– உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் முடிவு
இன்று (04) நள்ளிரவு முதல் ஒரு சில உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, தேநீர் கோப்பை ஒன்றின் விலை ரூ. 5 இனாலும், பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை ரூ. 10 இனாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 80 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பால் மா 400 கிராம் ரூ . 1,080 ஆக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சோற்றுப் பொதி, கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை ரூ. 20 இனால் அதிகரிக்க தீர்மானித்தள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரிசி, கோழி இறைச்சி, மரக்கறிகள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி தற்போது மின்சாரம், நீர்க் கட்டணங்கள் உச்ச அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சமையல் எரிவாயு விலையேற்றமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இவ்வாறு விலைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.