Monday, May 20, 2024
Home » பொருளாதார மேம்பாட்டுக்கு வலுசேர்க்கும் சுற்றுலாத்துறை

பொருளாதார மேம்பாட்டுக்கு வலுசேர்க்கும் சுற்றுலாத்துறை

by sachintha
August 28, 2023 6:00 am 0 comment

இலங்கையைப் பெருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு பெரிதும் உதவக்கூடிய துறைகளில் ஒன்றாக உல்லாசப் பயணத்துறை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அது பொருளாதார மேம்பாட்டுக்கான இலக்குகளை விரைவாக அடைந்து கொள்ளக்கூடிய முன்னணித் துறையாகவும் காணப்படுகிறது.

கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இந்நாடு, கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது. இந்நாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலக்கும் நோக்கும் ஆகும். அதற்கு ஏற்ப பரந்த அடிப்படையில் பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பொருளாதாரரீதியில் இந்நாட்டை முன்னேற்றவென பெரிதும் உதவக்கூடிய முன்னணி துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை விளங்கிக் கொண்டிருக்கின்றது. எந்தவொரு நாட்டையும் பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு அந்நிய செலாவணி அவசியம். அந்த அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கு இத்துறை அதிக பங்களிப்பை நல்கக்கூடியதாக இருக்கும். அதன் காரணத்தினால் சுற்றுலாத்துறையை ஊக்குவித்து அதை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உல்லாசப் பயணத்துறையைக் கட்டியெழுப்புவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் அதன் வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் பயனாக இந்நாட்டுக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரையும் 08 இலட்சத்து 66 ஆயிரத்து 744 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். ஆனால் கடந்த வருடமோ 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 உல்லாசப் பயணிகளே வருகை தந்துள்ளனர். கடந்த வருடம் வருகை தந்த மொத்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை இவ்வருடம் ஜுலை மாதத்திற்குள் தாண்டிச் செல்ல முடிந்துள்ளது. அதனால் இவ்வருடம் நிறைவடையும் போது இந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வருடத்தில் மே மாதம் தவிர்ந்த ஒவ்வொரு மாதமும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதிலும் கடந்த எட்டு மாதங்களில் ஜுலையில்தான் அதிகூடிய எண்ணிக்கையிலான உல்லாசப் பயணிகள் வந்துள்ளனர். அம்மாதம் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 39 உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை சுற்றுலா வலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு உல்லாசப் பயணிகளுடன் அளவளாவியுள்ளார். அத்தோடு, ‘இந்நாட்டுக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சத்தில் இருந்து 50 இலட்சமாகவும், அதன் பின்னர் ஒரு கோடியாகவும் அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்ப வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு சுற்றுலாப் பயணி நாளொன்றுக்கு 300 முதல் 500 டொலர்கள் வரையில் செலவு செய்யும் வகையில் வசதிகளை மேம்படுத்த வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அது தொடர்பான திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் இருந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையானது இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கும் அழகிய தீவாகும். நாலாபுறமும் அழகிய கடற்கரையோரங்களையும் சிறந்த சீதோஷண நிலையையும் கொண்டுள்ள இந்நாடு, தனித்துவம்மிக்க பாரம்பரிய மரபுரிமைகள் பலவற்றுக்கும் உரிமை கொண்டாடக் கூடியதாக இருப்பதோடு, உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடியதாகவும் உள்ளது. அதனால் இந்நாட்டின் இயற்கை வளங்களை உச்சபயனை அடைந்து கொள்ளும் வகையில் பயன்படுத்துவது மிகவும் அவசியம். அதற்கு ஏற்ப சுற்றுலாத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவது அவசியம்.

ஆகவே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவென ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களும் நிச்சயம் பக்கத்துணையாக அமையும். அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் முன்னேற்றம் அடையும் என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT