடந்த சில நாட்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதலையும் நேற்று நடத்தினர். இதனைத் தொடர்ந்து முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் சத்தீஸ்கர் தொகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.