தம்புத்தேகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட இராஜாங்கனை, நவசிறிகம பிரதேசத்தில் கத்திக் குத்துக்குள்ளாகிய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இராஜாங்கனை நவசிறிகம பகுதியைச் சேர்ந்த தேவதா பொடிகே ரேணுகா தீபானி பேமதாச எனும் 53 வயதுடைய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று (07) மாலை 3.30 மணியளவில் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பெண்ணின் சிறிய மகனின் வீட்டிலேயே கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை இடம்பெற்ற வீட்டுக்கு பின்னால் அமைந்துள்ள வீட்டில் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் வென்னப்புவ பகுதியில் வசித்து வரும் மகளின் வீட்டுக்கு சென்று நேற்றே (07) வீட்டுக்கு வந்துள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் 15 வருடங்களுக்கு முன்னர் சுகவீனமுற்று இறந்துள்ளதுடன் கொலை செய்த நபருடன் 13 வருடகாலமாக உறவை பேணி வந்துள்ளதாகவும் அவர் திருமணமாகி பிள்ளைகள் இருப்பதாகவும் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
கத்திக் குத்துக்கு உள்ளாகி பலத்த காயத்திற்குள்ளான பெண் இராஜாங்கனை யாய 5 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அந்த நேரத்தில் பெண் உயிரிழந்திருந்தாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்