Monday, May 20, 2024
Home » பயணிகளுக்கு காயமும் உயிரிழப்பும் ஏற்பட்டிருப்பது நல்ல அறிகுறியல்ல

பயணிகளுக்கு காயமும் உயிரிழப்பும் ஏற்பட்டிருப்பது நல்ல அறிகுறியல்ல

70% மானோர் ஆதரவளிக்காத ரயில்வே போராட்டம்

by gayan
September 14, 2023 9:07 am 0 comment

ரயில் சாரதிகள் சங்கத்தின் அங்கத்தவர்களில் 70 வீதமானோர் ஆதரவளிக்காத வேலைநிறுத்த போராட்டம் பயணிகளை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் உள்நோக்கம் கொண்ட அர்த்தமற்ற செயற்பாடென, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய நேற்றுத் தெரிவித்தார்.

நட்டத்தில் இயங்கும் முன்னணி அரச நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ரயில்வே திணைக்களத்தை, இலாபமீட்டும் நிறுவனமாகக் கட்டியெழுப்புவதற்கு உழைப்பது அனைத்து தரப்பினரதும் பொறுப்பேயன்றி வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரயில் சாரதிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து நடத்திய செய்தியாளர் மாநாட்டிலே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ரயில் சாரதிகள் சங்கம் பதவி உயர்வு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது . அக்கோரிக்கைகள் குறித்து அமைச்சருடனும் செயலாளருடனும் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில், தாம் எதிர்பார்த்த பிரதிபலன்கள் கிடைக்கப்பெறவில்லை. அதனால் இத்தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ரயில் சாரதிகள் அனைவரும் ஈடுபடவில்லை. ரயில்வே சாரதிகள் சேவையில் 277 பேர் உள்ளனர். அவர்களில் சுமார் 80 பேரளவில்தான், பங்குபற்றியுள்ளனர். இத்தொழிற்சங்க நடவடிக்கையால் 119 ரயில் பயண சேவைகள் தடைபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தினமும் 380-400 ரயில் போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றன. அதன் விளைவாக பொதுமக்கள் குறிப்பிடத்தக்களவில் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இத்தொழிற்சங்க நடவடிக்கையின் போது 15 வயது சிறுவர் ஒருவரும் 45 வயது மதிக்கத்தக்கவரும் காயமடைந்துள்ளனர். ஹொரப்பேயில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வேலை நிறுத்தத்தினால் மக்களுக்கு போக்குவரத்து அசௌகரியங்களே ஏற்படும். ஆனால் இவ்வேலை நிறுத்தத்தினால் உயிரிழப்பும் காயங்களும் இடம்பெற்றுள்ளன. இது நல்ல அறிகுறி அல்ல.

இத்தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு நேர காலம் வழங்கப்பட்டிருந்தது.எனினும், வேலைநிறுத்தத்தையே இவர்கள் முன்னெடுத்துள்ளனர். இதன் விளைவாக ரயில் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வேலைநிறுத்தத்திற்கு ரயில் சாரதிகள் சங்கத்தில் 70 வீதமானோர் மாத்திரமல்லாமல் ஏனைய ரயில்வே தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு நல்கவில்லை. மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் அர்த்தமற்ற வேலைநிறுத்தமே இது. இத்தொழிற்சங்கத்தின் தலைவர் கடமையில் ஈடுபட செயலாளர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கையானது இந்நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தையே காட்டிக்கொடுப்பதாக அமைந்துள்ளது.

ரயில்வே திணைக்களம் 2010 முதல் 2020 வரையும் 331 பில்லியன் ரூபா நஷ்டத்தை சந்தித்தது. 2021 இல் 10.1 பில்லியன் ரூபாவும் 2022 இல் 12.4 பில்லியன் ரூபாவும் நஷ்டமடைந்துள்ளது. இவ்வாறான நிறுவனமொன்றின்

தொழிற்சங்கங்கள் ஏனையவர்களை விடவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியவர்கள். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போன்று இந்நாட்டு ரயில்வேயையும் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும்.

மர்லின் மரிக்கார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT