Monday, November 4, 2024
Home » வரலாற்றுப் பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதையம்மன் வனவாசம் இன்று

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதையம்மன் வனவாசம் இன்று

by sachintha
September 27, 2023 9:11 am 0 comment

இலங்கையில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 12 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

மகாபாரத இதிகாசக் கதையினை நினைவுகூரும் வகையில் 18 தினங்கள் நடைபெறும் உற்சவத்தில் இன்று 27 ஆம் திகதி புதன்கிழமை பாண்டவர்கள், திரெளபதை சகிதம் வனவாசம் செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வி அடைந்து நாடு, நகர் இழந்து 12 ஆண்டுகள் வனவாசம், ஒரு ஆண்டு அஞ்ஞாதவாசம் சென்றார்கள். இதனை உணர்த்தும் வகையில் பாண்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்தில் பாண்டவர்கள் வனவாசம் செல்லும் நிகழ்வு நடித்துக் காண்பிக்கப்படுகின்றது.

இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் காவடிகள், கற்பூரச்சட்டிகள் எடுத்தும், கால்நடையாகவும் பஞ்சபாண்டவர்களுடன் பாண்டிருப்பில் இருந்து புறப்பட்டு நற்பட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய கிராமங்களுடாகச் சென்று ‘துரியோதனன் நாடு’ என அழைக்கப்படும் மேட்டுவட்டை வயல் சார்ந்த இடத்தினூடாக அஞ்ஞாதவாசம் மேற்கொண்டு மீண்டும் திரெளபதை அம்மன் ஆலயத்தை வந்தடைவர்.

இதனையடுத்து 28 ஆம் திகதி அருச்சுனன் பாசுபதம் பெறுவதற்காக தவநிலை செல்லும் காட்சி நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன் போது அருச்சுனன் இடர்கொள்ளும் துன்பங்கள் காட்சிகளாக நடித்துக் காண்பிக்கப்படும்.

29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் தீப்பள்ளய உற்சவத்தின் சிகரம் எனப் போற்றப்படும் தீமிதிப்பு வைபவம் நடைபெறவுள்ளது. இதன் போது பாண்டவர்கள், திரெளபதை, கிருஷ்ணர் தேவாதிகள் சகிதம் கடலில் குளித்து, உடல் முழுதும் மஞ்சள்பூசி தீயில் இறங்கும் கண்கொள்ளாக்காட்சி இடம்பெறவுள்ளது. மறுநாள் 30 ஆம் திகதி தருமருக்கு முடி சூட்டி, தீக்குளிக்கு பால்வார்க்கும் சடங்குடன் இரவு 7 மணிக்கு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் திரெளபதை அம்மன், கிருஷ்ணர் முத்துச் சப்புறத்தில் எழுந்தருளி ஊர்வலம் செல்லும் நிகழ்வுடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.

பாண்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலய உற்சவத்தின் இறுதி மூன்று நாட்களும் விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

துஜியந்தன்…

(பாண்டிருப்பு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x