Monday, May 20, 2024
Home » பிள்ளைகளின் கனவுகளுக்கு பெற்றோர்களின் முழுமையான பங்களிப்பு அவசியம்

பிள்ளைகளின் கனவுகளுக்கு பெற்றோர்களின் முழுமையான பங்களிப்பு அவசியம்

by sachintha
September 20, 2023 4:18 pm 0 comment

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி

இன்றைய செயற்கை நுண்ணறிவு கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு ஆங்கில மொழிக் கல்வியும், ஒழுக்கப் பண்பு முறையும் ஆரோக்கியமானதாக அமையும் என்று அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார்.

எமரல்ட் மகளிர் கல்லூரியின் 60 நாள் ஆங்கில கற்கைநெறி மற்றும் குடும்ப நலக் கல்வியினை நிறைவு செய்த மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மடவளை பஸார் சிரிமல் வத்த நுதா ரிஜன்சி மண்டபத்தில் எமரல்ட் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ. எம். எம். சுல்பிகார் அலி தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அல்-ஹாபிழ் ஏ. எல். அலியார் (மதனி), கௌரவ விருந்தினராக சர்வதேச ஹுதா பாடசாலையின் அதிபர் எ. எச். எம். அஸ்வர் ஆகிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாணவிகளின் வில்லுப்பாட்டு, ஆங்கில மொழித் திறனை வெளிப்படுத்தும் கலந்துரையாடல்கள், சமூக ஊடுருவல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.

இப்பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவிகளின் பெற்றோர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்திருந்தார்கள்

உலக தொழில் நுட்ப வளர்ச்சியோடு பல்வேறுபட்ட சவால்களை நாங்கள் எதிர்கொண்டு வருகின்றோம். குறிப்பாக இன்னும் பத்து வருடத்திலே நீங்கள் ஒவ்வொருவரும் புதிய புதிய இலக்குகளை அடையப் போகின்றீர்கள். இந்த எமரல்ட் கல்வி நிறுவனத்தின் வளவாளர்கள் வழங்கிய வழிகாட்டலின் மூலம் நல்ல பயனடைந்துள்ளீர்கள் என்பதை இந்த நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆங்கிலம் , குடும்ப நலம் மற்றும் ஆன்மிகம் நல்லொழுக்கம் சார்ந்த எல்லா வகையிலான விடயங்களையும் நீங்கள் சிறந்த முறையில் வெளிப்படுத்தினீர்கள் என்பதை இங்கு மேடையேற்றப்பட்ட உங்களுடைய திறன்மிக்க கலை, கலாசார நிகழ்வின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. குறிப்பாக இங்கு மேடையேற்றப்பட்ட எல்லா நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக இருந்தன.

இன்றைய இந்த தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில் இந்த உலகம் எந்தளவு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்ற அறிவினையும் பெற்று இருக்கின்றீர்கள்.

இன்று நாங்கள் பல்வேறு பட்ட தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துகின்றோம்.இந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் இன்னும் ஒரு 20 வருடத்தில் கைத் தொலைபேசி இல்லாமமே உரையாடலாம். அப்பொழுது இன்று உங்களோடு இருப்பவர்களுக்கு மேலாக நீங்கள் வளர்ந்து விடுவீர்கள். அதற்காக நீங்கள் தொடர்ச்சியாக உங்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இன்றைய எமது இளைய தலைமுறையினர் நாளைய தலைவர்கள். இது இறைவனின் அருட்கொடை.

இந்த இளம் தலைமுறையினர்களை உருவாக்குவதிலே பெற்றோர்களின் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக வாய்ப்புள்ள துறைகளையே நாம் தெரிவு செய்து கொள்ள வேண்டும். தம் பிள்ளைகள் தெரிவு செய்யும் துறையில் பெற்றோர்களின் வழிநடத்தல் அளப்பரியது. அந்த வகையில் எனது பிள்ளையை வழிநடத்துவதில் சரியான முறையில் நான் ஈடுபட்டுள்ளேன் என்ற மனத்திருப்தி எனக்கு இருக்கிறது. அதே போன்று ஒவ்வொரு பெற்றோர்களும் மனத் துணிச்சலுடன் செயற்பட வேண்டும். அதுவே நாம் சமூகத்திற்கு ஆற்றுகின்ற பெரிய சேவை. எமது பிள்ளைகள் மூலம் நாம் மட்டும் நன்மை அடையப் போவதில்லை. எமது சமூகம் நன்மை அடையும். அதேபோல் பலதரப்பட்டவர்கள் நன்மை அடைவார்கள்.

குறித்த துறையில் உயர் இலக்கை அடைய வேண்டும் என்று பிள்ளைகள் பெற்றோர்களிடம் கோரும் போது அதற்கான வழிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும். பிள்ளைகள் காணும் கனவுகளுக்கு பெற்றோர்களின் முழுமையான பங்களிப்பு அவசியம். இவையே எமது சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும்.

இன்று கற்கை நெறியைப் பூர்த்தி செய்த இளம் யுவதிகள் எல்லோரும் அடுத்த தலைமுறையினர்களுக்கு வழிகாட்டக் கூடிய தலைவிகள்.ஏனென்றால் நீங்கள்தான் ஒரு தாயாக இருந்து எதிர்கால சந்ததியினர்களை உருவாக்கப் போகின்றீர்கள். நீங்கள்தான் வீட்டுத் தலைவிகள். உங்கள் கையில்தான் வீட்டுத் தலைவிக்குரிய தலைமைத்துவப் பொறுப்பு இருக்கப் போகிறது. உங்கள் பிள்ளைகள்தான் நாளைய தலைவர்கள். நீங்கள் இவர்களை சிறந்த முறையிலே உருவாக்கினால் சமூகம் சிறப்படையும்.இவ்வாறான வழிகாட்டல் கற்கை நெறிகளைக் கற்றுக் கொண்டு வழிகாட்டல்களைச் செய்தால் முன்னைய தலைவிகளை விடவும் ஒரு படி மேலே சென்று சிறந்த வழிகாட்டல்களை நீங்கள் சமூகத்திற்கு வழங்கலாம்.அந்த வகையிலே இக் கல்வி நிலையத்தில் 60 தலைவிகளை உருவாக்கியிருக்கின்றார்கள். அவர்கள் இங்கு கற்றுக் கொண்டதற்கு இணங்க தங்களுடைய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எமது சமூகத்திற்கோ அல்லது தனி நபர்களுக்கோ சேவையாற்ற முனைந்தால் எல்லோரும் செய்வதைப் போல் செய்தோம் என்று இல்லாமல் அல்லது ஒரு விளம்பரத்திற்காக செய்தோம் என்று இல்லாமல் தேவையைக் கருத்திற் கொண்டு அதனைச் சரியாக அடைவதற்கு கைகொடுக்க வேண்டும். நாம் வழிகாட்டுதலை வழங்கும் போது அவர்களோடு இரண்டறக் கலந்து பங்காற்ற வேண்டும். எல்லோரும் செய்கின்றார்கள் என்று நாமும் செய்வோம் என்பதை விட அவற்றினுடைய தேவை உணர்ந்து செயற்பட வேண்டும்.

இன்றைய எமது இளம் யுவதிகள் தான் நாளைய உலகை ஆளப் போகும் தலைமைகளை உருவாக்கப் போகின்றவர்கள். எனவே சம காலத்தில் சமமான முறையில் இவர்கள் இருவரும் ஓர் உயர்ந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். இளம் யுவதிகள் உயர்ந்த இலக்கை நோக்கிப் பயணம் செய்யும் போது இளம் தலைமுறையினர்களும் அதே போன்று அவர்களுக்குச் சமனான முறையில் பயணிக்க வேண்டிய தேவை இருந்து கொண்டிருக்கின்றது. இதிலே ஒரு பாரிய இடைவெளி காணப்படுகிறது. இந்த தரப்பினர்கள் வளர்ந்து செல்வதற்கான வழிகாட்டல்களையும் தலைவமைத்துவங்களையும் மூத்தவர்கள் வழங்க வேண்டும். நாம் ஒரு வட்டத்திற்குள் நின்று தடுக்கக் கூடாது. வானில் உயரப் பறந்து செல்லுமளவுக்கு முதியோர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும்.

எந்த இலக்குகளை அடைவதாக இருந்தாலும் துறைசார்ந்தவர்களுடைய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது முக்கியமான விடயம். ஒவ்வொரு துறைகளிலும் எமது சமூகத்தில் இருந்து இளைஞர், யுவதிகள் உருவாக வேண்டும்.

ஆங்கில மொழிக் கல்வி மிகவும் அத்தியாவசியமானது. ஒரு மொழியை விட இன்னுமொரு மொழி தெரிந்து இருந்தால் தைரியமாக எதையும் சாதிக்கலாம். எனக்கு பல மொழிகள் தெரியும். ஆதலால்தான் நான் நிறைய சமூகத்திற்கு பங்காற்றக் கூடியதாக இருக்கின்றேன். எனவே மாணவிகளாகிய நீங்கள் கற்றுக் கொண்ட ஆங்கிலக் கல்வியின் மூலம் நீங்கள் உருவாக்குகின்ற இளம் தலைவர்கள் இன்னுமொருபடி மேலே சென்று சிறந்த ஆளுமைகளைக் கொண்ட எதிர்கால சந்ததியினர்களை உருவாக்க முடியும். எனவே அதற்கான பணிகளை எமரல்ட் கல்லூரி மென்மேலும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அல் ஹாபிழ் ஏ. எல். அலியார் (மதனி)

உங்களுடைய செல்வங்கள் வீட்டில் இருந்து வரும் போது எப்படி வந்தார்கள். இன்று எப்படிக் காட்சியளித்தார்கள் என்பதை நீங்கள் நன்கு காணலாம்.

எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தையாகப் பிறக்கின்றது. நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள். இன்றைய கால கட்டத்தில் பாடப்படும் இயல் இசைப் பாடலாகும்.இதைப் பற்றி நபி நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 1400 வருடங்களுக்கு முன் கூறி இருக்கிறார்கள்.

ஒரு பிள்ளையை வளர்ப்பதில் தாய் தந்தையர்கள்தான் பொறுப்புமிக்கவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய மார்க்க அறிவினை வழங்குவதன் மூலம் தான் அந்தப் பிள்ளை சிறந்த பிள்ளையாக உருவாக முடியும்.

அதற்குப் பெற்றோர்களின் பங்களிப்பு மிக அவசியம்.

நற்குணம், நற்பண்பு ஆகியவற்றுடன் இந்த 60 நாட்களிலும் ஐந்து நேரத் தொழுகை, தஹஜ்ஜத் தொழுகை போன்ற நல்ல மார்க்க விடங்களையும் கற்றுக் கொண்டார்கள். நல்ல விடயத்தை அடைவதற்கு பள்ளிகளைக் கட்டித்தான் சுவர்க்கம் செல்வதல்ல.சுவர்க்கத்தை அடைவதற்கு பல வழிகள் உண்டு. தம் பிள்ளைகளை நல்லொழுக்கம் உள்ள பிள்ளைகளாக வளர்த்து அல்லாஹ்வுக்கும்,நபி நாயகம் (ஸல்) அவர்களுக்கும் விருப்பமான பிள்ளையாக வளர்த்து அல்லாஹ்வுக்குப் பயந்தவனாக குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றி வாழக் கூடியவனாக இறையச்சத்துடன் வாழக் கூடிய கணவனைத் தெரிவு செய்து திருமணம் முடித்துக் கொடுத்தால் அதற்கு கிடைக்கும் கூலி சுவர்க்கம் என்பார்கள்.நீங்கள் சுவர்க்கத்தை அடையக் கூடிய திறப்பு உங்கள் வீட்டிலே உங்களது கையிலே இருக்கிறது. இவ்வாறு நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லக் கூடிய அடித்தளத்தை இப்பொழுது நாங்கள் ஆரம்பித்துத் தந்துள்ளோம்.

இம் மாணவிகளுக்கு நாங்கள் எப்பொழுதும் மனிதர்களோடு பணிவோடும் பண்போடும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் போன்ற பல முறையிலான விடயங்களையே இங்கு அளிக்கிறோம்.

இந்த மாணவிகள் குர்ஆனுடைய இன்பத்தைக் கண்டார்கள். குர்ஆனுடைய இனிமையை சுவைத்தார்கள். பட்டை தீட்டப்பட்ட பிள்ளைகளாக இன்று உருவாக்கப்பட்டுள்ளார்கள்.

கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட சர்வதேச அல் ஹுதா பாடசாலை அதிபர் ஏ. எச். எம். அஸ்ஹர்,

இரண்டாம் திகதி செப்டம்பர் மாதம் என்னுடைய முகப்புத்தகத்தில் ஒரு பதிவினை இட்டிருந்தேன். இளைஞர்கள் எல்லாம் திருமணம் முடித்து விடுகிறார்கள். யுவதிகள் எல்லாம் பட்டம் பெற்று விடுகிறார்கள். வசதியாக வாழ்ந்தவர்கள் எல்லோரும் இன்னும் வசதியாகத்தான் வாழ்கிறார்கள்.கஷ்டப்பட்டவர்கள் இன்னும் காலம் கடத்துகிறார்கள். பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து இருக்கிறார்கள். ஆனால் உள்ளே தொழுபவர்கள் குறைந்து இருக்கிறார்கள். மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கும் கல்விக் கல்லூரிக்கும் சென்று கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் கடைகளுக்கும் கட்டார்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். சமூகசேவை இயக்கங்கள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால் சமூகத்தின் தேவைகள் அப்படியே இருக்கின்றன. வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊருக்கு வர ஆசைப்படுகிறார்கள். ஊரில் இருப்பவர்கள் வெளிநாடு போக ஆசைப்படுகிறார்கள்.

இக்பால் அலி…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT