Monday, May 20, 2024
Home » தங்களது சொந்தச் செலவிலேயே யானைவேலி அமைத்துக் கொள்ளும் நிந்தவூர் விவசாயிகள்!

தங்களது சொந்தச் செலவிலேயே யானைவேலி அமைத்துக் கொள்ளும் நிந்தவூர் விவசாயிகள்!

by gayan
August 10, 2023 10:07 am 0 comment

இலங்கையின் நெல் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் அம்பாறை மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பிரிவாகத் திகழும், நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையப் பிரிவில் சுமார் 6500 ஏக்கர் நெற்காணியில் இரு போக நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிறந்த விவசாயிகளைக் கொண்ட இப்பிரிவில், மேற்படி இருபோக நெற்செய்கைகளின் போதும், குறிப்பாக அறுவடை நெருங்கும் காலகட்டங்களில் காட்டுயானைகளின் தொல்லையால் விவசாயிகள் பெரும் அவலங்களுக்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகி வருவதுடன் உயிரிழப்புக்களை சந்திப்பதும் வழக்கமாகவுள்ளது.

காட்டு யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு யானைவேலி அமைத்து தருமாறு இவ்விவசாயிகள் கோரிக்ைக விடுத்து வந்தனர். இந்த நிலைமையை நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீபின் கவனத்திற்கு நிந்தவூர் விவசாயிகள் கொண்டு வந்தனர்.

அவரது ஆலோசனைக்கும், நிர்வாக ஆதரவிற்கும் அமைய குறித்த யானைத் தொல்லையிலிருந்து தமது விவசாயத்தைப் பாதுகாப்பதற்கென நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க விவசாயிகள் முன்வந்துள்ளனர்.

குறிப்பாக பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலில் நிந்தவூரிலுள்ள 14 விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்ததும் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல் தலைமையிலுமான செங்கற்படை ஆற்று விவசாயிகள் சம்மேளனம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக நிந்தவூர் விவசாயக் கண்டங்களுக்குள் காட்டு யானைகள் புகும் பாதையான சாவாறு வடிச்சல் முதல் ஆத்தியடி கட்டு வரையான 3. 5 கிலோமீற்றர் தூரத்திற்கு யானை வேலி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நிந்தவூர் விவசாயிகளின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் இத்திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்யவும் ஆவன செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த யானை பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கென 65 இலட்சம் ரூபா நிதியை விவசாயிகளிடமிருந்து பெற உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தற்சமயம் வரை சுமார் 52 இலட்சம் ரூபா வரை கிடைத்துள்ளதாகவும் விசாயிகள் சம்மேளன தலைவர் சட்டத்தரணி நசீல் தெரிவித்தார். மிக விரைவில் மீதித் தொகை கிடைத்துவிடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இத்திட்டத்தின் பிரதான நிர்மாண வேலைகள் மாலிண்டதிடல் பகுதியில் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கென பிரதேச செயலாளரால் காணியும் வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் குறுகிய காலத்துள் யானை பாதுகாப்பு வேலி அமைக்கும் வேலைகள் நிறைவுபெறுமென எதிர்பார்ப்பதாகவும், இதற்கென ஒலுவில் பிரசேதத்திலிருந்து மின்சார இணைப்பு பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் லத்தீப் தெரிவித்தார்

மக்கள் பங்களிப்புடனான (விவசாயிகள்) இத்திட்டம் வெற்றிகரமாக அமைய முன்னின்று உழைத்த விவசாயிகள் சம்மேளனத்தினர் மற்றும் சம்மேளன தலைவர் சட்டத்தரணி நசீல், நிந்தவூர் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக், வன ஜீவராசிகள் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் தௌபீக் மற்றும் 14 கமக்காரர் அமைப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விவசாயிகளின் பங்களிப்புடனான மேற்படி ஆக்கபூர்வ வேலைத்திட்டம் முன்னுதாரணமானதெனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ள அதேவேளை,

திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், இலங்கையிலேயே முன்னுதாரணமான வேலைத்திட்டம் இதுவெனப் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விதந்து பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

செல்லையா- பேரின்பராசா…?

(துறைநீலாவணை நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT