Home » சிட்னியில் தமிழ் எழுத்தாளர் விழா; எழுத்தாளர் தாமரைச்செல்வி கௌரவிப்பு

சிட்னியில் தமிழ் எழுத்தாளர் விழா; எழுத்தாளர் தாமரைச்செல்வி கௌரவிப்பு

by sachintha
September 4, 2023 11:42 am 0 comment

சிட்னியில் எதிர்வரும் 10 ஆம் திகதி ‘2023 தமிழ் எழுத்தாளர் விழாவில்’ இலக்கியப் படைப்பாளி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பைப் பாராட்டும், கௌரவிப்பும் நடைபெறவிருக்கின்றன.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் தூங்காபி (Toongabbie) சமூக மண்டபத்தில் காலை 10-.00 மணிக்கு ஆரம்பமாகும்.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களின் நூல்களின் கண்காட்சி, மலையகம்_ 200 கருத்தரங்கு, வாசிப்பு அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அத்துடன் எழுத்தாற்றல் மிக்க மணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

2023 தமிழ் எழுத்தாளர் விழாவின் காலை அரங்கில் வரவேற்புரையை கலாநிதி கார்த்திகா கணேசர் நிகழ்த்துவார். அதன்பின் கலாநிதி சந்திரிகா சுப்ரமணியன் மேயர் வரவேற்று உரையை ஆற்றுவார். அதன்பின் இளம் எழுத்தாளர்களுக்கான சான்றிதழ்கள் பிரதம அதிதியான கம்பர்லாந்து மேயரால் வழங்கப்படும்.

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலக்கியப்படைப்பாளி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பை பாராட்டி கலாநிதி சந்திரிக்கா சுப்ரமணியன் ஆங்கிலத்தில் அறிமுகஉரை நிகழ்த்துவார். அதன்பின்னர் ‘தாமரைச்செல்வியின் இலக்கியப் பங்களிப்பு’ பற்றி எழுத்தாளர் லெ. முருகபூபதி உரையாற்றுவார்.

அவுஸ்திரேலியாவில் வசியும் தமிழ் எழுத்தாளர்களின் நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வும் மேற்படி எழுத்தாளர் விழாவில் நடைபெறும். நடேசன் எழுதிய ‘தாத்தாவின் வீடு’ நாவலுக்கான வாசிப்பு அனுபவப் பகிர்வை ரஞ்சகுமார் ஆற்றுவார்.

தேவகி கருணாகரன் எழுதிய ‘அவள் ஒரு பூங்கொத்து’ சிறுகதை தொகுப்புக்கான நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வு உரையை சௌந்தரி கணேசன் ஆற்றுவார்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா தொகுத்த ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ கட்டுரை தொகுப்பு நூலுக்கான வாசிப்பு அனுபவப் பகிர்வு உரையை ம. தனபாலசிங்கம் ஆற்றுவார். முருகபூபதி எழுதிய ‘சினிமா பார்த்ததும் கேட்டதும்’ கட்டுரைத் தொகுதிக்கான உரையை கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆற்றுவார்.

அத்துடன் தெய்வீகனின் ‘நாடற்றவர்களின் கடவுச் சீட்டு’ நூல் மற்றும் சந்திரிக்கா சுப்பிரமணியன் நூலின் வாசிப்பு அனுபவ உரையைஇந்துமதி ஸ்ரீநிவாசன் ஆற்றுவார்.

சிட்னி எழுத்தாளர்விழா நிகழ்வின் மதிய இடைவேளையின் பின்னர் மாலை அரங்கில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாள்களின் நூல்கள் – இதழ்கள் கண்காட்சியும் கலந்துரையாடலும் நடைபெறும். மலையகம்_ 200 சிறப்பு அரங்கில் நிகழ்கால எழுத்தாள ஆளுமைகளின் காணலை ஒளிபரப்பாகும். நோர்வே சரவணனன், கனடா மீரா பாரதி ஆகியோரின் பதிவுகள் காண்பிக்கப்படும். மாலை அரங்கில் அருண் குமாரசாமி குழுவினர் வழங்கும் இசைக்கலை நிகழ்வும் நடைபெறும்.

சுவாரஸ்யமான கதை களத்துடன் வெளியிடப்பட்ட ‘பிலிங்க்’ தமிழ் குறும்படமும் சிட்னி தமிழ் எழுத்தாளர் விழாவில் காண்பிக்கப்படும். அவுஸ்திரேலியா_- இந்தியாவை தளமாகக் கொண்ட GUM LEAF ENTERTAINMENT தயாரிப்பில், கதிர் இயக்கிய தமிழ் இலங்கை குறும்படம் ‘பிலிங்க்’ இலங்கையில் வெளியிடப்பட்டது.

இது ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்துடன் அருண் குமாரசாமியின் தனித்துவமான இசையுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்டது. சுமதி குமாரசாமியின் இயக்கத்தில் கம் லீஃப் என்டர்டெயின்மென்ட் தயாரித்த, ‘பிலிங்க்’ திரைப்படம், இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கணி திரையரங்கில் அதன் முதல் காட்சியை அண்மையில் நடத்தியது. நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரையை அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் ஆற்றுவார். அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சிட்னி தமிழ் எழுத்தாளர் விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஐங்கரன் விக்கினேஸ்வரா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT