Sunday, May 12, 2024
Home » ஜனாதிபதியின் காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்கள் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவியது

ஜனாதிபதியின் காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்கள் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவியது

- நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிலைபேறாதன்மையின் பங்கும் முக்கியமானது

by Rizwan Segu Mohideen
September 9, 2023 10:11 am 0 comment

ஜனாதிபதியின் காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்கள் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை (07) நடைபெற்ற 16ஆவது சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலேயே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் குறித்து விளக்கமளித்த சாகல ரத்நாயக்க, பொருளாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்து, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். அதனால் கிட்டியுள்ள மேம்பாடுகளை வரவேற்ற அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

“டிஜிட்டல் மாற்றம், நிலைபேறானதன்மை, துறைசார் மாற்றங்கள என்பவற்றுக்கு ஈடுகொடுக்க கூடிய இயலுமை” என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வேறு துறைசார் தொழிலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புக்கள் ஊடாக கிட்டிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பீ.நந்தலால் வீரசிங்க இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றியதோடு, அமெரிக்க உடலியல் மற்றும் மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்றவருமான அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லேலண்ட் ஹார்ட்வெல் இணையத்தினூடாக உரை நிகழ்த்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,

“சில வாரங்களுக்கு முன்னர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் ஜெனரல் மிலிந்த் பீரிஸுடன் இணைந்து உங்களுக்கு சில வழிகாட்டல்களை வழங்க கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகமானது தனது வெற்றியை முழு உலகத்திற்கு காண்பித்துள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தை சேர் ஜோன் கொத்தலாவல எமக்கு நன்கொடையாக வழங்கினார். இன்று இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியவர்கள், இலங்கையில் மட்டுமன்றி உலக அளவில் திறமைகளை நிரூபித்துள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் தரமான கல்வியே அதற்குக் காரணமாகும். இராணுவத்தினரின் எதிர்காலத்தை மட்டுமல்லாது, ஏனைய மாணவர்களின் எதிர்காலத்தையும் வளமாக்கும் முன்னணி பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. உயர் கல்வித்துறையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இலங்கை கடந்த வருடத்தில் எதிர்கொண்ட மிகக்பெரிய பொருளாதார நெருக்கடியை போன்ற நிலைமையை பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.

தற்போது அதிலிருந்து எவ்வாறு மீள முடியும் என்பதையே கண்டறிய வேண்டும். அதற்காக ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளருடன் இணைந்து மேற்கொண்ட காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்களின் பலனாக இன்று நாடு ஓரளவு நிலையான தன்மையை அடைந்துள்ளது.

எவ்வாறாயினும், இன்றும் நாம் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளவில்லை. நாட்டில் நிலையான அபிவிருத்தியை பேணிக்கொண்டு மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நாம் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்றைய மாநாடு “டிஜிட்டல் மயமாக்கல், நிலைபேறானதன்மை மற்றும் துறைசார் மாற்றத்தின் மூலம் மீட்சியை காணல்” என்ற காலோசிதமான தொனிப்பொருளை கொண்டுள்ளது. டிஜிட்டல் மாற்றம் என்பது அரச மற்றும் ஏனைய துறைகள் அனைத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் கீழ் ஒருங்கிணைப்பதாகும். அதற்காக நாட்டில் கலாசார ரீதியிலான மாற்றங்களும் அவசியம். ஒரு நாடு என்ற வகையில் நாம் முன்னேறிச் செல்லும் போது, புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டியதும், செயல்திறன் மிக்க சேவைகளை வழங்க வேண்டியதும் அவசியமாகும்.

நிலைபேறானதன்மையே முக்கியமானதாகும். நிலைபேறான என்ற சொல்லின் ஊடாக எதிர்கால சந்ததிக்கு அவசியமான தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் இயலுமைக்கும் பாதகத்தை விளைவிக்காத வகையிலான தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான அபிவிருத்தி என்றே பொருள்படும்.

டிஜிட்டல் மயமாக்கலில் வெற்றி காண, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு, முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குதல், சரியான நிபந்தனைகளை விதித்தல், சரியான பாதுகாப்பு தன்மைகளை பேணுதல், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஆய்வுகள் மற்றும் கல்வியுடன் கூடியதாக மேற்படி முயற்சிக்கான பிரவேசத்தை இலங்கை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தூரநோக்கு ஜனாதிபதியிடம் உள்ளது. அந்த திட்டங்களுக்கமைய அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்ட வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையிலான முப்படைத் தளபதிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொட, உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, முன்னாள் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த டீ பீரிஸ் உள்ளிட்டவர்களுடன் முன்னாள் வேந்தர்கள், உபவேந்தர்கள், பீடாதிபதிகள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT