Monday, May 20, 2024
Home » ஹுஸைன் Bபோல்ட் ஆற்றிய சமூகப்பணியை பாராட்டி கொழும்பில் கௌரவிப்பு விழா

ஹுஸைன் Bபோல்ட் ஆற்றிய சமூகப்பணியை பாராட்டி கொழும்பில் கௌரவிப்பு விழா

அநாதரவானோர் 19 ஆயிரம் பேரின் உடல்களை நல்லடக்கம் செய்த மனிதநேயன்

by gayan
August 30, 2023 8:46 pm 0 comment

கடந்த 50 வருடத்திற்குள் 19 ஆயிரம் மரணங்களை இன,மத வேறுபாடுகளின்றி அவரவர் மதத்திற்கு ஏற்ப அவரது சொந்த வாகனத்தில் இலவசமாக எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்துள்ளார் ஹுஸைன் ரஷாத் (ஹுஸைன் Bபோல்ட்)

அவருடைய இப்புனித சேவைக்கு 50 வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு அவரது ‘ஹுஸைன் ரஷாத் ஜனாஸா அறக்கட்டளையின்’ சக உறுப்பினர்கள் இணைந்து அவரை கெளரவிக்கும் நிகழ்வொன்றை கடந்த 17 ஆம் திகதி B.M.I.C.H இல் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் அவரது இப்புனித சேவைகளைப் பாராட்டி பெளத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயத் தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்ஸிநாயக்க தேரர், சிவஸ்ரீ குமார்சாமி குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் ஆகியோர் இணைந்து பொன்னாடை போர்த்தி அவரைக் கெளரவித்து தத்தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாலைதீவு மற்றும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பாதில் ஹிஷாம் அதாம் கலந்து கொண்டார்.

விஷேட அதிதிகளாக ஊடகவியலாளர் என்.எம். அமீன், முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் (SLBC) அஹ்மத் முனவ்வ , சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவர் பரிஹுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டதோடு, சமூகசேவையாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

கொழும்பு மாநகரில் அநாதரவாக பாதையோரம், கடலோரம், பஸ்நிலையம், புகையிரத நிலையம் உட்பட அநாதை மரணங்கள் கிடக்கின்றதோ அந்த நல்லடக்கத்துக்கு ஹுஸைன் Bபோல்ட் உதவி வருகிறார். மேல்மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள், விமானப்படை, கடற்படை, இராணுவ முகாம்களிலிருந்து இலவச இறுதிச்சடங்குக்காக உடல்களை எடுத்துச் செல்வதற்கு கொழும்பில் உள்ள ஹூசைன் போல்ட் அழைக்கப்பட்டு வருகின்றார்.

ஹுஸைன் Bபோல்ட் தனது இளமைப் பருவத்திலிருந்தே, கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அநாதரவாகக் கிடக்கும் உடல்களை அடக்கம் செய்வதில் தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வருகின்றார்.

கொரோனா தொற்று காலத்தில் இவர் 300 உடல்களை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்துள்ளார். ஆதரவற்ற குடும்பங்கள், பாடசலை மாணவ மாணவிகளுக்கும் அவர் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT