Monday, May 20, 2024
Home » அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக துடிப்புடன் ஊடகப்பணியைத் தொடரும் பத்திரிகையாளர் சலீம்

அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக துடிப்புடன் ஊடகப்பணியைத் தொடரும் பத்திரிகையாளர் சலீம்

இன்று 75 ஆவது அகவையில்

by gayan
September 14, 2023 11:39 am 0 comment

அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக பிராந்திய செய்தியாளராக பணியாற்றி வருபவர் அம்பாறை மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளர் ஏ.எல்.எம். சலீம். தொடர்ந்தும் துடிப்புடன் பணியாற்றிவரும் அவர் இன்று 75 ஆவது அகவையில் பிரவேசிக்கிறார்.

நிந்தவூரைச் சேர்ந்த சலீம் 1966 ஆம் ஆண்டு செய்தியாளராக பத்திரிகைத்துறையில் பிரவேசம் செய்தார். இலங்கையின் தேசியப் பத்திரிகைகள் பலவற்றில் பிராந்திய செய்தியாளராக பணியாற்றி வரும் நாடறிந்த பத்திரிகையாளர் அவர். இதனிடையே, அவரின் பணியின் தரம் கண்டு சில இலத்திரனியல் ஊடகங்களும் கூட அவரது சேவையை நாடின.

இலங்கையின் தமிழ்ப்பத்திரிகைத் துறையில் வளமான ஒரு மரபை விட்டுச்சென்ற புகழ்பூத்த பத்திரிகை ஆசிரியர்களான எஸ்.டி. சிவநாயகம், ஆர்.சிவகுருநாதன், கே.சிவப்பிரகாசம், ஆ.சிவனேசச்செல்வன், எஸ். நடராசா, கே.கே. இரத்தினசிங்கம், கானமயில்நாதன் ஆகியோரின் காலத்தில் அவர்களின் வழிநடத்தலில் பணியாற்றிய சலீம், இன்றைய இளம் பத்திரிகை ஆசிரியர்களின் காலத்திலும் பிராந்திய செய்தியாளராக தொடருகிறார்.

தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி காரணமாக பத்திரிகையாளர்களின் செயற்பாட்டு முறைகளில் நவீன கருவிகளைப் பயன்படுத்தி கடைப்பிடிக்கவேண்டியிருக்கும் மாற்றங்களுக்கு தன்னை இசைவாக்கிக் கொண்டு தங்கள் பணியை தொடர்ந்தும் செய்துவரும் தமிழ்பேசும் பத்திரிகையாளர்களில் சலீமும் ஒருவர் எனலாம். வெறுமனே பிராந்திய செய்திகளை மாத்திரம் அனுப்பும் ஒரு செய்தியாளராக மாத்திரமல்ல, அரசியல், சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்த பெருவாரியான கட்டுரைகளையும் சலீம் எழுதிவந்திருக்கிறார்.

அம்பாறை மாவட்டத்தை தனது களமாகக் கொண்டு செயற்பட்டு வந்த போதிலும், ஊடகவியலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக குரல்கொடுக்கும் பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பங்கை வகித்த காரணத்தால் கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் வடமாகாணம், மலையகம் மற்றும் கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகுந்த நட்புரிமை கொண்டவராக சலீம் விளங்குகிறார்.

முஸ்லிம் மீடியா ஃபோரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவற்றின் தாபக உறுப்பினரான அவர் கிழக்கிலங்கை செய்தியாளர்கள் சங்கம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம், தென்கிழக்கிலங்கை செய்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார். 15 வருடங்களாக நிந்தவூர் மத்தியஸ்த சபையின் உறுப்பினராக இருந்துவரும் அவர் தற்போது நிந்தவூர் கலை இலக்கியப் பேரவையின் உபதலைவராக செயற்படுகின்றார்.

பத்திரிகைத்துறை சேவைக்காக அவர் பல்வேறு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். கலாபூசணம் விருது (2008), இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து வருடாந்தம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (2017), கல்முனை மாநகர சபையின் ஊடக முதுசம் பட்டம் என்பவை அவருக்கு கிடைத்த மிகவும் குறிப்பிடத்தக்க விருதுகள்.

பத்திரிகைத்துறையில் சலீம் 50 வருடங்களைப் பூர்த்திசெய்ததை முன்னிட்டு சில வருடங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் விமரிசையாகப் பெருவிழா எடுத்து அவரைக் கௌரவித்ததுடன் ‘பொன்விழாக்காணும் சலீம் ‘ என்ற சிறப்பு மலரையும் வெளியிட்டது. அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி அவரைக் கௌரவப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் பெரும்பாலும் காணப்படும் ஒரு முக்கியமான குறைபாடு அவர்கள் தங்களது சேவைக்கால அனுபவங்களின் ஊடாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அரசியல், சமூக நிகழ்வுப்போக்குகளை வரலாற்றுப் பதிவாக எழுதுவதில் அக்கறை காட்டுவதில்லை என்பதாகும். இன்றைய செய்தி நாளைய வரலாற்றின் அரைகுறையான முதல் வரைவு என்று சொல்வார்கள். அதனால் தான் மூத்த ஊடகவியலாளர்களைப் பற்றி எழுதக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இந்த கோரிக்கையை முன்வைப்பதற்கு நான் தவறுவதில்லை.

எனக்கும் சலீமுக்கும் இடையிலான நட்பு கால்நூற்றாண்டுக்கும் அதிகமான நீட்சி கொண்டதாகும். நண்பர் சலீமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு அவரது பத்திரிகைத்துறைப்பணி தொடர வேண்டுகிறேன். மூத்த பத்திரிகையாளர்களை வாழும்போதே வாழ்த்துவோம்.

 

வீரகத்தி தனபாலசிங்கம்…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT