Monday, May 20, 2024
Home » தேர்தல் முறைகேடு: டொனால்ட் ட்ரம்ப் சிறையில் ஆஜராகி பிணையில் விடுதலை

தேர்தல் முறைகேடு: டொனால்ட் ட்ரம்ப் சிறையில் ஆஜராகி பிணையில் விடுதலை

- 2 இலட்சம் டொலர் ரொக்கப் பிணையில் வெளியேறினார்

by Rizwan Segu Mohideen
August 25, 2023 10:37 am 0 comment

– முதன் முறை அமெரிக்க ஜனாதிபதிக்கு சிறையில் புகைப்படம்
– ட்விட்டருக்கு வந்து முதல் இடுகையை பதிவு செய்தார்

2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், அத்தேர்தல் முடிவை மாற்றியமைக்கும் வகையில் செயற்பட்டு, அவரது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், ஜோர்ஜியாவில் உள்ள புல்டன் சிறையில் சரணடைந்ததைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சிறையில் கைதிகளுக்கு எடுக்கும் ‘Mug Shot’ எனப்படும் புகைப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டு நேற்று (24) வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த அல்லது இருக்கின்ற ஒருவருக்கு இவ்வாறு சிறையில் புகைப்படம் எடுக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அப்புகைப்படத்தில் அவர் முறைத்துப் பார்ப்பது போன்று அல்லது கண்கள் கூசுவது போன்று தோன்றியுள்ளார். தனக்கு எதிரான ஏனைய 3 குற்றவியல் வழக்குகளிலும் புகைப்படம் சமர்ப்பிக்காத நிலையில், இவ்வழக்கில் அவரது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

77 வயதான அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிறையில் சரணடைந்து பிணையில் வெளியில் வந்து, சிறையில் எடுத்த புகைப்படத்துடன் தனது ட்விட்டர் கணக்கில் “ELECTION INTERFERENCE! NEVER SURRENDER!” (தேர்தல் தலையீடு! ஒருபோதும் சரணடையாதே) என பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் கணக்கு (தற்போது X) முடக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இட்ட முதல் பதிவு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முறையற்ற பயன்பாடு தொடர்பில் 2021 இல் அவரது கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியிருந்த நிலையில் எலோன் மஸ்க் ட்விட்டரை கொள்வனவு செய்ததைத் தொடர்ந்து மீண்டும் அவரது கணக்கு பாவனைக்கு வழங்கப்பட்டது.

டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்துள்ளார். இந்நிலையில் 2020 நவம்பர் நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறவில்லை. இதனையடுத்து அவர் பதவி விலக கூடாது என அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கவும், புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா நடப்பதை தடுக்கவும் ஆங்காங்கு ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்ததில் 5 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு மாகாணங்களில் ட்ரம்ப்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் ஜோர்ஜியா மாகாணத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கிற்கு அமைய, மாகாண நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின்போதே ட்ரம்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டது. இதனையடுத்து நேற்று வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ட்ரம்ப் அட்லாண்டா சிறையில் அவர் சரணடைந்தார்.

அமெரிக்க வரலாறு எத்தனையோ ஜனாதிபதிகளை பார்த்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் யார் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவானது கிடையாது. ஆனால் முதல் முறையாக ட்ரம்ப் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ட்ரம்ப் சிறையில் ஆஜரான நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்துக்கொண்டனர். ட்ரம்ப் அட்லாண்டா சிறையில் சுமார் 20 நிமிடங்கள் வரை இருந்திருக்கிறார். இந்த 20 நிமிடங்களும் அட்லாண்டா பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட 200,000 டொலர் பிணைத் தொகையாக செலுத்தி சிறையிலிருந்து பிணையில் சென்றுள்ளார்.

குறித்த தொகையில் 10% இனை செலுத்தி, அட்லாண்டாவிலுள்ள பிணை நிறுவனம் ஒன்றின் மூலம் அவர் இப்பிணையை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் அவர் நேராக அட்லாண்டாவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து அவரது பிரத்தியேக விமானம் மூலம் நியூ ஜெர்சி கோல்ஃப் கிளப்புக்கு சென்றடைந்தார்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள ட்ரம்ப், “அமெரிக்காவுக்கு இது மிகவும் சோகமான நாள்” என்று கூறியுள்ளார்.

எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள ட்ரம்ப், தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நீதிமன்ற வழக்கு மற்றும் சிறை தண்டனை இவரது அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல அவரை தேர்தலில் வெற்றி பெற கூடாது என எதிர்க்கட்சிகள் செய்யும் சதிதான் இந்த வழக்குகள் என ட்ரம்ப் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT