Saturday, May 4, 2024
Home » அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஏற்பாட்டில் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2023

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஏற்பாட்டில் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2023

வை.எம்.எம்.ஏ. ஏறாவூர் அணி சாம்பியன்

by damith
October 10, 2023 10:52 am 0 comment

திருகோணமலை மாவட்ட வை.எம்.எம்.ஏ. கிளைகள் மற்றும் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவை இணைந்து நடத்திய கலாநிதி ஏ.எம். ஏ. அஸீஸ் ஞாபகார்த்த கால்பந்தாட்ட வெற்றிக் கிண்ணப் போட்டி அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தலைமையில் திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.

ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் திருகோணமலை மாவட்டப் பணிப்பாளர் எம். எம். முக்தாரின் வழிகாட்டலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக சமூக சேவையாளர் எம். டி. எம். பாரிஸ் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தேசிய தலைவர் சஹீட் எம். றிஸ்மி. பேரவையின் செயலாளர் ஆசிப் சுக்ரி, பேரவையின் உபதலைவர்களான யூ. எம். பாசீல், எம்.ஐ. உதுமாலெப்பை, பேரவையின் எம். கே. எம். லுக்மான், இஸ்மத் ரிப்தி, ஏ. எல். எம். பாரூக், நாசிர் ஏ. காமில், இஹ்திசான் ஹுஸைன்டீன், எம். எஸ்.எம். காதர், எஸ். எம். நாஸிம், திருகோணமலை கால்பந்தாட்டக் குழுவின் தலைவர் செயலாளர் உட்பட பேரவையின் மாவட்டப் பணிப்பாளர்கள் பதவி வழி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது விளையாட்டுக்காக தங்களை தியாகம் செய்த மூத்த விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். நடுவர் எம். எம். அமீர், ஜே. எம். நியாஸ், முஹம்மது இப்றாஹீம் பாரூக், எம். என்.எம் நாஜீத், பாலமுருகன், எம். எம். ரசூல், எம். எச். எம். பாரிஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் எம்.எம். அமீர், வை. பியாழ், முஹமட் முப்ழி ஸ்டீபன், ரிஸ்வான், ரிப்தி ஆகியோர்கள் நடுவர்களாக கலந்து கொண்டனர்

இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுதலுக்காக நாடளாவிய ரீதியில் 21 அணிகள் விண்ணப்பித்திருந்தன. அதில் 15 அணிகள் தெரிவு செய்யப்பட்டு பலப்பரீட்சையில் ஈடுபட்டன. அந்தவகையில் இறுதிக் கட்டப் போட்டிக்காக தொட்டவத்தை அணியை எதிர்த்து விளையாடிய பம்மன்ன அணி தெரிவு செய்யப்பட்டது. புத்தளத்தை எதிர்த்தாடிய ஏறாவூர் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.

இந்த இரு அணிகளுக்கிடையிலான போட்டி மாலை 4.00 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பம்மன்ன அணியினர் போட்டி ஆரம்பித்து 5 நிமிடத்தில் தமது முதலாவது கோலினைப் பெற்று அணியின் பலத்தை அதிகரித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஏறாவூர் அணியினர் இடைவேளை ஆரம்பிக்கப்பட்டு 7 நிமிடத்தில் கோலைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து ஏறாவூர் அணி மற்றுமொரு கோலைப்பெற்று தம் அணியின் பலத்தை உறுதியாக தக்க வைத்துக் கொண்டது. இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் ஏறாவூர் அணி வெற்றிபெற்று கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

திருகோணமலை மாவட்ட வை.எம்.எம்.ஏ. கிளைகள் மற்றும் பேரவை இணைந்து தேசிய ரீதியில் வை.எம்.எம்.ஏ. கிளைகள் கலந்து கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் வை.எம்.எம்.ஏ. புத்தளம் அணி மூன்றாம் இடம்பெற்று தெரிவு செய்யப்பட்டது.

ஏறாவூர் வை.எம். எம். ஏ அணியானது முதல்போட்டியில் திருகோணமலை ஜமாலியா அணியை 2-0 என்ற கோல் கணக்கிலும் காலிறுதிப்போட்டியில் திருகோணமலை நகர் அணியினை 3-0 என்ற கோல் கணக்கிலும் அரையிறுதிப்போட்டியில் புத்தளம் அணியினை 2-0 என்ற கோல் கணக்கிலும் இறுதிப்போட்டியில் குருநாகல் பம்மன்ன அணியினை 2-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

சம்பியன் அணிக்கு கிண்ணமும் ஒரு இலட்சம் பணப்பரிசும், இரண்டாமிடம் கிண்ணத்துடன் 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும் மூன்றாவது இடத்திற்கு கிண்ணத்துடன் 25 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த விளையாட்டு வீரராக எம். முன்சீப் தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு ரூபா 5000 பணப்பரிசு வழங்கப்பட்டது. சிறந்த கோல் காப்பாளர் பரிசு எம். என். எம். முர்ஷிதுக்கு வழங்கப்பட்டது.

* இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அகில இலங்கை வை. எம். எம். பேரவையின் தேசியத் தலைவர் இஹ்திசான் ஏ. ஹமீட் உரையாற்றும் போது; இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமானது எமது மாவட்டத்திலுள்ள இளைஞர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் எமது இளைஞர் கழகத்திலுள்ள இளைஞர்களை தேசிய ரீதியில் விளையாட்டுத் துறையில் பிரகாசிக்கச் செய்யவும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கும் முகமாக இந்த விளையாட்டுப் போட்டி வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் ஏற்பட்ட கொரோனாவினால் எமது நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் போதைவஸ்துப் பாவனைக்கு அடிமையாகி தமது எதிர்காலத்தை இழந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அக்காலத்தில் போதைவஸ்துப் பாவனை குறைந்தளவில் இருந்தமைக்கான முக்கிய காரணம் விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர் அதிகளவு ஈடுபட்டு வந்தார்கள். அந்த ஈடுபாடு தற்பொழுது குறைவடைந்து இருப்பதனால் அவர்கள் போதைவஸ்துப் பாவனைகளிலும் ஏனைய மோசமான காரியங்களிலும் ஈடுபட்டு தங்களுடைய வாழ்வை சீரழித்துக் கொண்டிருப்பதை நாம் எம் கண் முன்னே கண்டு வருகின்றோம்.

எனவேதான், விளையாட்டின் ஊடாக போதையில் இருந்து மீட்போம் என்ற தொனிப் பொருளின் ஊடாக இந்த நிகழ்வை திருகோணமலையில் நடத்துவதற்கு தீர்மானம் எடுத்து இங்கு நடத்த முன்வந்துள்ளோம் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அது மட்டுமன்றி இந்த விளையாட்டின் மூலம் இந்த சமூகத்திற்குப்பறை சாற்றி இருக்கின்றோம். அதன் அடிப்படையில் முதலாவதாக நேர முகாமைத்துவம் பற்றி சொல்லிக் கொடுத்து இருக்கின்றோம். ஒரு நிகழ்வு நடைபெற்றால் அது எந்தளவு, எந்த வகையிலான முறையிலே நேர முகாமைத்துவத்தைக் கையாள முடியும். அதைக் கையாளுவதன் மூலம் எமக்கு கிடைக்கு வெற்றி என்ன அதன் அழகு என்ன என்பதை நாம் கண்டு கொள்ளலாம்.

எப்பொழுதும் விளையாட்டின் மூலம் சண்டைகள் பிரச்சினைகள் வரும் என்றும் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அவைகளினால் இந்த விளையாட்டு நடத்த முடியாது எனப் பலர் கருத்து தெரிவிப்போர்களும் உண்டு. ஆனால் அந்த விமர்சனம் எவையும் இல்லாமல் இந்நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டுக் கழகங்கள் ஒழுக்கமான ஒரு தலைமைத்துவத்தின் கீழ் சீரான கட்டுப்பாட்டுடன் செயற்படக் கூடிய நல்ல விளையாட்டுக் கழகங்களையும் அதில் விளையாடக் கூடிய நல்ல வீரர்களையும் நாளை நல்ல பிரஜைகளை உருவாக்கக் கூடிய நல்ல வீரர்களையும் இனங்காணக் கூடிய வாய்ப்பு இந்த விளையாட்டின் மூலம் காணக் கூடியதாக இருந்தது. எங்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமை இந்த நிகழ்வின் ஊடாக வெளிக் காட்டியுள்ளோம்.

இந்த விளையாட்டின் போது ஏனைய சமூகத்தைச் சேர்ந்த சமூகப் பிரமுகர்களும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டில் சிங்கள, தமிழ், கிறிஸ்தவ ஆகிய இளைஞர்களும் பங்கு கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இதனை வரலாற்றில் மிக முக்கித்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் பல்லின மக்கள் வாழ்கின்றனர். இந்த செயற்பாடு சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை.

இன்றைய நாள் சிறுவர் தின நாளாக இருந்தமையால் சிறுவர்களையும் கௌரவிக்க வேண்டும் என்பதன் காரணமாக இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் அவர்களுக்கும் ஒரு சிறந்த களத்தையும் அமைத்துக் கொடுத்து அவர்களுடைய செயற் திறனையும் வெளிக்கொணர ஒரு வாய்ப்பாக இந்த விளையாட்டு விழா அமைந்தது என்று குறிப்பிடலாம்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக பல மாவட்டங்களில் இருந்து பலர் விண்ணப்பங்கள் செய்திருந்தார்கள். இதில் தெரிவு செய்யப்பட்ட 15 அணியினர் அவர்களது வீரர்களுடன் வருகை தந்திருந்தார்கள். அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்கள் செய்திருந்தாலும் ஓர் இடத்திற்கு நாங்கள் செல்லும் போது அங்கு ஏற்படும் தடங்கள் சிக்கல்களை இருந்தாலும் அவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு எந்தவொரு சிக்கலுமின்றி மனச் சந்தோசத்துடன் இங்கு விளையாட்டுக் கழகங்கள் நடந்து கொண்டதை நாம் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது.

திருகோணமலை மாவட்டத்தில் மென்மேலும் பல நிகழ்வுகளை நடத்தி இளைஞர்களின ஆளுமை ஆற்றலை வலுப்படுத்த பேரவை எப்பொழுதும் தயாராக இருக்கிறது. இந்த மைதானத்தின் சுற்றுச் சூழல் இரு நாளும் எமது கிளையின் வாலிபர்களினால் சுத்தம் செய்து அழகுபடுத்தப்பட்டிருந்தன. அது மட்டுமல்ல திருகோணமலை இந்துக் கல்லூரி மாணவர்களின் முதலுதவிச் சேவை இடம்பெற்றது.

தமிழ் மாணவர்கள் வந்து இந்தச் சேவையை வழங்கியமைக்கு நாங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்விளையாட்டுப் போட்டிக்கு நிதி உதவிகள், பொருள் உதவிகள், ஆலோசனைகள் என வழங்கிய அனைவருக்கும் நான் விசேடமாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT