Sunday, May 19, 2024
Home » இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நீர்மின் திட்டத்தை உருவாக்கிய விமலசுரேந்திர

இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நீர்மின் திட்டத்தை உருவாக்கிய விமலசுரேந்திர

by sachintha
September 20, 2023 10:12 am 0 comment

பொறியியல் நிபுணர் விமலசுரேந்திர அவர்களின் 149 ஆவது பிறந்ததினம் நோட்டன் நகரில் அனுஷ்டிப்பு

இலங்கையில் நீர்மின்சாரத் தயாரிப்பின் முன்னோடியான அமரர் விமலசுரேந்திரவின் 149 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

நோட்டன் பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, லக்ஷபான மின்சாரசபை பொறுப்பதிகாரி, பொறியிலாளர் ஆஷிப்நஷீர், விமலசுரேந்திர மின்நிலையத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீர்மின்சாரத்தின் முன்னோடியான விமல சுரேந்திர 1874 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி காலி கல்வடுகொட முகாந்திரம் தோட்டத்தில் பிறந்தார். தந்தை தேவபுர விமலசுரேந்திர முதலி, தாய் கிரிஸ்டினா விமல சுரேந்திர ஆவார். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த விமல சுரேந்திர ஆங்கிலம், சிங்களம் மற்றும் ஜேர்மன் ஆகிய மொழிகளில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார். வரலாறு, புவியியல், திரிகோண கணிதம், பிரயோக கணிதம் ஆகிய பாடங்களில் முதல் மாணவனாக விளங்கினார்.

கொலன்னாவை அரச தொழில்நுட்பசாலையில் பயிலுநர் புவியியலாளராக இணைந்து கொண்டதுடன், கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலாளராக கல்வியைத் தொடர்ந்தார். பொறியியல் துறையில் முதலாம் தர சித்தியை பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமை இவரையே சாரும். அதன் பின்னர் இந்தியாவில் நடைபெற்ற பரீட்சைக்கு தோற்றி சிறப்புத் தேர்ச்சியை பெற்றுக்கொண்டார். 1898இல் அரச தொழில்நுட்பத் திணைக்களத்தில் சிரேஷ்ட பொறியியலாளராக நியமனம் பெற்றார்.

1901 இல் மாவட்ட பொறியியலாளராக நியமனம் பெற்று தியத்தலாவையில் பணிபுரிந்த காலப்பகுதியில் பதுளைக்கான புகையிரத வீதியை மூன்றரை மைல் தூரம் வரை குறைக்கும் வகையில் ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்தமை இவரது பணிகளில் மிகவும் முக்கியமானதாகும். 1908 ஆம் ஆண்டு தமது சொந்த ஊரான காலிக்கு மாற்றம் பெற்றுக் சென்ற விமலசுரேந்திர, காலி துறைமுகத்தின் மீள்நிர்மாணம் மற்றும் காலிக்கான குழாய், வடிகாலமைப்பு முறைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

அதன் பின்னர் உடபுசல்லாவ புவியியலாளராக மாற்றம் பெற்ற இவர், நுவரெலியா நீர்மின் திட்டத்தை முன்னெடுத்து அதனை மேலும் செம்மைப்படுத்துவதற்காக லக்சபான அபடின் நீர் மின் நிலையத்துக்கான திட்ட வரைபையும் தயாரித்தார்.

அவ்வருட காலப்பகுதியிலேயே கண்டி மாவட்டப் பொறியியலாளராகச் சென்று கண்டி நகரின் வடிகாலமைப்பு திட்டத்தை ஒழுங்குபடுத்தி தருமாறு பணிக்கப்பட்டார். 1910ஆம் ஆண்டில் அரச மின்சார பொறியியலாளராக கடமையாற்றும்போது ஆ.பி ரைலன்ஸ் என்பவருக்கு லக்ஸபான நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள நீர்வளத்தைக் கொண்டு நீர்மின்சாரத்தை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தார். ஆனால் அப்போது அதற்கான சாத்தியப்பாடோ சூழ்நிலைகளோ காணப்படவில்லை. பின்னர் 1918இல் இத்திட்டம் குறித்த தேவைப்பாடு உணரப்பட்டது. மின்பொறியியலாளர் சிறப்புப் பட்டத்தைப் பெறுவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் பெரடே கல்வியியல் பீடத்துக்குச் சென்று டிப்ளோமா கற்கையை முடித்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். 1919 இல் தாயகம் திரும்பிய விமலசுரேந்திர லக்சபான நீர்மின் திட்டத்துக்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டார். இலங்கை ஆங்கிலேயர்கள் முன்வைத்த நிலக்கரி மூலம் மின்சாரத்தை உருவாக்கும் பொறிமுறையைக் கொண்டிருந்ததால் நீர்மின் திட்டம் குறித்து கவனத்தில் எடுக்கவில்லை.

தனது முயற்சியைக் கைவிடாத விமலசுரேந்திர சேர் பொன்னம்பலம் அருணாசலம்,இ ஜேம்ஸ் பீரிஸ், மார்க்கஸ் பெர்னாண்டோ மற்றும் டி.ஆர்.விஜேவர்த்தன ஆகியோரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று இத்திட்டத்தின் அனுகூலங்களை எடுத்துரைத்தார்.

இதன் மூலம் அவர் கொண்டிருந்த கனவு நனவாகியது. 1924 ஆம் ஆண்டு நீர்மின் திட்டத்திற்கான அனுமதியை அப்போதைய சட்டசபை அங்கீகரித்தது. ஆனால் இத்திட்டத்தை முன்னெடுக்கும் பணி விமலசுரேந்திரவுக்கு கொடுக்கப்படவில்லை. 1927ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றரை மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்டது.

அரச தொழில் திணைக்களத்தில் சிரேஷ்ட பொறியியலாளராகவும் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய விமல சுரேந்திர 1928 இல் கொலன்னாவை மின்சார விநியோகத்திட்டத்தை முன்னெடுக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. 1928 டிசம்பர் 12 ஆம் திகதி இத்திட்டம் முழுமையாக செய்து முடிக்கப்பட்டதன் பின் அப்போதைய ஆளுநர் சேர். ஹேர்பட் ஸ்டெனிஸின் பெயரால் அவராலேயே திறந்து வைக்கப்பட்டது. இவரது 30 வருட சேவையின் பின் 55 வயதில் ஓய்வுபெற்றார்.

1941இல் சட்டவாக்கக் கழகத்துக்கு இரத்தினபுரி தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விமலசுரேந்திர தனது லக்ஸபான திட்டத்தை உருவாக்க இதனை ஒரு களமாக பயன்படுத்திக் கொண்டார். 1935 ஆம் ஆண்டில் நிறைவேற்றுச் சபையில் அற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே தடைப்பட்டுப் போயிருந்த இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு 1948 ஆம் ஆண்டில் முதலாம் கட்டம் பூர்த்தி செய்யப்பட்டது. இதுவே இலங்கையின் முதலாவது நீர் மின் நிலையமாகும். இலங்கையின் மத்திய மலைநாட்டில் பாய்ந்தோடும் நீரை வீணே விரயமாக்காமல் அதன் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விமலசுரேந்திரவின் கனவு நனவாகியது. 1950 ஆம் ஆண்டில் 25 மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் லக்ஷபான நீர்மின் நிலையம் இயங்கத் தொடங்கியது.

1953 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 10ஆம் திகதி அவர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

செ.தி.பெருமாள்…?
(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT