Wednesday, May 15, 2024
Home » பாகிஸ்தானின் கந்தாரா பாரம்பரியம் பற்றிய கருத்தரங்கு

பாகிஸ்தானின் கந்தாரா பாரம்பரியம் பற்றிய கருத்தரங்கு

- பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு

by Rizwan Segu Mohideen
September 16, 2023 2:42 pm 0 comment

பாகிஸ்தானின் கந்தாரா பாரம்பரியம் பற்றிய கருத்தரங்கு கடந்த புதன்கிழமை (13) நடைபெற்றது.

பிரபல நாகானந்தா சர்வதேச பௌத்த கற்கை நிறுவனத்தில் (NIIBS) இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார், இராஜதந்திரப் பிரதிநிதிகள், முக்கிய பெளத்த பிக்குகள், அகில இலங்கை பௌத்த சபை உறுப்பினர்கள், மற்றும் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் பர்கி தனது வரவேற்பு உரையில், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சிறந்த நட்புறவு பற்றிய கண்ணோட்டத்தை வழங்கியதோடு இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் தொடர்புகளின் அவசியத்தை வலியுறுத்திய அதே வேளை, பாகிஸ்தானில் காணப்படும் மத மற்றும் கலாச்சார சுற்றுலாவின் சாத்தியப்பாட்டை சுட்டிக்காட்டினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நிறுவன ரீதியான தொடர்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதம அதிதி கருத்துத் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் பாரிய கலாச்சார மற்றும் மத சுற்றுலாவின் சாத்தியப்பாட்டினை, குறிப்பாக கந்தாரா பாரம்பரியத்தைப் பற்றி இலங்கை மக்களுக்கு அறிவூட்டுவதற்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளைப் பாராட்டியதோடு இருதரப்பு கருத்துக்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றத்திற்காக இரு நாடுகளும் பாரம்பரிய மன்றத்தை உருவாக்குவதன் அவசியத்தை குறிப்பிட்டார்.

இலங்கையின் முக்கிய அறிஞர்கள் மற்றும் பாகிஸ்தானின் இரு புகழ்பெற்ற பேச்சாளர்களான பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அப்துல் சமத், மற்றும் தக்சிலா அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் இக்பால் கான் ஆகியோரால் விளக்கக்காட்சிகள் மற்றும் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்நிகழ்வில் பாகிஸ்தானின் கந்தாரா பாரம்பரியம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் காட்சிப்படுத்தல் மற்றும் பாகிஸ்தானின் கந்தாரா பாரம்பரியம் குறித்த ஆவணப்படம் வெளியீடு ஆகியவை இடம்பெற்றன .

சகோதர உறவுகள் மற்றும் கலாச்சார தொடர்புகளை மேலும் கட்டியெழுப்புவதற்காக, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் மத சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் கந்தாரா பாரம்பரியத்தை பாதுகாத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஒரு முன்னேற்ற கட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT