Monday, June 17, 2024
Home » இலங்கை மெய்வல்லுனர் அணி இன்று புடபாஸ்ட் நகர் பயணம்
உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப்

இலங்கை மெய்வல்லுனர் அணி இன்று புடபாஸ்ட் நகர் பயணம்

by sachintha
August 15, 2023 8:52 am 0 comment

19ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று (15) ஹங்கேரி, தலைநகர் புடபாஸ்டை நோக்கி பயணிக்கவுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 19 தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் 207 நாடுகளைச் சேர்ந்த 2,087 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு ஆண் வீரர்களுக்கும் மற்றும் ஒரு பெண் வீராங்கனையும் பங்கேற்பதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பதக்கம் வென்றிருக்கும் காலிங்க குமாரகே இலங்கை மெய்வல்லுனர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் இந்தப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றபோதும் பல்வேறு காரணங்களுக்காக போட்டியில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியிலும் அபேகோன் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் போட்டியில் பங்கேற்பதையும் தவிர்த்தார். எனினும் சீனாவின் ஹங்சுவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியை இலக்கு வைத்து அவர் தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.

தவிர இலங்கையின் மத்திய தூர ஓட்ட வீராங்கனையான கயந்திகா அபோரத்ன 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் புடபாஸ்ட் செல்ல தகுதி பெற்றபோதும், கடைசி நேரத்தில் போட்டியில் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொண்டார். செப்டெம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியை இலக்கு வைத்து பயிற்சிகளை மேற்கொள்ள கயந்திகா மற்றும் அவரது பயிற்சியாளர் சஜித் ஜயலால் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி இலங்கை அணியை பிரதிநிதித்துவம் செய்து அருண தர்ஷன (ஆடவருக்கான 400 மீ.), காலிங்க குமாரகே, பபசர நிக்கு, தினுக்க தேஷான், ராஜித ராஜகருணா, பசிந்து கொடிகார, அருண தர்ஷன (ஆண்களுக்கான 400 மீ. அஞ்சலோட்டம்) மற்றும் டில்ஹானி லேகம்கே (பெண்களுக்கான ஈட்டி எறிதல்) ஆகியோர் இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. 1997 இல் கிரேக்கத்தில் நடந்த போட்டியில் சுசந்திகா ஜயசிங்க 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கமும் 2003இல் ஒசாகாவில் நடந்த அதே போட்டி நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT