Sunday, May 12, 2024
Home » நிதி அமைச்சின் அதிகாரிகள் குழு ஆஜராகாமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு அதிருப்தி

நிதி அமைச்சின் அதிகாரிகள் குழு ஆஜராகாமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு அதிருப்தி

- வருகை தந்த அதிகாரிகள் வழங்கிய பதில்களிலும் திருப்தியில்லை

by Rizwan Segu Mohideen
July 26, 2023 3:48 pm 0 comment

– ஜனாதிபதியின் 2048 நோக்கத்துக்கு அமைய வளர்ச்சியை அடைவதற்கு அமைச்சு கொண்டிருக்கும் நிலைபேறான திட்டம் குறித்து கேள்வி

அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் சமூகமளிக்காமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

குறிப்பிட்ட அமைச்சு தொடர்பான விடயங்கள் பாராளுமன்றக் குழுவில் கலந்துரையாடல்களுக்கு எடுக்கப்படும் போது அமைச்சுக்குத் தலைமைதாங்கும் பொறுப்புவாய்ந்த மற்றும் பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அதிகாரிகள் சமுகமளித்திருக்க வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது.

2003 ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் 10ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை நேற்றையதினம் (25) குழுவின் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

2023 ஜூன் இறுதி வரையான அரசிறை நிலைமையை நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர். இந்த அறிக்கைக்கு அமைய வரவுசெலவுத்திட்டத்தின் முதன்மை இருப்பு 0.1% மிகையைக் காண்பித்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான சேர் பெறுமதி வரியின் அதிகரிப்புக் காரணமாக ஆண்டுக்கான வருமான சேகரிப்பு 41.9% இனால் அதாவது 1,317 பில்லியனாக அதிகரித்துள்ளது. முதல் காலாண்டுக்கான செலவீனம் 2,650 பில்லியன் என்றும் இது 40.5% இனாலான அதிகரிப்பாகும். உள்நாட்டு வட்டிச் செலவீனத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதுடன், இது முதல் காலாண்டில் 51.6% இனால் அதாவது 1,273 பில்லியனாக அதிகரித்துள்ளது.

குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் வழங்கிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அரசிறை நிலைமை, பொருளாதார செயலாற்றுகை மற்றும் செலவீனங்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் செயலாற்றுகை தொடர்பில் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

2023ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 11.5 வீத சுருக்கம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். இவ்வாறான நிலைமைக்கான காரணம் மற்றும் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து பொருளாதாரம் மேலும் கீழ்நோக்கிச் செல்லாதிருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.

அத்துடன், ஜனாதிபதியின் 2048 நோக்கத்துக்கு அமைய வளர்ச்சியை அடைவதற்கு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலைபேறான திட்டங்கள் குறித்தும் குழு மேலும் கேள்வியெழுப்பியது. அபிவிருத்தியடைந்த நாடு என்ற வளர்ச்சியை அடைவது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தாலும், ஒத்திசைவான மூலோபாயத் திட்டமொன்று இருக்கவில்லை என்பது இதன்போது புலப்பட்டது.

இந்தக் கேள்விகளுக்கு வருகை தந்திருந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட பதில்கள் தெளிவற்றதாகவும், செயலூக்கமற்றவையாகவும் காணப்பட்டன என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது. பணவீக்கம் மற்றும் வரிக் கொள்கை மாற்றங்களால் வரிகள் அதிகரிக்கின்றமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது.

குழு முன்னிலையில் ஆஜராகும்போது தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் தயாரான நிலையில் இருப்பது அவசியமானது என்றும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் அதற்குரிய குழுவினருடன் சரியான பார்வையைக் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அரசாங்க நிதி பற்றிய குழு வலியுறுத்தியது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக ரணவக்க, மதுர விதானகே, ஹர்ஷன ராகருணா, (கலாநிதி) நாளக கொடஹேவா, மயந்த திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT