Friday, May 17, 2024
Home » அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவருக்கு கண்டியில் கௌரவிப்பும் முப்பெரும் விழாவும்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவருக்கு கண்டியில் கௌரவிப்பும் முப்பெரும் விழாவும்

by gayan
September 7, 2023 9:42 am 0 comment

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் அதன் அபிவிருத்தி சங்கம் ஆகியன இணைந்து நடத்திய முப்பெரும் விழாவும் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) காலை 9.30 மணிக்கு கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் மௌலவி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீமும் கலந்து கொண்டனர்.

கண்டி மாவட்ட அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ. எல். அப்துல் கப்பார் (தீனி), ஜம்இய்யதுல் உலமா சபையின் உயர் பீட உறுப்பினர்கள், பெரு எண்ணிக்கையிலான உலமாக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விசேட அம்சமாக 65 வயதுக்கு மேற்பட்ட உலமாக்களைக் கௌரவித்தல், 45 வயதின் கீழ் இறையடியெய்திய உலமாக்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் சமூகப் பங்காற்றி இறையடியெய்திய உலமாக்கள் மற்றும் சமூகவியலாளர்களை நினைவு கூர்ந்து விசேட துஆப் பிரார்த்தனை போன்ற பல நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.

இந்நிகழ்வில் தினகரன் பத்திரிகையின் சிறப்பு மலர், கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் சிறப்பு மலர், நூல் வெளியீடுகள், அரபுக் கல்லூரி மாணவர்களின் குழுப் பாடல்கள், பாராட்டு விழா, விசேட துஆப் பிரார்த்தனையுடன் ஜம்இய்யாவின் பிரகடனமும் வாசிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரும் விழாவின் பிரதம அதிதியுமான அஷ்ஷெய்க் எம். ஐ. எம்.ரிஸ்வி முப்தி;

முஸ்லிம்கள் இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப பங்களிப்புச் செய்தல் வேண்டும். எம்மை விட்டுப் பிரிந்த மூத்த உலமாக்களுடைய அடக்கஸ்தலங்களை அல்லாஹ் பிரகாசிக்கச் செய்து அல்லாஹுத்தஆலா உயர்ந்த இடத்தையும் பதவியையும் வழங்க அருள் புரிய வேண்டும். அவர்கள் அன்று இப்படியான காரியத்தைச் செய்திருக்காவிட்டால் இன்று நாம் நூறாம் வருடத்தில் சந்தோசமான முறையில் இவ்வாறான நிகழ்வைக் கண்டிருக்க மாட்டோம். எப்பொழுதும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் செய்திருக்கக் கூடிய இந்த மாபெரும் பணிக்காக வேண்டி நாங்கள் எல்லோரும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கை நாட்டின் முஸ்லிம்களாகிய நாம் 1400 பூர்வீக வரலாற்றைக் கொண்ட சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம். முன்னாள் வாழ்ந்த உலமாக்கள் எமது மார்க்கத்தை மதித்து அதற்காக அவர்கள் மரியாதை செய்து அதைப் பாதுகாப்பதற்கு எடுத்த முயற்சிகள் அளப்பரியவை. இந்த நாட்டில் அவர்களுடைய கருத்துக்களையும் அவர்களுடைய பணிகளையும் அல்லாஹுத்தஆலா பாதுகாத்துத் தந்துள்ளான். இந்த அருட்கொடையினை நாம் எல்லோரும் எங்களால் முடிந்த வரை கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஒரு பொறுப்பு வழங்கப்பட்டால் அந்தப் பொறுப்பை சரியான முறையில் உரியவர்களுக்கு வழங்குவது கடமையாகும். ஆதலால் ஜம்இய்யதுல் உலமாவின் மூத்த உலமாக்கள் இதனைச் செய்து வந்துள்ளார்கள். உலகிலுள்ள அத்தனை முஸ்லிம்களும் அத்தனை உலமாக்களும் ஒன்று சேர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த பணியை எங்களால் செய்து முடிக்க இயலாது. நபி (ஸல்) அவர்களுடைய ஒரு நாள் பணியை உலகத்திலுள்ள எல்லோருடைய சக்திகளையும் ஒன்று சேர்த்துசெய்தாலும் செய்து முடிக்க இயலாது. அவருடைய பணி ஆட்சிக்காக அல்ல. சொத்துச் செல்வத்திற்காக அல்ல. மக்கள் சீரும் சிறப்புடன் வாழ வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டார்கள். நபி நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றி விட்டுச் சென்றுள்ளார்கள். இறுதி நாள் வரைக்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வழிகாட்டி விட்டுச் சென்றுள்ளார்கள். அவர்களுக்கு நிகர் எவருமில்லை.

நாங்கள் செய்தவைகளுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆனால் செய்யாமல் இருப்பவைகளுக்கு பாவமன்னிப்புத் தேட வேண்டும்.

இன்றைய ஜம்இய்யாவின் நூற்றாண்டு தினத்தில் உலமாக்களை கௌரவப்படுத்தி கண்ணியப்படுத்தும் அதேவேளையில், கஷ்டமான உலமாக்களுக்கு உதவி செய்தல் அதே நேரத்தில் எங்களுடைய பொறுப்பை சரிவர நிறைவேற்றி விட்டோமா என்பதை திரும்பவும் ஒரு விடுத்தம் சரிபார்த்துக் கொள்வது எங்களுடைய கடமையாக இருக்கின்றது. கண்டி மாவட்டத்திலுள்ள ஜம்இய்யதுல் உலமா அங்கத்தவர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிலுள்ள 9000 உலமாக்களும் இரவு பகலாகப் பாடுபட்டால்தான் அந்த பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற முடியும்.

இந்த நாட்டில் வாழக் கூடிய இரண்டு கோடி மக்களில் இருபது இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு எமது இனிய இஸ்லாமிய மார்க்கத்தை தெளிவுபடுத்த வேண்டியது உலமாக்களினதும் முஸ்லிம்களினதும் பொறுப்பு ஆகும்.

ஜம்இய்யதுல் உலமா இரு பிரதான விடயங்களை இரு கண்களாகப் பார்க்கின்றன. ஒன்று வேற்றுமையில் ஒற்றுமையாகும். அது காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமையாகும். இரண்டாவது சகவாழ்வு.

இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், 225 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், இந்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களுடன் சக வாழ்வின் அடிப்படையில் அனைத்து தரப்பினர்களுடன் எப்படிப் பயணிக்க வேண்டுமோ என்பது பற்றி ஜம்இய்யதுல் உலமாவினால் தெளிவுபடுத்தி வருகின்றோம். 164 கிளைகளின் கீழுள்ள 9000 உலமாக்களும் இத்தகைய விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அவர்களும் தங்களுடைய சக்திக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது எங்களுக்கு சந்தோசமாக இருக்கின்றது எனலாம்.

இலங்கையில் 3000 பள்ளிவாசல்கள் உள்ளன. அதனை எட்டு வலயங்களாகப் பிரித்து ஒவ்வொரு வலயங்களுக்குக் கீழும் ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் என ஆறு பேர் கொண்ட உலமாக்களை நியமித்து செயற்பட்டு வருகின்றோம். 2018 இல் இருந்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு இந்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டில் உள்ள பௌத்த விஹாரைகளுக்கும் சென்று சக வாழ்வினை ஏற்படுத்தும் வகையில் பரஸ்பர சமூக நல்லிணக்க உறவுகளையும் வளர்த்து வருகின்றோம்.

நாங்கள் நாட்டுப் பற்றுடையவர்கள். இந்த நாட்டுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். இந்த நாட்டுக்காக எங்களுடைய உயிர்களை அர்ப்பணித்தவர்கள். எங்களுடைய முன்னோர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். இன்றும் அதே நிலையில்தான் இருக்கின்றோம். இந்த நாட்டுக்கு ஏதாவது ஓர் ஆபத்துவருமாயின் முஸ்லிம்களாகிய நாம் ஒரு போதும் சகித்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் உரையாற்றும் போது;

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கொழும்பில் இடம்பெற்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வமைப்பு முஸ்லிம் சமூகத்திற்கு உன்னதமான பணிகளை ஆற்றி வருகிறது என்று குறிப்பிட்டமை மிகவும் முக்கியமான விடயமாகும் என்று அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாட்டிலுள்ள இஸ்லாமியர்களுக்கு சிறந்த மார்க்க வழிகாட்டுதலை வழங்குவதோடு சமுதாயத்திற்கு உன்னதமான பணிகளை செய்து வருகின்றனர் என்று சான்றுபகன்றார்.இது ஒரு முக்கியமான விடயமாகும். இந்த நிகழ்வில் நாட்டிலுள்ள மிக முக்கியமான பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த வருடங்களில் இந்த நாட்டில் பல்வேறு விதமான சோதனைகளையும் சவால்களையும் நாங்கள் எதிர்நோக்கி வந்துள்ளோம். இக்கால கட்டத்தில் ஏனைய சமூகத்திற்கு மத்தியில் காணப்பட்ட எங்களைப் பற்றிய தப்பபிப்பிராயங்களையும் சந்தேகங்களையும் இல்லாமற் செய்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பெரிய பிரயத்தனங்களுடன் செயற்பட்டது என்பதை உண்மையிலே நாம் எல்லோரும் அறிவோம்.

இந்தக் கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை கண்டி மௌலானா என்று அழைக்கப்படும் மௌலவி எச். சலாஹுதீன் அவர்கள் தலைமையில் செயற்பட்டது. அதன் பின்பு வந்த மௌலவி புர்ஹான் மற்றும் தற்போதைய தலைவர் மௌலவி உமர்தீன் அவர்களுடைய தலைமையின் கீழ் சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உப தலைவருமான அஷ்ஷெய்க் எச் உமர்தீன் (ரஹ்மானி) உரையாற்றும் போது;

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாதான் நூற்றாண்டு விழாவினைச் செய்து விட்டார்கள். ஏன் இப்படியான நிகழ்ச்சி மீளவும் செய்யப்பட வேண்டும் என்றதொரு கேள்வி ஒரு சிலர் மத்தியில் இருந்தாலும் கூட அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்த நூற்றாண்டு விழாவினை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் செய்வதற்கான காரணம் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்த நெருக்கடியான கால கட்டத்தில் அரச மட்டங்களில் ஜம்இய்யா பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேதான் நிகழ்வு நடத்தப்பட்டது.

ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப்பட்டது. அது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஆனாலும் அதிலும் பெரியதொரு குறை காணப்பட்டது. அதில் எல்லா உலமாக்களையும் அழைக்க வில்லை என்று முறைப்பாடு தெரிவித்தனர். மண்டபத்தில் ஆசனம் இல்லாமையினால் 1000 பேருக்கு மேல் அனுமதி வழங்க முடியாத நிலை இருந்தது.

அன்று கலந்து கொள்ள முடியாமல் போனவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் இன்று கண்டியில் நடத்துகின்றோம். அது வெறும் விழாவாக மட்டுமில்லாமல் எம்மை விட்டுப் பிரிந்த மூத்த உலமாக்களுக்கான விசேட துஆப் பிரார்த்தனையும் 65 வயதினைத் தாண்டிய உலமாக்களின் சேவையைப் பாராட்டி கௌரவித்தல் மற்றும் எம்மை விட்டு இளம் வயதிலேயே பிரிந்த 45 வயதுக்கு உட்பட்ட உலமாக்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT