Monday, May 20, 2024
Home » லிபியாவில் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்திருக்கலாமென அச்சம்

லிபியாவில் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்திருக்கலாமென அச்சம்

by sachintha
September 13, 2023 2:11 pm 0 comment

 

லிபியாவில் சக்திவாய்ந்த புயல் ஒன்றால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தை அடுத்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உயிரிழப்பு 2000ஐ தாண்டி இருப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயிருப்பதாகவும் சர்வதேசம் அங்கீகரிக்காத கிழக்கு லிபிய அரசு தெரிவித்துள்ளது.

டனியேல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) லிபியாவை தாக்கிய நிலையில் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. தற்போது இடம்பெற்று வரும் மீட்பு நடவடிக்கையில் ஏழு இராணுவத்தினர் காணாமல்போயுள்ளனர்.

கிழக்கு அரசு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி இருப்பதோடு பாடசாலைகள் மற்றும் கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது. கிழக்கு நகரங்களான பெங்காசி, சுசே, டெர்னா மற்றும் அல் மர்ஜ் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறைந்தது 150 வீடுகள் அழிந்திருப்பதாக லிபிய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

டெர்னா நகரில் மாத்திரம் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மனிதாபிமான வலையமைப்பான செம்பிறை சங்கத்தை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 100,000 மக்கள் வசிக்கும் டெர்னாவில் இரு அணைகள் உடைப்பெடுத்து குடியிருப்பு பகுதிகள் மூழ்கியுள்ளன.

கிழக்கு லிபிய அரசின் பிரதமரான ஒசாமா ஹமத் லிபிய தொலைக்காட்சி ஒன்றில் பேசியபோது கூறியதாவது, “ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயிருப்பதோடு உயிரிழப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. டெர்னாவின் பகுதிகள் குடியிருப்பாளர்களுடன் ஒட்டுமொத்தமாக காணாமல்போயுள்ளன. அந்தப் பகுதிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன” என்றார்.

எனினும் ஹமத் தனது கூற்றுகளுக்கான ஆதாரங்களை குறிப்பிடவில்லை. நாட்டின் கிழக்கு பகுதிகள் தவிர, மேற்கு நரான மிஸ்ரட்டாவிலும் வெள்ளம் தாக்கியுள்ளது.

டனியேல் புயல் கடந்த வாரம் கிரேக்கம், துருக்கி மற்றும் பல்கேரியாவை தாக்கியபோது பல டஜன் பேர் கொல்லப்பட்டனர்.

பல கடலோர நகரங்களில் பெரும் பகுதிகள் அழிந்துள்ளன. இந்த பேரழிவு காரணமாக 3 நாட்கள் துக்கம் அனுசரித்து நாடு முழுவதும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT