Home » இதழியல் துறையில் இலங்கையில் முன்னுதாரண புருஷராக போற்றப்படுபவர் எட்மன்ட் ரணசிங்க

இதழியல் துறையில் இலங்கையில் முன்னுதாரண புருஷராக போற்றப்படுபவர் எட்மன்ட் ரணசிங்க

by sachintha
October 3, 2023 6:44 am 0 comment

சிசிர பரணதந்திரி…

ஏழு தசாப்தங்களாக இந்நாட்டின் ஊடகவியல்துறையில் அளப்பரிய பங்காற்றி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று தேசத்தின் முன்னுதாரண புருஷராக கௌரவிக்கப்பட்டுள்ள முன்னாள் மூத்த பத்திரிகை ஆசிரியர் எட்மன்ட் ரணசிங்க பற்றி எழுதப்பட்ட குறிப்பு இது.

வருடம் 1952. ஜனவரி மாதம் தொடங்கி விட்டது. வாழ்க்கையில் முதல் தடவையாக லேக்ஹவுஸ் படிகளில் இளைஞன் ஒருவன் ஏறி வருகின்றான். வயது 21. டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு புதிய பத்திரிகையாளர்களை இணைத்துக் கொள்ளும் நேர்காணலில் கலந்து கொள்ளவே அந்த இளைஞன் வருகிறான்.

அழைப்புக் கடிதத்தை வரவேற்பறையில் காட்டிய பின்னர் லேக் ஹவுஸ் முகாமைத்துவப் பணிப்பாளரின் அறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றான். அறையில் மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் அமர்ந்திருக்கின்றார் எஸ்மன்ட் விக்கிரமசிங்க. அவர் வேறு யாரும் அல்ல, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையார் ஆவார்.

தம் முன்னால் நிற்கும் இளைஞனை அமரச் சொல்கின்றார்.

‘பெயர் என்ன?’

‘நான் எட்மன்ட் விக்ரமரத்ன ரணசிங்க.’

‘ஊர் எங்கே? தொழில் செய்கின்றீரா?’

‘அவிசாவளைக்கு அருகில் பெலன புவாக்பிட்டிய’. ஆம், நான் வக, இரிதாபொல கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆங்கில ஆசிரியர்’

ஆரம்ப அறிமுக வினாக்களுக்குப் பின்னர் விக்ரமசிங்க அவர் வந்த விடயம் தொடர்பாக வினவத் தொடங்கினார்

‘பத்திரிகைத் தொழிலுக்கு ஏன் வர எண்ணினீர்கள்?’

‘நான் நல்ல வாசகன். அதனால் எழுதவும் முடியும் என நினைக்கின்றேன்.’

தன் முன்னால் நிற்கும் அழகான இளைஞனின் பதில் எஸ்மன்டின் மனதைக் கவர்ந்தது. தான் தேடும் இளைஞன் அவன் என அவரது மனம் கூறியது. சிறிது நேரம் உரையாடிய பின்னர், அந்த இளைஞனுக்கு இரண்டாவது நேர்காணலுக்கான அழைப்பு வரும் எனக் கூறி விடைகொடுத்தார்.

ஒரு வாரத்தின் பின்னர் இரண்டாவது நேர்காணலுக்கான அழைப்புக் கடிதத்தை நிறுவனத்திடம் இருந்து எட்மன்ட் ரணசிங்க பெற்றான்.

அவன் அதில் கலந்து கொள்வதற்காக இரண்டாவது தடவையாகவும் லேக் ஹவுஸ் படிகளில் ஏறினான். அவன் இரண்டாவது தடவையாகவும் எஸ்மன்ட் விக்ரமசிங்க முன்னால் தோன்றினான். அன்று நேர்காணல் குழுவில் இன்னொருவரும் இணைந்து இருந்தார். அவர் லேக் ஹவுஸின் ஆலோசகரான எம்.ஏ.த சில்வா. அவர் விக்கிரமசிங்கவின் பல்கலைக்கழக நண்பனும் ஆவார்.

இரண்டாவது நேர்காணல் மிகவும் நட்புபூர்வமாக அமைந்திருந்தது. தனக்கு நிச்சயமாக லேக்ஹவுஸில் வேலை கிடைக்கும் என ரணசிங்கவுக்குத் தோன்றியது.

அதன்படி 1952 மார்ச் 21 ஆம் திகதி அவர் டெய்லி நியூஸ் பத்திரிகையின் துணை ஆசிரியராக பதவியேற்றார். அன்று தொடக்கம் விக்கிரமசிங்க இந்த புதிய புதிய பத்திரிகையாளன் பற்றி அவதானத்துடன் இருந்தார். இந்த இளைஞன் லேக் ஹவுஸின் ஆபரணமாக திகழ்வார் என அவர் ஆரம்பத்தில் உணர்ந்ததால் ஆகும்.

துணை ஆசிரியராக பதவியைத் தொடங்கி விரைவில் பாராளுமன்ற நிருபரானார். அவர் சிங்களம் மற்றும் ஆங்கில மொழியை சரளமாகக் கையாளக் கூடியவர் என்பதால் எல்லாப் பிரிவுகள் பற்றியும் கற்று முன்னேறினார். 70 களின் ஆரம்பத்தில் அவர் தினமின பத்திரிகையின் துணை ஆசிரியர். அதைத் தவிர அதன் செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

1973 ஆம் ஆண்டு லேக் ஹவுஸ் இன் விதியைத் தீர்மானிக்கும் தருணமான ஆண்டாக இருந்தது. ஐக்கிய முன்னணி அரசால் லேக் ஹவுஸை அரசுடைமையாக்க முடிவு செய்யப்பட்டது. அரசாங்கத்தின் அந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எட்மன்ட் ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்குச் சென்றார். அவர் முதுகெலும்பு உள்ள மனிதர் என்பதை அன்றுதான் நாடு கண்டுகொண்டது.

1977 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ந்த பின்னர் மீண்டும் லேக் ஹவுஸின் அழைப்புக்கிணங்க அவர் தினமின பத்திரிகை ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டார். மீண்டும் அவருக்கு லேக்ஹவுஸுக்கு வர விருப்பம் இல்லை என்றாலும பிரபாத் மானவசிங்க உள்ளிட்ட அவரது நண்பர்களின் வற்புறுத்தலை அவரால் மீற முடியவில்லை . தினமின பத்திரிகை புதிய தோற்றத்தில் வாசகர் கையில் கிடைத்த போது அதன் விற்பனையும் மெல்ல மெல்ல அதிகரித்தது. இதேவேளை திடீரென எட்மன்ட் ரணசிங்கவுக்கு சிலுமினவுக்கு மாற்றல் கிடைத்தது. அவரது பெயர் சிலுமின ஆசிரியர் பதவிக்கு எழுதப்பட்டது.

சிலுமினவுக்கு சென்ற அவர் தனது நண்பர்களுடன் இணைந்து அதற்கு பிரகாசத்தை கொண்டு வந்தார். அப்போது பிரபல நாவல் எழுத்தாளரான ஐக்கிய முன்னணி அரசின் முன்னாள் வர்த்தக அமைச்சர் டி.பி. இலங்கரத்தினவின் நாவல் ஒன்றை பத்திரிகையில் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்தார். அதன் காரணமாக நிர்வாகக் குழுவினால் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டாலும், அக்காலப் பகுதியில் சிலுமின பத்திரிகையின் விற்பனை மூன்று இலட்சத்தையும் தாண்டியது. அந்தச் சாதனை இன்னுமே முறியடிக்கப்படவில்லை.

இவ்வாறு காலம் கடந்து சென்ற வேளையில், 1981ஆரம்பத்தில் ஒரு நாள் லேக் ஹவுஸ் நண்பரான நந்தசேன சூரியாரச்சி புதிய செய்தி ஒன்றை அவருக்குத் தெரிவித்தார். அச்செய்தி நாட்டின் பிரபல வர்த்தகரான உபாலி விஜயவர்த்தன பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்காக ரணசிங்கவை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அவ்வேளையில் உபாலி விஜயவர்த்தன கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் ஆவார். அவர் விஜயவர்த்தனவை காரியாலயத்துக்கு சென்று சந்தித்தார்.

தனது சுதந்திரத்தில் தலையிடாவிட்டால் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள சம்மதிப்பதாக அவர் விஜயவர்த்தனவுக்குத் தெரிவித்தார். அந்த சந்திப்பின் பின்னர் லேக் ஹவுஸை சேர்ந்த சில நண்பர்களை அழைத்துக்கொண்டு ‘திவயின’ பத்திரிகையை ஆரம்பிப்பதற்கு சுகததாச விளையாட்டரங்குக்கு அருகிலுள்ள ப்ளூ மண்டல் வீதியில் அமைந்துள்ள காரியாலயத்துக்கு நந்தசேன சூர்யாரச்சி, தயாரத்ன ரணசிங்க, உபாலிதென்னக்கோன், காமினி சுமனசேகர, சுனில் மாதவ பிரேமத்திலக்க, தர்மரத்தின விஜயசுந்தர, விமல் வீரசேகர ஆகியோருடன் சென்றார். ‘தவச’ இலிருந்து மெரில் பெரேராவும் இணைந்து கொண்டார்.

பத்திரிகை ஆசிரியர் எட்மன்ட் ரணசிங்க தலைமையில் ‘திவயின’ ஞாயிறு பத்திரிகை 1981 ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமானது. அவர் கேட்ட சுதந்திரத்தை நிர்வாகிகள் முழுமையாக வழங்கினார்கள். நாட்டில் நடைபெறும் அனைத்தையும் அவ்வாறே சரியாக அறிக்கையிடுவதே ரணசிங்கவின் அபிப்பிராயமாக இருந்தது. அந்தச் செய்தி அரசுக்கு சார்பானதா? சார்பானதில்லையா? என ஒருபோதும் சிந்திக்கவில்லை. அவரது ஒரே நோக்கம் மக்களுக்கு சரியான செய்தியை வழங்குவதாகும்.

இவ்வாறு மெல்ல மெல்ல ‘திவயின’ நாட்டின் பொதுமக்களின் குரலாக ஒலித்தது. அதில் 30 ஆயிரம் வேலை இழந்த ஜூலை வேலைநிறுத்தக்காரர்களும் அடங்குவார்கள்.

1983 அளவில் வடக்கில் பிரபாகரனின் பயங்கரவாதம் தலைதூக்கியது. அதற்குப் பதில் அளிக்க வேண்டியது பயங்கரவாதிகளுக்கு புரியக்கூடிய மொழியில் என்று ரணசிங்க தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இந்நாட்டில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்த மனிதாபிமான யுத்த கருத்து புரட்சியை இந்நாட்டு மக்கள் மனதிற்கு முதலில் வழங்கியவர் எட்மன்ட் ரணசிங்க.

அதற்காக தன்னால் முடிந்த எவ்வேளையிலும் தனது பேனாவை உபயோகித்தார்.

அவ்வேளையில் எதிர்க்கட்சியாக தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியே காணப்பட்டது. 77 ஆம் ஆண்டு தேர்தலில் 14 ஆசனங்களை பெற்றுக் கொண்ட அக்கட்சி எதிர்க்கட்சியாக தெரிவானது. அதேவேளை ஐக்கிய முன்னணி அரசின் முதுகெலும்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்திருந்தன.

இந்நிலைமையில் நாட்டின் பெரும்பான்மையான சிங்கள மக்களின் மாற்றுக் கருத்துக்கள், எதிரான கொள்கைகள் வெளிவந்தது ‘திவயின’ ஊடாகவே.

அது அன்றைய அரசாங்கத்தின் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை என்பதால் சரியான அதிகாரியை திவயின பத்திரிகைக்கு நியமித்தார்கள். அவர் கலாநிதி சரத் அமுனுகம.

இந்த அனைத்து அழுத்தங்களையும் தனது தலை மேல் கொண்டு ‘திவயின’ ஆசிரியர் குழுவை அமைத்து சுதந்திரமாக நடவடிக்கையில் ஈடுபட அவர் இடம் ஏற்படுத்திக் கொடுத்தார்.

எண்பதுகளின் மத்தியில் தடை செய்யப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் நடவடிக்கைகள் காரணமாக நாடு பூராகவும் கலவர நிலைமை தோன்றியது. அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் நாட்டில் நடைபெறும் அனைத்தையும் சரியாக அறிக்கையிடவும் அவர் நடவடிக்கை எடுத்தார். அது தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளையும் அவ்வாறே திவயின ஊடாக அறிக்கையிட்டார்.

இதற்குப் பின்னால் பல கண்ணுக்குத் தெரியாத சக்திகள் செயல்பட தொடங்கிய காலமது. ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை திவயின பத்திரிகையின் துணை ஆசிரியரான தயாசேன குணசிங்க கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். ‘கினிகத் தக்குனட கியெமி’ (நெருப்பெரியும் தெற்கிற்கு சென்றேன்) என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை திவயினவுக்கு கட்டுரையொன்று எழுதிய தற்போதைய சிலுமின ஆசிரியர் தர்மன் விக்கிரமரத்ன வீட்டிற்கு செல்ல நேரிட்டது.

1988 நவம்பர் 30ஆம் திகதி ரணசிங்கவின் வீட்டில் நடந்த குண்டுத் தாக்குதலில் அவர் உயிர் பிழைத்தார் .அவர் இத்தனை அழுத்தங்களையும் சகித்துக் கொண்டு ஒரு மலைபோல் அசையாமல் இருந்தார். அவர் 10 நிமிடங்களுக்கு முன்னர் வீட்டிற்கு சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அதனால் அவர் கலங்கவில்லை. அடுத்த நாள் வழக்கம் போல் மீண்டும் திவயின காரியாலயத்திற்குச் சென்றார். எந்த ஒரு அச்சுறுத்தலாலும் தன்னைப் பயமுறுத்த முடியாது என அவர் கூறினார். வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் பற்றிய வாக்குமூலத்தை பொலிஸார் திவயின காரியாலயத்துக்குச் சென்றே பெற்றார்கள். அது தன் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை விட தேசிய பொறுப்பே முக்கியமானது என அவர் புரிந்து கொண்டதனாலாகும்.

ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தின் பின்னர் இந்நாட்டில் ஆட்சிக்கு ஜனாதிபதி பிரேமதாச வந்தார். நாட்டில் நடைபெறும் சில சம்பவங்களை அவ்வாறே செய்தியாக வெளியிடுவதை ஜனாதிபதி பிரேமதாச தமக்கு எதிரானது என எண்ணினார். அதனால் தன்னுடைய பழைய நண்பரான ரணசிங்கவின் தைரியத்தை பொறுக்கவில்லை. அதன் பலனாக 1991 கடுவெல, கொரதோட்டவில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான காணி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி பிரேமதாச பகிரங்கமாகவே அவருக்கு ஏசினார். ஒரு தடவை “எட்மன்ட் நீ தெரிந்து கொள்” என கர்ச்சித்தார். அதே மேடையில் அவர் ‘விஜய’ பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் விஜயவர்த்தன மீதும் வார்த்தைப் பிரயோகம் செய்தார்.

இவை எதுவும் எட்மன்ட் ரணசிங்கவை பின்னடையச் செய்யவில்லை. எதுவும் முடியாத போது அன்றைய அரசின் பிரபலமான அமைச்சர் சிறிசேன குரேயை உபாலி பத்திரிகை நிறுவனத்தின் தலைவியான லக்மினி ஆர். விஜயவர்த்தனவை சந்திக்க ஜனாதிபதியின் விசேட செய்தியுடன் அனுப்பினார். எட்மன்டை பதவி நீக்கினால் குறிப்பிட்ட வங்கிக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான கடனை அடைக்கத் தயார்” என்பதே அந்தச் செய்தியாகும்.

“எட்மன் எனக்கு அதைவிட பெறுமதிமிக்கவர். அதனால் அந்தக் கடனை நான் எவ்வாறாவது அடைக்கிறேன்”.

உபாலி பத்திரிகை நிறுவனத்தின் தலைவி அளித்த பதிலால் எதிர்பார்ப்பு வீணாகிய அமைச்சர் குரே திரும்பிச் சென்றார்

அக்காலத்தில்’திவயின’ ஒரு பள்ளிக்கூடம். அதன் தலைமை ஆசிரியர் எட்மன்ட். அன்று அவரின் நிழலில் ஒரே ஆசிரிய பீடத்தில் ஒன்றாகப் பணிபுரிந்த ஒரு டசினுக்கும் மேற்பட்டோர் ஒரே காலத்தில் இந்நாட்டின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தார்கள். அமைச்சின் செயலாளர்கள், தலைவர்கள் போன்று பதில் துணைவேந்தர்களாகவும் திவயின ஆசிரியர் பீடத்தை சேர்ந்தவர்கள் பதவி வகித்தார்கள்.

அவருக்குப் பின்னர் திவயின பத்திரிகை ஆசிரியர் பதவி உபாலி தென்னுக்கோனுக்குக் கிடைத்தது. பின்னர் அவர் ‘ரிவிர’ஆரம்பப் பத்திரிகை ஆசிரியரானர். அதன்பின்னர் மெரில் பெரேரா, காமினி சுமனசேகர, ஜயந்தசந்திரசிறி, நாரத நிசங்க மற்றும் அனுர சொலமன்ஸ் ஆகியோர் திவயின பத்திரிகையின் ஆசிரியர் பதவியை வகித்தார்கள். கயிரிக்க பேருசிங்க மற்றும் அனுரசிறிவர்தன பின்னர் சுயாதீன ரூபாவாஹினியின் தலைவரானார்கள்.

அதன் பின்னர் அனுர கைத்தொழில் அமைச்சின் செயலாளரானதோடு கயிரிக்க ரிவிர மீடியா கார்ப்பரேஷன் தலைமை நிறைவேற்று அதிகாரியானார். எளிமையான த மெல் ஞாயிறு லக்பிம ஆசிரியர் பதவியை வகித்ததோடு, கித்சிறி விமல் சாந்த மற்றும் ஜட்டில வெல்லபட தினசரி லக்பிம ஆசிரியரானார்கள்.

கருணாதாச சூரியாரச்சி சிலுமின ஆசிரியராக இருந்த வேளையில் தினமின ஆசிரியராக மஹிந்த அபேசுந்தர பதவி வகித்தார் . சுனில் மாதவ பிரேமத்திலக்க லக்மின மற்றும் லக்திவ ஆசிரியர்களானார்கள். ஷான் விஜேதுங்க சுவர்ணவாகினியின் அரசியல் பிரிவு தலைவராக இருந்து பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் தொலைத்தொடர்பு பிரிவு முதன்மைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போதைய சிலுமின பத்திரிகை ஆசிரியர் தர்மன் விக்கிரமரத்ன. தினமின பத்திரிகை ஆசிரியர் மனோஜ் அபேதீர.

அதற்கு முன்னர் லக்ஷ்மன் பியசேன மற்றும் சாமிந்த வாரியகொட சிலுமின பத்திரிகை ஆசிரியர் பதவியை வகித்தார்கள். தற்போது சாமிந்த ஞாயிறு மற்றும் தினசரி மவ்பிம ஆசிரியராவார். சிரச டி.வி மற்றும் எம். டி.வி பணிப்பாளராக அசோக டயஸ், தற்போதைய செலசினே தலைவர் ஹரித் குணவர்தன, சிறிது காலம் பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளரான தீப்தி அதிகாரி (தற்போது ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர்) போன்று இவர்கள் அனைவரையும் விட மாறுபட்ட பயணத்தை மேற்கொண்டு திவயின ஞாயிறு பத்திரிகையின் துணை ஆசிரியரான திஸ்ஸ வீரசேகர ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தரானார்.

இந்நாட்டின் தேசிய ஊடக வலையமைப்பை வழிநடத்தும் வரம்பெற்ற அனைவரும் எட்மன்ட் ரணசிங்கவின் நிழலில் பத்திரிகை கலையை பயின்றவர்கள் ஆவார்கள். அதனால் அவரை இந்நாட்டின் பத்திரிகை கலையின் முன்னுதாரண புருஷர் எனக் கூறுவதை விட வேறு எப்பெயரால் அழைக்க முடியும்?

இக்கட்டுரை வாழ்க்கைப் பயணத்தில் 93 ஆவது மைல் கல்லை கடக்கும் எட்மன்ட் ரணசிங்கவுக்கு சமர்ப்பணம்.

தமிழில்: வீ.ஆர்.வயலட்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT