Monday, May 20, 2024
Home » பியகம போன்று முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்
தெற்காசியாவின் சிறந்த வர்த்தக வலயமாக மாறிய

பியகம போன்று முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்

- கைத்தொழில் மயமாக்கலை ஒவ்வொரு மாகாணத்திலும் முன்னெடுத்திருந்தால் நாடு நெருக்கடிக்குள் சிக்கியிருக்காது

by Rizwan Segu Mohideen
September 7, 2023 10:46 am 0 comment

– மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி உரை

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்தியடையாத பிரதேசமாக காணப்பட்ட பியகம பிரதேசம் வர்த்தக வலய ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளமையினால், இலங்கை முழுவதையும் முதலீட்டு வலயமாக மாற்றப்பட்டு பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகள் உலகுக்கு திறக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் நேற்று (06) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிங்கிரிய, அம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான பல பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அந்த பகுதிகள் அனைத்தும் வர்த்தக நகரங்களாக கட்டமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு மாவட்டங்களினதும் அபிவிருத்திக்காக முதலீட்டு வாய்ப்புகளை கொண்டு வருவதற்கு மக்கள் பிரதிநிதிகளின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அர்பணிப்புக்களை வலியுறுத்திய ஜனாதிபதி, கைத்தொழில் மயமாக்கல் எமது நாட்டுக்கு ஏற்றதல்ல என சிலர் கூறினாலும் இன்று பியகம முதலீட்டு வலயம் தெற்காசியாவின் சிறந்த வர்த்தக வலயமாக மாறியுள்ளதாகவும் பியகம, கட்டுநாயக்க போன்ற கைத்தொழில் மயமாக்கல் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டால், இன்று நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதேநேரம், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாணவர்களால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.

கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிடப்பட்டதுடன் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை அமைத்தற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதியொருவரின் முதல் வருகையைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி, கல்லூரியின் விருந்தினர் நினைவு பதிவேட்டில் பதிவிட்டார். அதனையடுத்து கல்லூரியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

அதனையடுத்து கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமாரும் நிகழ்வில் உரையாற்றினார்.

இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, காதர் மஸ்தான், மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.எம். நயீம் உள்ளிட்டவர்களும் மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT