இலங்கையில் 4500 கிலோமீற்றர் யானை வேலி காணப்படுகின்றது. இலங்கையில் பல இடங்களில் யானை வேலிகள் போடப்பட்டாலும் அனேகமாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணம் மக்கள் அதனை பராமரிப்பதில்லை. அரசாங்கத்தின் சொத்து, அரசாங்கம் செய்தது, ஆகவே அரசாங்கம்தான் பார்க்கவேண்டும் என நினைத்து சரியாக கவனிப்பதில்லை என வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகனின் உருவாக்கத்தில் இலங்கையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட யானை வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் அ.த.க.பாடசாலையினை சுற்றி அமைக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வனவிலங்கு சம்மந்தமான கலாநிதி பட்டப்படிப்பினை முடித்துக்கொண்ட கலாநிதி விஜயமோகன இலங்கையில் வனவிலங்கு சம்பந்தமான துறையில் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த யானை வேலி அமைப்பு தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் யானை மனித மோதல் என்பது பலகாலமாக இருக்கும் பாரிய பிரச்சினை அரசாங்கத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
யானை புத்தி கூர்மையான விலங்கு அமைக்கப்படும் வேலிகளை இலகுவாக உடைப்பதால் புதுவிதமான வேலியினை அமைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது. வேலியின் அமைப்பினை மாற்றி அமைத்து செய்தால் யானை மனித மோதலை தவிர்க்கலாம் என்ற அமைப்பில் தொங்கு வேலி என்ற வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
2016 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் எல் வடிவ தொங்கு வேலி வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தங்களுக்கும் இதனை அமைத்து தருமாறு கேட்டதற்கு இணங்க அங்கு சென்று அமைத்து கொடுத்தேன்.
இந்தியாவின் அசாம், கர்நாடாக, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் 2000 ஆயிரம் கிலோமீற்றர் வரை தொங்கு வேலியினை அமைத்துள்ளார்கள்.
இந்த தொங்கு வேலியில் மாற்றம் பெற்று ஐ வடிவ தொங்கு வேலியினை நான் புதிதாக வடிவமைத்துள்ளேன். இது முதன் முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னாகண்டல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை விஷேட நிருபர்