மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதல் வாரம் ஆரம்பிக்கப்படுமென, அப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு அடங்கலாக தகவல் தொழில்நுட்பம், விவசாய தொழில்நுட்பம், சுற்றுலா விருந்தோம்பல் உள்ளிட்ட கற்கை நெறிகள் இங்கு முதலில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில் எஸ்.எல்.ரி.சி பல்கலைக்கழகத்தின் ஊடாக இன, மத பேதங்களுக்கு அப்பால் எல்லா மாணவர்களுக்கும் சிறந்த உயர்கல்வியை பெற்றுக்கொடுப்பதே இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தி பராமரிக்கும் நிலையங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்ட மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் (பற்றிகலோ கெம்பஸ்) சாவிகளை பொறுப்பேற்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலே ஹிஸ்புல்லா இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வைபவத்தின் நிமித்தம் பலக்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் செந்தில் தொண்டமான் பல்கலைக்கழகத்தின் வசதிகளை பார்வையிடும் வகையில் கள விஜயத்தையும் மேற்கொண்டார்.
இங்கு பேசிய அவர்: இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பெறும் மாணவர்களுக்கு முதலிரு வருடங்கள் பாடத்திட்ட கற்கையும் பின்னரான இரண்டு வருடங்களில் துறைசார் செய்முறைப் பயிற்சிகளும் அளிக்கப்படும். இதனூடாக இப்பல்லைக்கழகத்தில் கல்வி பெற்று வெளியேறும் எந்த மாணவரும் தொழிலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றார். இவ்வைபத்தில் எஸ்.எல். ரி. சி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பற்றிகோலா கெம்பஸ் நிறுவனத்தின் துணைவேந்தர், இந்நிறுவனததின் தலைவர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், மட்டடக்களப்பு மாவட்டச் செயலாளர், வாழைச்சேனை கடதாசி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தகுதிகாண் அதிகாரி மங்கள செனரத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், ஜனாதிபதி செயலக உயரதிகாரிகள், பிரதேச பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஷேட பிரதிநிதியாகக் கலந்து கொண்டு இப்பல்கலைக்கழக ஸ்தாபகர் ஹிஸ்புல்லாஹ்விடம் பல்கலைக்கழகத்தின் சாவிகளை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
ரிதிதென்னவிருந்து மர்லின் மரிக்கார்