Tuesday, May 14, 2024
Home » காலநிலை மாற்றத்தைத் தணித்தல்: இந்தியாவின் முன்முயற்சிகள்

காலநிலை மாற்றத்தைத் தணித்தல்: இந்தியாவின் முன்முயற்சிகள்

by Rizwan Segu Mohideen
July 28, 2023 6:02 pm 0 comment

உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் அதன் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் 1999ம் ஆண்டு இந்த ஜி20 கூட்டமைப்பு நிறுவப்பட்டது.

பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இதில் அங்கத்துவம் வகிக்கின்றன. நடப்பாண்டில், ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. உலகளாவிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கும் நிலையான, சுபிட்சமான உலகத்தை நோக்கி செயல்படுவதற்கான திட்டங்களை வகுப்பதற்கும் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை இந்த ஜி20 தலைமைத்துவம் வழங்கியிருக்கிறது.

உலகின் பல நாடுகள் கொவிட் -19 தொற்று மற்றும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளால் நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றன. இந்த இக்கட்டான, நெருக்கடிகள் மிகுந்த காலத்தில் இந்தியா-ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக வழிநடாத்த தொடங்கியிருக்கிறது.

ஜி 20 கூட்டமைப்புக்குள் இந்தியாவின் பங்கேற்பும் மற்றும் தலைமைத்துவமும் அதன் இராஜதந்திர வலிமையை வெளிப்படுத்த அந்த நாட்டுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, ஜி 20 கூட்டமைப்பிற்குள் இந்தியாவின் முக்கியத்துவத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஜி20 நிகழ்ச்சி நிரலின் மையப் புள்ளியாக பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றை பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.

உலகெங்கிலும் இடம்பெற்ற பல்வேறு அனர்த்தங்கள், பேரழிவுகள் மற்றும் பாதகமான விளைவுகளுக்கு காலநிலை மாற்றம் அதிகளவில் பங்களிப்பு செய்து வருகிறது. புவி மாசடைதல் மற்றும் புவி வெப்பமடைதல் போன்றவை காலநிலை மாற்றத்தின் விளைவுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த கால நிலை மாற்றத்தின் விளைவுகள் மிகவும் தீவிரமான புயல்கள், கனமான மழைப்பொழிவுகள், நீடித்த வறட்சிகள் மற்றும் வெப்ப அலைகள் ஆகியவற்றை ஏற்படுத்தி காற்றையும், காட்டையும், நீரையும், மண்ணையும், மனிதனையும் துவம்சம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

கால நிலை மாற்றங்கள் உலகளவில் பாரிய அழிவுகளுக்கும், மக்களின் இடப்பெயர்ச்சிகளுக்கும் மற்றும் உயிர் இழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளன. காலநிலை மாற்றம் உலகளவில் சுற்றுச்சூழலை பாதித்து பல்லுயிரியலை பாதிக்கச் செய்கிறது. மாறும் வெப்பநிலையும், கட்டுக்கடங்காத மழைப்பொழிவுகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைக்கின்றன. இதன் விளைவுகளால் தாவர மற்றும் விலங்கு இனங்கள் மற்றும் பல்லுயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பொருளாதார ரீதியிலான தாக்கங்களை உலகம் எதிர்கொண்டு வருகிறது. பேரழிவுகளுக்கு முகம் கொடுப்பது, உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் சுகாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வது போன்ற தாக்குப்பிடிக்க முடியாத செலவுகளால் பல நாடுகள் திண்டாடி வருகின்றன.

இத்தகைய காலநிலை மாற்றங்களினால் உலகம் எதிர்நோக்கும் பாரிய அழிவுகளிலிருந்து உலகை மீட்டெடுக்கும் திட்டத்தை ஜி20 மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் முக்கியத்தவமிக்க ஒன்றாக இந்தியா வைத்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய தேவையை உணர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அதன் நிலைப்பாடை இந்தியா தனது உறுதியான இலக்காக கொண்டுள்ளது.

G20 கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில், இந்தியா பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு (Paris Climate Accords) உலகளாவிய முயற்சிகளை ஒன்றுதிரட்டுவதை இலக்காக கொண்டிருக்கிறது.

ஜி 20 கூட்டமைப்பின் உறுப்பினராக இருக்கும் இந்தியா காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகளை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. அத்தகைய ஒரு திட்டம் சர்வதேச சூரிய கூட்டணி (International Solar Alliance – ISA) ஆகும். சர்வதேச சூரிய கூட்டணியை தொடங்குவதில் இந்தியா ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இது சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதை துரிதப்படுத்த உறுதிபூண்டுள்ள நாடுகளின் உலகளாவிய கூட்டணியாகும். இந்த செயல் திட்டம் உறுப்பு நாடுகளுக்கும், குறிப்பாக வளரும் நாடுகளுக்கும் மலிவாக சூரிய ஆற்றல் சக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சூரிய ஆற்றலை ஊக்குவிப்பதோடு அதற்கான முதலீடுகளையும் ஆராய்ச்சிகளையும் மற்றும் மேம்பாட்டையும் ஊக்குவித்து, சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை இந்த சர்வதேச சூரிய கூட்டணி (ஐஎஸ்ஏ) நோக்கமாகக் கொண்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நிவர்த்தி செய்ய இந்தியா பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய தொழில்துறை நாடுகளில் ஒன்று என்ற ரீதியில், பசுமைக் குடில் வாயு உமிழ்வை குறைக்கும் வேலைத்திட்டத்தை முன்னிலைப்படுத்தி, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிக்கவும் அதன் விளைவுகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய மாற்றுத் திட்டங்களை இந்தியா முன் வைத்திருக்கிறது.

காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change – NAPCC) என்ற ஒரு திட்டத்தை ஏற்கனவே இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த இந்த தேசிய செயல் திட்டம் ஜூன் 30, 2008 அன்று முறையாக தொடங்கப்பட்டது. காலநிலை மாற்றத்தை திறம்பட எதிர்கொள்வதற்காகவும் அதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (NAPCC) அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த திட்டம் எட்டு இலக்குகளை உள்ளடக்கியுள்ளது. இத்திட்டத்தின் இலக்கு 2025-26 ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டத்தின் (NAPCC) மைய திட்டங்களாக எட்டு தேசிய வேலைத்திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அவை காலநிலை மாற்றம் மற்றும் அதனை தணிப்பு செய்யும் செயல் வடிவம், ஆற்றல் திறன் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு பற்றிய புரிதலை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகின்றன.

அந்த எட்டு பணிகளை பின்வருமாறு வகைபடுத்தப்பட்டுள்ளன
தேசிய சோலார் மிஷன்
மேம்படுத்தப்பட்ட ஆற்றல் திறன் தேசிய வேலைத்திட்டம்
நிலையான வாழ்விடத்திற்கான தேசிய வேலைத்திட்டம்
தேசிய நீர் வேலைத்திட்டம்
இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பை நிலைநிறுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டம்
பசுமை இந்தியாவுக்கான தேசிய வேலைத் திட்டம்
தேசிய நிலையான விவசாய வேலைத்திட்டம்
காலநிலை மாற்றத்திற்கான மூலோபாய அறிவுக்கான தேசிய வேலைத் திட்டம்
இந்த திட்டத்தில் தேசிய சோலார் மிஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த எரிசக்தி உற்பத்தியில் சூரிய ஆற்றலின் பங்கை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். அதே நேரத்தில் பிற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் நோக்கத்தையும் இது விரிவுபடுத்துகிறது. சர்வதேச ஒத்துழைப்பின் உதவியுடன், செலவு குறைந்த, நிலையான மற்றும் வசதியான சூரிய சக்தி அமைப்புகளை உருவாக்குவது குறித்து ஆராயும் ஒரு ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கவும் இது அழைப்பு விடுக்கிறது.

இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் 280GW நிறுவப்பட்ட சூரிய சக்தியை அடைவதே இதன் இலட்சிய இலக்காகும். 2022 ஆம் ஆண்டிற்குள் 100 GW கிரிட்-இணைக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதையும் இது இலக்காகக் கொண்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வரிசைப்படுத்தலுக்கு இந்தியா இலட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. அதன் “தேசிய சூரிய மிஷன்” மற்றும் “தேசிய காற்று மிஷன்” மூலம், அரசாங்கம் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் விரிவாக்கத்தில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

சூரிய ஆற்றல் சக்தியை ஊக்குவிப்பதற்காக மும்முரமாக இயங்கும் நாடுகளில், உலகளாவிய கூட்டணியான சர்வதேச சூரிய கூட்டணியை (International Solar Alliance – ISA) தொடங்குவதில் இந்தியா ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ஐ.எஸ்.ஏவின் முதன்மை நோக்கம் வளங்களை திரட்டுவதும், சூரிய தொழில்நுட்பங்களில் புதுமைகளை ஊக்குவிப்பதும் ஆகும். இது அனைவருக்கும் மலிவான மற்றும் சூழலுக்கு மாசு ஏற்படாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிப்பதில் காடுகளின் முக்கியத்துவம் மிகவும் பிரதான பங்கை வகிக்கிறது. இந்தியா தனது வனப்பகுதியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதற்கும் பசுமைக் குடில் வாயுவை கட்டுப்படுத்துவதற்கும் “பசுமை இந்தியா மிஷன்” மற்றும் “காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம்” போன்ற திட்டங்களை இந்தியா தொடங்கியுள்ளது.

இந்தியா சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக செயற்பட்டு வருவதுடன் மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் குறிக்கோள்களுக்கு உறுதியளித்துள்ளது. சூழலை பாதுகாக்கின்ற தூய்மையான ஆற்றலை மேம்படுத்துவதற்கு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கான தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்கும், அதற்கான நிதியை திரட்டுவதற்கும் இந்தியா சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைத்து செயற்பட்டு வருகிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் வேலைத்திட்டங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள நிலையில், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்க இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியள்ளன. சூழல் மாசற்ற, நிலையான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தூய்மையான ஆற்றல் சக்தி உற்பத்திற்கான திட்டங்களில் இந்தியா தொடர்ந்தும் முன்னுரிமை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT