Monday, May 20, 2024
Home » இலங்கையின் எந்தவொரு மூலைமுடுக்கிலும் தமிழ்மொழியை உதாசீனம் செய்ய முடியாது!

இலங்கையின் எந்தவொரு மூலைமுடுக்கிலும் தமிழ்மொழியை உதாசீனம் செய்ய முடியாது!

மனித உரிமை ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் அசீஸ் கூறுகிறார்

by gayan
August 3, 2023 10:06 am 0 comment

இலங்கை அரசியல்யாப்பில் மொழி உரிமை பற்றி நான்காம் அத்தியாயத்தில் விரிவாக கூறப்பட்டிருக்கிறது. அதன்படி இலங்கையின் எந்த மூலைமுடுக்கிலும் தமிழ்மொழியை யாரும் உதாசீனம் செய்ய முடியாது.

இவ்வாறு கல்முனையில் நடைபெற்ற சமூக உரிமைப்பாடு இரண்டாம் மொழி கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மொழிக் கொள்கை பற்றிய இறுதி நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.எம்.அசீஸ் தெரிவித்தார்.

மனித அபிவிருத்தித் தாபனம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக கனடா அரசின் அனுமதியுடன் ஐந்து வருட வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செய்திட்டத்தின் ஒரு அங்கமாக சகவாழ்வு சங்கங்கள் ஊடாக ஒன்றிணைந்த கலாசார நிகழ்வையும் கருத்துக்களத்தையும் கடந்த வியாழக்கிழமை மாலை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்தது.

கல்முனை கிரிஸ்டா இல்லத்தில் தாபன உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியால் தலைமையில் இந்த இறுதி அமர்வு இடம்பெற்றது. அங்கு சிறப்பு பேச்சாளர்களாக மனித அபிவிருத்தி தாபனத்தின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா சிங்கள மொழி ஆசிரிய ஆலோசகர் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மனித அபிவிருத்தி தாபனத்தின் ஸ்தாபகர்களின் அச்சாணியாக திகழ்ந்து புதனன்று இறையடி சேர்ந்த அமரர் பொன்னையா( கண்டி) அவர்களுக்கு இரண்டு நிமிடம் ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது. அங்கு இணைப்பாளர் அசிஸ் பேசுகையில் “வடக்கு, கிழக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழிலேயே முறைப்பாடு செய்ய உரிமை உண்டு. ஏனென்றால் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் மூன்றாவது அத்தியாயத்தின் 14 வது உறுப்பின்படி அது தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதுபோல வடக்கு, கிழக்கில் நிர்வாகமொழி, கல்விமொழி தமிழ்மொழி என்பதையும் நாங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் .

எனவே இலங்கை யாப்பின் நான்காவது உறுப்பில் மொழி உரிமை கூறப்படுகிறது. அந்த உரிமை முழுமையாக பேணப்ப்பட்டால் நாட்டில் சமத்துவம், சமாதானம், நல்லிணக்கம் தானாக உருவாகும். தனிமனித சுதந்திரம் பேணப்படுகின்ற பொழுது மொழி உரிமை தானாகவே பேணப்படும். மொழி உரிமை மீறப்படுகின்ற பட்சத்தில் உரிய இடத்தில் முறைப்பாடு செய்து அதற்கான பரிகாரத்தை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் மொழியை கட்டாயம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அது எமக்கு பல வழிகளிலும் உதவும். ஆனால் தாய்மொழியை என்றுமே நாங்கள் மறந்து விடக்கூடாது. அந்த தாய் மொழியிலேயே கருமமாற்ற இலங்கையில் சட்டம் இருக்கின்றது. உரிமை இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது” என்றார்.

நிகழ்ச்சியை அறிவிப்பாளர் நுஸ்ரத் தொகுத்து வழங்கினார். சகவாழ்வு சங்க பிரதிநிதி நந்தினி வரவேற்புரை நிகழ்த்தினார்.

காரைதீவு குறூப் நிருபர்…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT