இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கும், ஹெலிகொப்டர் தாங்கி கப்பல்களின் நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகளுக்காக இந்தியக் கடற்படையின் அதி நவீன இலகு ரக ஹெலிகொப்டர் இன்ற (19) கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளது.
இப்பயிற்சிகளின் மூலமாக இலங்கை விமானப்படை விமானிகள் அதி நவீன இலகு ரக ஹெலிகொப்டர்களை கையாளும் வாய்ப்புகளுடன் துணை விமானி அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும், இலங்கை கடற்படைக் கப்பல்களில் தரையிறங்கும் பயிற்சிகளை முன்னெடுப்பதற்கும் இந்த பயிற்சி அணியினர் திட்டமிட்டுள்ளனர்.
அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அயல்நாடுகளின் திறன்விருத்தி செயற்பாட்டுத்திட்டத்தின் ஓரங்கமாக இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஈடுபாட்டின் மூலமாக இருதரப்பினரிடயிலுமான இயங்குதிறன் மேலும் வலுவடையும் அதேநேரம் கடல் மார்க்கமான செயற்பாடுகளில் சுமூகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வழிவகுக்கப்படுகின்றது.
மிகவும் முக்கியமான பயிற்சிகளாக கருதப்படும் இலங்கை கடற்படையினருக்கான கப்பலில் விமானங்களை தரையிறக்குதல் மற்றும் இலங்கை விமானப் படையினருக்கான துணை விமானி அனுபவங்கள் ஆகிய பயிற்சிகளை வழங்குவதற்காக 2022 மார்ச் 23-31 முதல் இலங்கையில் அதிநவீன இலகு ரக ஹெலிகொப்டர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்குமிடையிலான புராதன நட்புறவின் ஊடாக எட்டப்பட்ட நெருக்கமான உறவுகளுக்கு இரு நாடுகளினதும் ஆயுதப் படைகள் இடையிலான உயர் மட்ட ஒன்றிணைவு மற்றும் புரிந்துணர்வு மேலும் வலுச்சேர்க்கின்றது.