Tuesday, May 21, 2024
Home » சனல்- 4 காணொளி விவகாரம் சர்வதேச மட்டத்தில் விசாரணை

சனல்- 4 காணொளி விவகாரம் சர்வதேச மட்டத்தில் விசாரணை

-பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கவும் தீர்மானம்

by sachintha
September 6, 2023 6:00 am 0 comment

செனல் 04 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். சனல் 4 இன் புதிய வீடியோவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு, பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் சம்பந்தமாக செனல்-04 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் -04 வெளியிட்டுள்ள காணொளி மற்றும் அதன் உள்ளடக்கம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்போது தெரிவித்திருந்தார். .

அதே போன்று ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை கண்ணீருடன் குறிப்பிட்டவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாகவே செயற்பட்டுள்ளரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஹெக்டர் அப்புஹாமி எம்பி தமது கேள்வியின் போது,

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் -04 வெளியிட்டுள்ள காணொளி மற்றும் அதன் உள்ளடக்கம் பாரதூரமானது.நாட்டு மக்களை கொன்று இரத்தத்தின் ஊடாக ஒரு தரப்பினர் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால், அது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயம் சம்பந்தமான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல்-4 வெளியிட்டுள்ள காணொளி சம்பந்தமாக ஜனாதிபதியின் தலைமையில் (நேற்று) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேவையாயின் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரம் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை.

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ்வாறான காணொளிகள் வெளியிடப்படுகின்றன.

கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எவ்வாறெனினும் அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்போது குறிப்பிட்டார்.மறுபுறம் ஒருதரப்பினர் அழுது கொண்டு ஒரு தரப்புக்கு சார்பாகவே செயற்பட்டார்கள்.ஆகவே, இவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக செயற்பட்டவர்களாகவே பார்க்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT