Monday, May 13, 2024
Home » சீனாவின் கடல்சார் அபிலாஷைகள், இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

சீனாவின் கடல்சார் அபிலாஷைகள், இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

by Rizwan Segu Mohideen
August 18, 2023 6:29 am 0 comment

உலக அரங்கில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடல்சார் மேலாதிக்கத்தை இலக்காக வைத்து அதன் நகர்வுகளும், செயற்பாடுகளும் பிராந்தியத்தில் பதற்றங்களை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்து சமுத்திரத்தில் சீனாவின் இந்த மூலோபாய நகர்வுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வகிபாகத்தை இலங்கை கொண்டிருப்பதாக அண்டை நாடுகள் கருதுகின்றன.

இந்து சமுத்திரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையானது, சீனாவின் கடல்சார் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய தளமாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எமது கடல் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மனக்கசப்புகளையும், விரிசல்களையும் ஏற்படுத்தி வருவது உலக அரங்கில் பரவலாக கவனிக்கப்படும் ஒரு விடயமாகும்.

அடிக்கடி இலங்கைக்கு வந்து போகும் சீன இராணுவ கப்பல்கள் தொடர்பிலும், கடல் பாதுகாப்பு விவகாரத்திலும் இந்தியா தனது கவலைகளை இலங்கையுடன் பலமுறை பகிர்ந்து கொண்டுள்ளது. கடந்த வருடம் இலங்கைக்கு வந்த சீனாவின் யுவான் வேங் 5 கப்பல் விவகாரம் இலங்கை இந்தியா நாடுகளுக்கிடையில் முறுகல் நிலையை உருவாக்கியது.

அத்தகையதொரு முறுகல் நிலை மீண்டும் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீன கடல் ஆராய்ச்சிக் கப்பலான “ஷி யான் 6” (Shi Yan 6) இலங்கை வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வந்து எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி வரை தரித்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷி யான் 6 கப்பலின் வருகைக்கு இலங்கை இன்னும் பச்சைக் கொடி காட்டவில்லை என்று கூறப்படுகிறது. என்றாலும், இந்தியாவின் எதிர்வினையாற்றலால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இலங்கை அவதானமாக இருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த போது, பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் மூலோபாய கவலைகள் தொடர்பில் இலங்கை கரிசனை செலுத்தும் என்று வாக்குறுதியளித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு ரணில் விக்ரமசிங்க வழங்கிய இந்த வாக்குறுதி தொடர்பாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு வழங்கிய இந்த கரிசனை தொடர்பான வாக்குறுதியை காற்றில் பறக்க விடுவாரா? என்று இந்தியா அவதானித்துக் கொண்டிருப்பதாக இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் இராணுவ கப்பல்களுக்கு இலங்கையில் தரித்து நிற்பதற்கு இடம் கொடுப்பது இது முதல் தடவையல்ல. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் யுவான் வாங் 5 என்ற கப்பல் தரித்து நின்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த கப்பலுக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டது. சீனாவின் இராஜதந்திர நெருக்குதலுக்கு உள்ளான இலங்கை இறுதியில் இந்தியாவுடன் முரண்பட்டுக் கொண்டு சீனாவின் அதிகாரத்திற்கு அடிபணிந்தது.

ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ள “ஷி யான் 6” 3,999 டன் எடையைக் கொண்ட சீனாவின் குவாங்சோவில் தயாரிக்கப்பட்ட கப்பலாகும். இந்த கப்பல் குவாங்சோவில் பயணத்தை ஆரம்பித்து தற்போது தென் சீனக் கடலுக்குள் நுழைந்து தெற்கு திசையில் பயணிக்க ஆரம்பித்திருப்பதாக மெரைன் ட்ரபிக் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலின் தெற்குப்பகுதியில் ஆய்வை மேற்கொள்வதற்காகவே “ஷி யான் 6” கப்பல் வருகை தருகிறது என இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவரான (NARA) ஆய்வாளர்கள் கூறியிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இந்த கப்பல் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இரு துறைமுகங்களிலும் தரித்து நின்று ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வை மேற்கொள்வதே இதன் முதன்மை நோக்கமாகும் என கூறப்படுகிறது.

இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் (NARA) தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள், ஷி யான் 6 கப்பலில் ஆய்வு பயணத்தோடு இணைய உள்ளனர் என்ற தகவலும் தற்போது வெளி வந்துள்ளது.

“ஷி யான் 6” கப்பலின் வருகை தொடர்பாக, இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எதையும் வெளியிடவில்லை என கூறப்பட்ட போதிலும், இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்தின் செய்திகளின் படி, இந்திய அதிகாரிகள் இலங்கையுடன் உயர் மட்ட இராஜதந்திர கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அறிய வருகிறது.

பல நாடுகளில் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்தும் போர்வையில் சீனா தனது செல்வாக்கையும், இருப்பையும் உறுதிப்படுத்தி வருவதாக பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதற்காக புவியியல் ரீதியாக மூலோபாய பெறுமதிமிக்க நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் கடற்படை தளங்களில் சீனா பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்து சமுத்திரத்தை இலக்காகக் கொண்ட சீனாவின் இத்தகைய நகர்வுகளை இந்தியா இராஜதந்திர ரீதியாக முகம் கொடுத்து ஆராய்வதற்கு தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்தது போல, இந்தியாவின் கடல் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் கையில் இருப்பதாக இந்தியா எதிர்பார்க்கிறது.

சீன மக்கள் இராணுவத்தின் கடற்படையை வேகமாக விரிவடைய செய்து, உலகளாவிய ரீதியில் கடல் ஆதிக்கத்தை தனது கைகளுக்குள் கொண்டு வர சீனா அயராது பாடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நாடுகளை இந்தியாவின் மூலோபாய நலன்களுக்குப் எதிராக பயன்படுத்த முயற்சி செய்வதாக சீனாவின் மீது இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

இலங்கையின் அண்டைய நாடு என்ற ரீதியில் இந்தியாவுடன் சிநேகபூர்வமான உறவை பேணுவது அவசியமாகும். அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கொவிட் 19 பேரவலத்தின் போதும், இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையின் போதும் மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்தியா தனது பூரண ஆதரவை வழங்கியது. இந்த நிலையில் சீனா தனது கடல்சார் ஆதிக்கத்தை இந்திய பெருங்கடலில் தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கையை ஒரு கருவியாக பயன்படுத்தி ஒருவித இராஜதந்திர அழுத்தத்தை இலங்கையின் மீது பிரயோகித்து வருகிறது. இதன் மூலம் பிராந்திய அரசியலில் ஒரு கொதி நிலையை இயங்கு நிலையில் வைத்திருக்க முயற்சி செய்வதோடு, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் முறுகல் நிலையை இயங்கு நிலையில் வைத்திருக்கவும் சீனா முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது இப்படியிருக்க, ‘ஹாய் யாங் 24 ஹாவ்’ (Hai Yang 24 Hao) என்ற மற்றுமொரு சீனக் கடற்படைக் கப்பல் ஆகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 138 பேர்களுடன் வந்த போர்க் கப்பலான ‘ஹாய் யாங் 24 ஹாவ்’ கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு ஆகஸ்ட் 12 ம் திகதி திரும்பிச் சென்றது.

கடந்த வருடம் சீனக் கப்பலான யுவான் வேங் 5 இலங்கைக்கு வந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியாவுடனான இராஜதந்திர பதற்றங்கள் ஏற்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் இந்த சீன கடற்படை கப்பலான ‘ஹாய் யாங் 24 ஹாவ்’ இன் விஜயம் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் போர்க் கப்பலான ‘ஹாய் யாங் 24 ஹாவ்’ கொழும்பு துறைமுகத்திற்கு “முறையான விஜயம்” ஒன்றை மேற்கொண்டதாக இலங்கை கடற்படையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இராஜதந்திர நெறிமுறைகளுக்கு இணங்க இந்த ‘ஹாய் யாங் 24 ஹாவ்’ கப்பலின் விஜயத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையின் கடற்படை தெரிவித்திருந்த போதிலும், இந்தியாவின் எதிர்ப்புகளுடன் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை அடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆகஸட் 11ம் திகதி டெய்லி மிரர் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சீன அதிகாரிகள் கப்பலின் வருகைக்கு முன்னதாக அனுமதி கோரியிருந்தனர், “ஆனால் இந்தியாவின் எதிர்ப்பின் காரணமாக இலங்கை அனுமதியை தாமதப்படுத்தியது” என்று எழுதியுள்ளது.

சீனாவின் கடற்படை போர்க் கப்பலின் வருகை குறித்து உத்தியோகபூர்வ வழிகள் ஊடாக இந்தியா எந்த கவலையும் தமக்கு தெரிவிக்கவில்லை என்று இலங்கை அதிகாரிகள் கூறியதாக இந்தியாவின் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்தியா கப்பலின் வருகை பற்றி முழுமையாக அறிந்திருக்கிறது, அது குறித்து எந்தக் கவலையையும் தெரிவிக்கவில்லை. இந்தியாவும் இலங்கையும் ஒரே பக்கத்தில் உள்ளன” என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேர்னல் நளின் ஹேரத், தி இந்துவிடம் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 17, 2023 அன்று அமைச்சரவை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் இராணுவ விமானங்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்காக “நிலையான இயக்க நடைமுறை” ஒன்று இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கடந்த ஆண்டு சீன இராணுவ செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 கப்பலின் வருகையை அடுத்து இந்திய- இலங்கை உறவுகளில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து இந்த அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டது.

எப்படியிருந்த போதிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு உட்பட இலங்கையின் துறைமுகங்களில் அடிக்கடி ஏற்பட்டு வரும் சீனாவின் தலையீடு தொடர்பான பிரச்சினை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பிராந்திய அரசியலின் கொதிநிலையை இயங்கு நிலையில் வைத்திருக்க வழியமைத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

– மித்ரன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT