Wednesday, May 15, 2024
Home » டிக்கெட் தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும்; ஏசிடிசி நிறுவுனர் அறிவிப்பு

டிக்கெட் தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும்; ஏசிடிசி நிறுவுனர் அறிவிப்பு

by Prashahini
September 13, 2023 3:56 pm 0 comment

பார்வையாளர்கள் எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தாலும் அந்த தொகை திருப்பியளிக்கப்படும் என்று ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் CEO ஹேமந்த் ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த நிலையில் ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் CEO ஹேமந்த் ராஜா பார்வையாளர்கள் எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தாலும் அந்த தொகை திருப்பியளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: “இந்த இசை நிகழ்ச்சியில் நிறைய அசவுகரியங்கள் நடந்துள்ளன. டிக்கெட் வாங்கியும் உள்ளே வரமுடியாத நிலை ஏற்பட்டதற்கு நான் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் ரஹ்மான் சாரின் இசையை கேட்டு மகிழ வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்தோம்.

இந்த நிகழ்ச்சியில் நடந்த அசவுகரியங்களுக்கு எங்கள் ஏசிடிசி நிறுவனமே முழு பொறுப்பு. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் பங்கு மேடையில் இசை நிகழ்ச்சியை நடத்தியது மட்டுமே. அதை அவர் மிகச் சிறப்பாகவே செய்திருந்தார். அவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடந்த அசவுகரியங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சமூக வலைதளங்களில் அவரை மையப்படுத்தி எந்த விமர்சனமும் செய்யவேண்டாம். இதுக்கு முழுக்க முழுக்க நாங்கள் மட்டுமே. இந்த இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி உள்ளே நுழையமுடியாதவர்களுக்கான டிக்கெட் தொகை கண்டிப்பாக திருப்பி வழங்கப்படும். அது ரூ.500 ஆக இருந்தாலும் சரி, ரூ.50 ஆயிரமாக இருந்தாலும் சரி”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்னொருபுறம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில், டிக்கெட் வாங்கியும் பங்கேற்க முடியாதவர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி நேற்று நள்ளிரவு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இமெயில் மூலம் இதுவரை சுமார் 4000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என புகார் தெரிவித்துள்ளதாகவும். டிக்கெட் நகலை சரி பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கட்டணத்தை திருப்பி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது ரஹ்மான் தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

 

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT