Monday, May 20, 2024
Home » தேசிய கல்வித்துறைக்கு பெரும் பணியாற்றும் ஜயவர்தனபுர பல்கலை முன்னாள் கல்வியாளர்கள் சங்கம்

தேசிய கல்வித்துறைக்கு பெரும் பணியாற்றும் ஜயவர்தனபுர பல்கலை முன்னாள் கல்வியாளர்கள் சங்கம்

by sachintha
September 6, 2023 12:04 pm 0 comment

‘கல்விப் புரட்சியின் திருப்புமுனையான தொழில்நுட்பத்துறைக்கு ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் அனுமதி பெறுகின்றனர்’ -பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன

பல்கலைக்கழகத்துக்கு மாத்திரமல்ல தேசியகல்விக்கு பெரும் பணியாற்றவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முன்னாள் கல்வியியலாளர்கள் சங்கத்தால் முடிந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரக் கல்வியின் திருப்புமுனையாக இலங்கைக்கு தொழில்நுட்பக் கல்வித்துறை அறிமுகம் செய்யப்பட்டதன் பலனாக தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப பொறியியல், உயிரி அமைப்பு தொழில்நுட்பம், தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானக் கல்வி போன்ற புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முன்னாள் கல்வியியலாளர்கள் சங்கம் உருவாகியிருக்காவிட்டால் பாடசாலைகளில் அப்பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்காது.

இலங்கை மன்ற நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற முன்னாள் பல்கலைக்கழக கல்வியலாளர்களின் சங்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் குறிப்பிட்டதாவது:

ஹிக்கடுவே சுமங்கல, வெலிவிட்டியே சோரத்தை தேரர்களால் ஆரம்பிக்கப்பட்ட வித்தியோதயா பல்கலைக்கழகம் அநேகமானோருக்கு மனவலிமையை அளித்தாலும், பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்கள் ஒரு அமைப்பாக உருவாகி இருக்கவில்லை . அதனால் அக்காலத்தில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நானும், மகிந்த விஜயசேகர, எஸ்.பி.திசாநாயக்க உள்ளிட்ட பட்டதாரிகளும் ஆயிரக்கணக்கில் கூடி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முன்னாள் கல்வியலாளர் சங்கத்தை அமைத்தோம்.

அச்சந்தர்ப்பத்தில் முதலாவது தலைவராக மகிந்த விஜயசேகர தெரிவானார். அவர் பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் காயம் அடைந்த பின்னர் பதில் தலைவராக நான் நடவடிக்கையில் ஈடுபட்டேன். அதன் பின்னர் டபிள்யூ. கே. எச் வேகபிட்டிய அதன் தலைவரானார். இக்காலத்தில் முன்னாள் கல்வியலாளர்கள் சங்கம் பாரிய பணியை பல்கலைக்கழகத்திற்கும் தேசிய கல்விக்கும் நிறைவேற்றியுள்ளது.

ஜயவர்தனபுரவுக்கு பொறியியல் பீடம் இருக்கவில்லை. நாம் முன்னாள் கல்வியலாளர்களாக அன்றைய பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் இணைந்து அப்போதைய உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லையின் வீட்டுக்குச் சென்று கலந்துரையாடி பொறியியல் பீடத்தை பெற்றுக் கொண்டோம்.

அதன் பின்னர் நான் கல்வி அமைச்சராக தொழில்நுட்ப பாடத்தை நாட்டிற்கு அறிமுகம் செய்த பின்னர் அம்மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடத்தின் தேவை ஏற்பட்டது. அவ்வேளையில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் ஹோமாகம பிட்டிப்பனையில் அமைக்கப்பட்டது. பொறியியல் பீடம் மத்தேகொடயில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் எஸ். பி. திசாநாயக்க விளையாட்டு அமைச்சராக இருந்த வேளையில் மிகப்பெரிய நீச்சல் தடாகம் ஒன்றை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக் கொடுத்தார். நான் வர்த்தக அமைச்சராக நிதியத்தை உபயோகித்து பண்டாரநாயக்க மண்டபத்திற்கு பதிலாக மிகப்பெரிய கேட்போர் கூடம் ஒன்றை 300 மில்லியன் ரூபாவில் மகாபொல மூலம் வழங்க தயாராகி அடிக்கல் நாட்ட நாளும் குறிக்கப்பட்டது.

அன்று ஜனதா விமுக்தி பெரமுன உள்ளிட்ட மாணவர்கள் சங்கத்தினர் பெருமளவில் பல்கலைக்கழகத்துக்கு வந்து நான் அடிக்கல் நாட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதனால் நான் ஒரு விதத்தில் என்றும் அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன். எனக்கு செய்த உதவிக்காக… ஏனென்றால் நான் அந்த நிதியைக் கொண்டு சென்று ஹோமாகம வனப்பகுதியில் மஹிந்த ராஜபக்ச கல்லூரியை அமைத்தேன். இன்று அங்கு ஏழாயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். 300 ஆசிரியர்கள் உள்ளார்கள்.

கடந்த வருடம் சாதாரணதரப் பரீட்சையில் 763 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் உயர்தரத்துக்கு தகுதி பெற்றார்கள். அது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய இரண்டாம் நிலை பாடசாலையாகும். இவ்வாறான வெற்றியை பெறுவதற்கு சந்தர்ப்பத்தை எனக்குப் பெற்றுக் கொடுத்தவர்கள் அந்த மாணவ சகோதரர்களே. அதனால் மகிந்த ராஜபக்ஷ கல்லூரி மூலம் மாணவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கும் என்றால் அதன் ஒரு பகுதி பெருமை அன்று ஜயவர்தனபுர பல்கலைக்கழக கேட்போர் கூடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு அனுமதிக்காத அந்த மாணவர்களையே சாரும் .

முன்னாள் கல்வியிலாளர் சங்கத்தின் பிரபலமான அங்கத்தவர்கள் என்ற ரீதியில் எமக்கு பல அரசாங்கங்களினதும் பல பதவிகளை வகிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதன்படி நான் கல்வி அமைச்சராக நடவடிக்கையில் ஈடுபட்டேன். எஸ்.பி. திசாநாயக்க உயர்கல்வி அமைச்சராக நடவடிக்கையில் ஈடுபட்டார். எனது செயலாளராக செயல்பட்டவர் ஜயவர்தனபுர முன்னாள் கல்வியலாளர் அனுரதிசாநாயக்கஆவார். எஸ்.பி திசாநாயக்கரவின் செயலாளராக கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன செயல்பட்டார். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் கல்வியிலாளர்களாக இலங்கையின் சுதந்திர கல்வியின் திருப்புமுனையாக அமைந்த தொழில்நுட்பத் துறையை அறிமுகம் செய்ய எம்மால் முடிந்தது.

தகவல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம், உயிரி அமைப்பு தொழில்நுட்பம், தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம் போன்ற பாடங்கள் ஜயவர்தனபுர முன்னாள் கல்வியியலாளர்கள் இருந்திருக்காவிட்டால் இலங்கையில் காணப்பட்டிருக்காது.

தற்போது இந்நாட்டில் மிகவும் பிரபல்யமான பாடநெறியாக தொழில்நுட்ப பாடநெறி அமைந்துள்ளது. இன்று 5000 இற்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகங்களில் இத்துறைகளில் கற்கின்றார்கள். அது புரட்சிகரமான மாற்றமாகும். அதைத் தவிர மாணவர்களின் நன்மைக்காக மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முன்னாள் கல்வியலாளர்கள் சங்கத்தால் முடிந்துள்ளது.

நாம் அனைவரும் தற்போதைய காலத்தின் பெரியவர்கள் ஆவோம். அதனால் வலுவான இளைஞர் சக்தி கொண்ட புதிய அதிகாரிகள் குழுவிடம் முன்னாள் கல்வியலாளர் சங்கத்தை ஒப்படைக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது. அதன்படி புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் நாம் அன்று போல் என்றும் ஒத்துழைப்பு வழங்குவோம். ஜெயவர்த்தனபுர அன்னையை உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்ல நாம் ஆதரவு வழங்குவோம். இவ்வாறு அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மகிந்த அளுத்கெதர…

தமிழில்: வீ.ஆர். வயலட்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT