Monday, May 20, 2024
Home » முத்த சர்ச்சையை அடுத்து பதவி விலகினார் ருபியல்ஸ்

முத்த சர்ச்சையை அடுத்து பதவி விலகினார் ருபியல்ஸ்

by damith
September 12, 2023 3:04 pm 0 comment

உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி வீராங்கனைக்கு முறையற்ற வகையில் முத்தம் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லுவிஸ் ருபியல்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) தனது இராஜினாமாவை அறிவித்த ருபியல்ஸ், அது பற்றிய கடிதத்தை ஸ்பெயின் கால்பந்து சம்மேனளனத்தின் பதில் தலைவருக்கும் அனுப்பியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற பிஃபா மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு பின்னர் ஸ்பெயின் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது தொடர்பில், பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக ருபியல்ஸுக்கு எதிராக ஸ்பெயின் அரச வழக்கறிஞர் ஒருவர் கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

அவரது நடத்தை குறித்து விசாரணை நடத்தவுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனைத்து வகை கால்பந்து செயற்பாடுகளில் இருந்தும் அவரை மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தியது.

“பிஃபாவினால் விரைவாக இடைநிறுத்தப்பட்டது, எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் எஞ்சிய செயற்பாடுகள் என்னால் மீண்டும் பதவிக்கு திரும்ப முடியாது என்பதையே காட்டுகிறது” என்று ருபியல்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ருபியல்ஸ் தலைமை பதவியில் நீடிக்கும் வரை உலகக் கிண்ணத்தை வென்ற 23 வீராங்கனைகள் மற்றும் சுமார் 81 ஸ்பெயின் வீராங்கனைகள் தேசிய அணிக்காக ஆடப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

முன்னாள் கால்பந்து வீரரான 46 வயது ருபியல்ஸ் 2018 தொடக்கம் ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக செயற்பட்டு வந்தார். அவர் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றிய உப தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT