Tuesday, May 21, 2024
Home » தலிபான்கள் அமெரிக்காவுடன் உத்தியோகபூர்வ பேச்சு

தலிபான்கள் அமெரிக்காவுடன் உத்தியோகபூர்வ பேச்சு

by sachintha
August 2, 2023 6:04 am 0 comment

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு திரும்பி இரண்டு ஆண்டுகளை எட்டி இருக்கும் நிலையில் தலிபான் தலைவர்கள் அமெரிக்க அதிகாரிகளை கட்டாரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தடைகள் மற்றும் பயணத் தடைகளை அகற்றுவது, வெளிநாட்டில் முடக்கப்பட்டிருக்கும் ஆப்கான் மத்திய வங்கியின் சொத்துகளை திரும்ப அளிப்பது உட்பட நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஆப்கான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (31) தெரிவித்தார்.

இதில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலும் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த பேச்சாளர் தெரிவித்தார்.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது தொடக்கம் அந்த அரசை இதுவரை எந்த ஒரு நாடும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவில்லை.

20 ஆண்டுகள் நீடித்த போருக்குப் பின் அமெரிக்கா ஆப்கானில் இருந்து வாபஸ் பெறும்போது அந்நாட்டின் மேற்குலக ஆதரவு அரசு வீழ்ந்ததைத் தொடர்ந்தே 2021 ஓகஸ்டில் தலிபான்கள் ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றினர்.

ஆட்சிக்கு வந்ததை அடுத்து பெண்கள் கல்வி மற்றும் உரிமைகளை கட்டுப்படுத்தியது தொடர்பில் தலிபான்கள் சர்வதேச கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆப்கான் மனிதாபிமான நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. அந்த நாட்டின் 23 மில்லியன் மக்கள் தொகையின் கிட்டத்தட்ட பாதி அளவானோர் உலக உணவுத் திட்டத்தின் உதவியை பெற்று வருகின்றனர்.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டில் ‘மோசமடைந்து வரும்’ மனித உரிமைகள் பற்றிய தொழிநுட்பப் பேச்சுக்களுக்கு வொஷிங்டன் திறந்திருப்பதாக அதன் அதிகாரிகள் தலிபான்களிடம் கூறியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதில் பெண்களின் உயர் கல்வி மற்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு உள்ள தடையை நீக்கும்படியும் கைது செய்யப்பட்டிருக்கும் அமெரிக்கர்களை விடுவிக்கும்படியும் அமெரிக்க அதிகாரிகள் தலிபான்களை கேட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT