Friday, May 3, 2024
Home » வருடம்தோறும் நவம்பர் 1ஆம் திகதி கொண்டாடப்படும் கேரளா தினம்

வருடம்தோறும் நவம்பர் 1ஆம் திகதி கொண்டாடப்படும் கேரளா தினம்

- வனப்பும் வளங்களும் நிறைந்த 'கடவுளின் தேசம்'

by Rizwan Segu Mohideen
November 2, 2023 9:41 am 0 comment

இந்தியாவின் கேரள மாநிலமானது மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகளாலும் அரபிக் கடலாலும் தெற்கில் இந்து சமுத்திரத்தாலும் சூழப்பட்ட அழகிய இடமாகும். இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலம் கலாசாரமும், பாரம்பரியங்களும் கொண்டது, தாவரங்கள் நிரம்பியது. 100 வீதம் எழுத்தறிவு பெற்ற முதல் இந்திய மாநிலமாக விளங்குவதுடன், இந்தியாவில் அதிக ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும் இடமாகவும் உள்ளது.

சுதந்திர இந்தியாவில் கேரள மாநிலமானது 1956 ஆம் ஆண்டில் மூன்று சுயாதீன மாகாணங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்திலுள்ள மக்கள் தாங்கள் பேசும் மலையாள மொழியின் அடிப்படையில் ஒன்றுபட்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதியை ‘கேரளா தினம்’ அல்லது ‘கேரளா பிறவி’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், புராணங்களிலும் கற்பனைக் கதைகளிலும் அதன் உருவாக்கம் தொடர்பான பல கதைகள் உள்ளன. விஷ்ணு பகவானின் ஒரு அவதாரமான பரசுராமர் தனது கோடரியை இந்து சமுத்திரத்தில் வீசி இந்த நிலத்தை வெளியே மீட்டெடுத்ததாகவும், பின்னர் வாசுகி பாம்பு புனித ஆவியால் ஆசீர்வதித்து ஒரு வளமான பசுமையான நிலப்பரப்பை உருவாக்கியதாகவும், அதனால்தான் இது இன்றுவரை ஏராளமான வாசனைத் திரவியங்கள், தென்னை மரங்கள், அரிசி மற்றும் இறப்பர் விளையும் நிலமாக விளங்குகின்றது என்றும் கூறப்படுகின்றது.

கேரளாவும் இலங்கையும் பல நூற்றாண்டுகளாக ஆழமான மற்றும் வளமான வரலாற்று மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை உணவில் உள்ள ஒற்றுமைகளில் பிரதிபலிக்கின்றன. அப்பமும் பிட்டும் கேரளாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள உணவுகளாகும். அல்லது இந்த உணவுகள் இலங்கையில் இருந்து கேரளாவுக்குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. அ

கேரளாவின் தற்காப்புக் கலையான களரிபயிற்று, இலங்கையின் அங்கம்பொரவைப் போலவே உள்ளது. கேரளாவில் மே மாதத்தில் நடக்கும் புகழ்பெற்ற திருச்சூர்புரம், இலங்கையில் நடைபெறும் பெரஹெராவைப் போன்ற ஒரு திருவிழாவாகும். அங்கு இசை மற்றும் தீப்பொறிகளுடன் யானைகள் வடக்குநாதன் கோயிலில் பெரும் ஊர்வலத்தை நடத்துகின்றன. கதகளி, மோகினியாட்டம் ஆகியவை நன்கு அறியப்பட்ட நடன வடிவங்களாகும். அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையின் போது நடத்தப்படும் பாம்புப் படகுப் போட்டிகள் இந்த மாநிலத்தின் தனித்துவமான அம்சமாக விளங்குகின்றன.

இலங்கையின் கேரள சமாஜம் என்பது 1959 ஆம் ஆண்டு இலங்கையில் அமைக்கப்பட்ட ஒரு சங்கமாகும். இது இலங்கையில் வாழும் கேரள மக்கள் சந்தித்துக் கொள்வதற்காகவும், தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்காகவும், பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காகவும் அமைக்கப்பட்ட ஒரு களமாகும். அதன் மிகப்பெரிய கலாசார நிகழ்வாக ஓணம் பண்டிகை விளங்குகின்றது.

கேரள சமாஜம் பல சமூகநலத் திட்டங்களின் ஊடாகப் பங்களிப்பதன் மூலம் உள்ளூர் இலங்கை சமூகத்தில் அர்த்தமுள்ள வகையில் செயற்பட்டு வருவதுடன் அது முற்றிலும் அரசியல் சார்பற்ற சங்கமாகவே இருந்து வருகின்றது. அதன் அங்கத்தவர்கள் இலங்கையில் வணிகம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். மருத்துவர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் என இந்த நாட்டின் ஆரோக்கியத்துக்கும் செழிப்புக்கும் முன்னணியில் நின்று பங்களிப்புச் செய்கின்றனர்.

பிரவீண்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT