Monday, May 13, 2024
Home » அடையாளம் காணப்படாத நோயினால் காலி சிறைக் கைதிகள் 2 பேர் மரணம்

அடையாளம் காணப்படாத நோயினால் காலி சிறைக் கைதிகள் 2 பேர் மரணம்

- மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Rizwan Segu Mohideen
August 21, 2023 7:11 pm 0 comment

அடையாளம் காணப்படாத நோய் காரணமாக சுகவீனமுற்ற காலி சிறைச்சாலையில் கைதிகள் 2 பேர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிலைமை காரணமாக, இன்று பிற்பகல் மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஒருவர் அண்மையில் விடுதலையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி சிறைச்சாலையில் குஷ்டம் போன்ற தோல் நோயுடனான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், இது Meningococcal எனும் கொடிய பக்டீரியாவால் ஏற்படுவதாக சந்தேகிக்கப்படுவதாக கராப்பிட்டி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களில் காலி சிறைச்சாலையில் இவ்வாறான பல நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த அறிகுறிகளுடனான இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று (21) மாலை வரை கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் மேலும் 3 பேர் உள்ளக நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு சில நாட்களில் அது தொடர்பான அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மெனிங்கோகோகல் பக்டீரியா குழந்தைகளுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். போதைப்பொருள் பாவனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தோல் நோய் மற்றும் காய்ச்சலினால் காலி சிறைச்சாலையில் உயிரிழந்த இருவரது மரணத்திற்கு காரணம் மெனிங்கோகோகல் பக்டீரியா என சந்தேகிக்கப்படுவதால், மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இவ்வாறான அறிகுறிகளுடன் நோயாளர்களை கையாளும் போது முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் உதேஸ் ரங்கவிடம் கேட்டபோது, ​​கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் உயிரிழந்தமைக்கான இறுதி அறிக்கைகள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார். இறுதி அறிக்கை கிடைத்த பின்னர், சம்பவம் குறித்து முழுமையான விளக்கத்தை அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், சிறைச்சாலையில் சுகவீனமுற்ற இருவரின் மரணத்திற்கு காரணம் மெனிங்கோகோகல் பக்டீரியா என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெனிங்கோகோகல் ஆனது, சொறிச்சல் போன்ற ஒன்றாகும். இது தோலின் கீழ் இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது. இது இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற புண்களாக ஆரம்பித்து, காயங்கள் போன்றதாக வளர்ச்சியடைகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT