Saturday, May 11, 2024
Home » சீன, தாய்லாந்து நாட்டவர் குறைந்த விலையில் இரத்தினக்கற்களைப் பெறுவதால் எதிர்பார்த்த வரி இல்லை

சீன, தாய்லாந்து நாட்டவர் குறைந்த விலையில் இரத்தினக்கற்களைப் பெறுவதால் எதிர்பார்த்த வரி இல்லை

- மீள் ஏற்றுமதிக்கான இறக்குமதிக்கான 2.5% சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
August 4, 2023 2:46 pm 0 comment

– சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

சீனா மற்றும் தாய்லாந்து பிரஜைகள் இலங்கையில் மிகக் குறைந்த விலையில் இரத்தினக் கற்களை கொள்வனவு செய்வதற்கு சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்துவதால் அரசாங்கம் எதிர்பார்த்த வரியைப் பெறுவதில்லை என சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்தது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு வரி செலுத்தி நியாயமான முறையில் வியாபாரம் செய்யும் இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கலந்துரையாடப்பட்டது.

இரத்தினக்கல் மற்றும் நகைத்துறையின் ஏற்றுமதி, மறு ஏற்றுமதி ஆகியவற்றில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் அண்மையில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌவர அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த விடயங்கள் வெளிப்பட்டன.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் உட்பட அதிகாரிகள், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் அதிகாரிகள், இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ( விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல்) ஆகியோர் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டனர்.

இலங்கை இரத்தினக்கற்களுக்கு வெளிநாடுகளில் காணப்பட்ட நற்பெயரை மீண்டும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் இரத்தினக்கல் ஏற்றுமதி, மீள் ஏற்றுமதி என்பவற்றின் ஊடாக இந்நாட்டுக்கு அந்நியச்செலாவணியை ஈட்டிக்கொள்ள நடவடிக்கை எடுத்தல் என்பனவே இக்கூட்டத்தின் நோக்கம் என குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மீள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும் இரத்தினக்கல் மீது விதிக்கப்படும் 2.5 % சமூகப் பாதுகாப்பு வரியை விடுவிக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த நிவாரணம் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் நிதியமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கூரியர் சேவை மூலம் மீள் ஏற்றுமதிக்கு இரத்தினக் கற்களை இறக்குமதி செய்யும் போது 2.5% வரி செலுத்த வேண்டியிருந்தாலும் கைப் பொதிகளாகக் (Hand luggage) கொண்டு வரும் போது 200 அமெரிக்க டொலர்களை மட்டுமே செலுத்தி மிகப் பெறுமதியான கற்களைக் கொண்டுவர முடியும் என்பதும் இங்கு தெரியவந்தது. இரத்தினக்கல் ஏற்றுமதியின் இலாபத்தின் மீது அறவிடும் 30% வரியை வருமானத்தின் மீது 2.5% ஆக அறவிடுவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்குமாறு வர்த்தகர்கள் இதன்போது கேட்டுக்கொண்டனர்.

500,000/= ரூபாவுக்கு அதிகமான பண பரிவர்த்தனைகளுக்கு அரசாங்கம் விதிக்கும் வரியைத் தவிர்ப்பதற்காக, களத்திலுள்ள இரத்தினக்கல் வர்த்தகர்கள் பெரும்பாலும் இதுபோன்ற அதிக மதிப்புள்ள பண பரிவர்த்தனைகளை பணத்துக்கு மேற்கொள்ள முற்படுவதால், நியாயமான முறையில் வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்து அரசுக்கு முறையாக வரி செலுத்தும் வர்த்தகர்கள் தொழிலை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது இரத்தினக்கல் தொழிற்துறை மீதான வெளிநாட்டுப் பிரஜைகளின் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவர் குழுவில் தெரிவித்ததுடன், அதற்கான கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு ஏற்றுமதியாளர்களின் முந்தைய ஆண்டுகளின் ஏற்றுமதி வருமானம் அல்லது வெளிநாட்டு நாணய வருமானத்தில் 30% அடிப்படையில் அனுமதிப்பத்திரம் மூலம் வரியில்லாமல் அனுமதி வழங்குமாறு ஆபரண வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர். முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தகர்களுக்குத் தேவையான தங்கம் தற்காலிக இறக்குமதி அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெற்று இறக்குமதி செய்வதற்கு தடை இல்லை எனவும், 24 கரட் தங்கம் மாத்திரம் இறக்குமதி செய்யத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது இலங்கை சுங்க அதிகாரிகள் குறிப்பிடுகையில், “TIEP Scheme” எனும் முறையின் கீழ் (ஏற்றுமதி செயன்முறைக்கான தற்காலிக இறக்குமதி) ஆபரண வர்த்தகர்களுக்குத் தேவையான தங்கத்தை கைத்தொழில் அமைச்சின் பதிவு செய்வதன் ஊடாக மூலப்பொருளாக வரி செலுத்தாமல் இறக்குமதி செய்ய முடியும் எனத் தெரிவித்தனர். எனினும் இந்தச் செயன்முறையில் காணப்படும் சிக்கலான தன்மை காரணமாக அது தொடர்பான தமது விருப்பமின்மையை வர்த்தகர்கள் வெளிப்படுத்தினர்.

தமது வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் இலங்கையின் வங்கியொன்றை சீனாவில் ஸ்தாபிப்பது அல்லது சீன வங்கியொன்றை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தகர்களின் முன்மொழிவு தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. 2018 ஆம் ஆண்டு முதல் “Bank of China” வங்கி இலங்கையில் செயற்பட்டு வருவதாகவும், தற்பொழுது இலங்கை முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கையின் வங்கியொன்றை சீனவில் ஸ்தாபிப்பது சிரமமானது என இதன்போது இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ அகில எல்லாவல மற்றும் கௌரவ வருண லியனகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT