Sunday, May 12, 2024
Home » பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் தலா 10 பேர்ச் காணிகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் தலா 10 பேர்ச் காணிகள்

அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்க ரமேஷ் பத்திரண தீர்மானம்

by gayan
September 23, 2023 5:36 am 0 comment

பெருந்தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச் படி காணி வழங்குவது தொடர்பாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியன கூட்டாக அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறையிலுள்ள சுமார் 250,000 தொழிலாளர் குடும்பங்களில், ஏற்கெனவே சுமார் 60,000 குடும்பங்களுக்கு காணி உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய எஞ்சிய குடும்பங்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க 5,000 ஹெக்டேயர் காணி தேவைப்படுவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

அரசுக்கு சொந்தமான பெருந்தோட்டங்களில் காணப்படும் காணிகளில் விசேட செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், ஒரு சில இடங்களில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணித்தார்.

தனியார் பெருந்தோட்ட கம்பனிகளில் பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகளை பொதுச் செற்பாடுகளுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைபை விரைவுபடுத்துவதற்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் கலந்துரையாட வேண்டுமெனவும், அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமையால், அவற்றின் கீழ் பயன்படுத்தப்படாதுள்ள பல ஏக்கர் காணிகளை பொதுச் செற்பாடுகளுக்கு கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சட்டவரைபை தயாரிக்கும் பொறுப்பு சட்டவரைஞர் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, அரவிந்தகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, மஹிந்தானந்த அளுத்கமகே, வீ.இராதாகிருஷ்ணன், சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹினி கவிரத்ன, கயாஷான் நவநந்த, எம்.ராமேஸ்வரன், குணதிலக ராஜபக்ஷ, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, உதயகாந்த குணதிலக்க, சம்பத் அத்துகோரல, பிரேம்நாத் சி.தொலவத்த, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT