Tuesday, May 21, 2024
Home » அசர்பைஜான் – ஆர்மேனிய பதற்றம்: பாதுகாப்புச் சபை அவசர கூட்டம்

அசர்பைஜான் – ஆர்மேனிய பதற்றம்: பாதுகாப்புச் சபை அவசர கூட்டம்

by sachintha
August 18, 2023 3:41 pm 0 comment

சர்ச்சைக்குரிய நகார்னோ–கராபக் பிராந்தியத்துடன் வீதிப் போக்குவரத்தை அசர்பைஜான் படையினர் முடக்கியுள்ளதால், அந்த நாட்டுக்கும் அண்டை நாடான ஆர்மேனியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பது குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு சபை அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளது.

சோவியட் ஒன்றியத்தின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆர்மேனியாவுக்கும், அசர்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.

ஆர்மேனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோர்னோ–கராபக் பிராந்தியம், அசர்பைஜானின் ஓர் அங்கமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கடந்த 1994ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் அந்தப் பகுதி ஆர்மேனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சர்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தில் ஆர்மேனியாவும், அசர்பைஜானும் தங்களது படைகளைக் குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகார்னோ–கராபக் பிராந்தியத்தில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த 2020இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600க்கும் மேற்பட்டவர்கள் பலியானமை நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்புச் சபை மூட்டத்தில் அசர்பைஜான் முடக்கிய வீதியை உடன் திறக்க பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. இதற்கு சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அவை சுட்டிக்காட்டியுள்ளன.

சுமார் 30 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண வேண்டும் என்று பாதுகாப்பு சபை இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT