Monday, May 20, 2024
Home » மத நிந்தனை குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தீ வைப்பு

மத நிந்தனை குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தீ வைப்பு

by sachintha
August 18, 2023 11:13 am 0 comment

இருவர் குர்ஆனை அவமதித்ததாக கூறப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் நகர் ஒன்றில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குறைந்தது நான்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ வீடுகளுக்கு தீவைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

கிழக்கு பஞ்சாபில் உள்ள ஜனர்வாலா நகரில் தேவாலயங்களுடன் தொடர்புபட்ட பல டஜன் கட்டடங்கள் சோதமடைந்திருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 100க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்திருப்பதோடு வன்முறை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருந்தபோதும் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் மரண தண்டனை விதிக்கக் கூடிய மத நிந்தனை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இரு உள்ளூர் கிறிஸ்தவர்கள் மீது பொலிஸார் வழக்குத் தொடுத்துள்ளனர். மதநிந்தனை குற்றச்சாட்டில் பாகிஸ்தானில் இதுவரை எவர் மீதும் மரண தண்டனை விதிக்கப்படாதபோதும், இவ்வாறான குற்றச்சாட்டு நாட்டில் பெரும் கலவரங்களை ஏற்படுத்தக் காரணமாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத நிந்தனை குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டார். இஸ்லாத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் 2009இல் பஞ்சாபின் கோர்ஜா மாவட்டத்தில் கும்பல் ஒன்றால் சுமார் 60 வீடுகள் தீ வைக்கப்பட்டு ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்லாத்தின் புனித நுலான குர்ஆனை இருவர் அவமதித்ததாக சமூக ஊடகத்தில் செய்தி பரவியதை அடுத்து கடந்த புதன் (16) காலையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தீ வைப்புகள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு கிறிஸ்தவ சமூகத்தின் அருகே சிவப்பு மார்க்கர் மையில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் நிந்தனை உள்ளடக்கத்துடன் புனித நூலின் கிழிந்த பக்கங்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் தேவாலயங்களின் தலைவரான பிஷப் ஆசாத் மார்ஷல் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜரன்வாலாவில் உள்ள கிறிஸ்தவ சமூகம் துன்புறுத்தப்பட்டுள்ளது. ஒரு தேவாலய கட்டடம் எரிக்கப்பட்டுள்ளது. பைபிளும் அவமதிக்கப்பட்டுள்ளது,” என்று பிஷப் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், “சட்டத்தை அமல்படுத்துபவர்களிடம் இருந்து நாங்கள் நீதியையும், நீதிக்கான செயல்களையும் எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்,” என்றும் அவர் தனது பதிலில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT