Tuesday, May 14, 2024
Home » நாட்டை கட்டியெழுப்ப நிதி ரீதியான ஒழுக்கம் அவசியம்

நாட்டை கட்டியெழுப்ப நிதி ரீதியான ஒழுக்கம் அவசியம்

- புதிய வருமான வழிகளை உருவாக்கும் மூலோபாயங்களைக் கண்டறியும் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்

by Rizwan Segu Mohideen
July 13, 2023 4:28 pm 0 comment

– அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன், புதிய வருமானம் ஈட்ட துரித முறைமை

நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிலிருந்தும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும் எனவும், ஆனால் அது பெரும்பாலும் அரச செலவின செயற்பாடுகளில் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச வருமானத்தை மறப்பது மாத்திரமன்றி எந்தவித பலனுமற்ற நடவடிக்கைகளுக்காக அரச நிதி கட்டுப்பாடற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதும் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது என்று தெரிவித்தார்.

அத்துடன், கடந்த இரண்டு. மூன்று வருடங்களாக இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படாமையே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வருமான வரி மற்றும் அரச நிதி நிலைமை குறித்து ஆராய தற்பொழுது பாராளுமன்றத்தில் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களைக் கண்டறிவதற்காக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த அறிக்கை இராஜாங்க அமைச்சரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்க மற்றும் கலால் திணைக்களங்கள் என்பவற்றின் வருமான இலக்குகளை அடைவதற்கான முறையான சூழலை உருவாக்குதல், அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதற்கான டிஜிட்டல் பொருளாதார பின்னணியை தயார் செய்தல் தொடர்பான முன்மொழிவுகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகள் குறித்து மேலும் கலந்துரையாடி பாராளுமன்ற முறைமைகள் (Ways and Means) குழுவிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இராஜாங்க அமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், இந்த முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி, பரந்த ஊடகப் பிரச்சாரத்தின் ஊடாக இது தொடர்பில் முறையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

வரி வருமானம் முறையாக வசூலிக்கவில்லை என்பது தான் இன்றைய பொருளாதார நெருக்கடியில் முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று. வருமான வரி செலுத்த வேண்டிய சில தரப்பினர் வருமான வரி செலுத்துவதில்லை. மேலும், சுங்கத்தில் ஏற்படும் தாமதம் காரணமாக அரசுக்கு முழு வரி வருமானம் கிடைப்பதில்லை என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் கலால் வரி குறித்தும் இதே குற்றச்சாட்டு உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும் இந்த சமயத்தில், நாட்டில் முழுமையான நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும். முதலில் அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறன. இரண்டாவதாக, செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவுக்கும உச்ச மதிப்பை அரசாங்கம் பெற வேண்டும். பெரும்பாலும் அரச செலவில் இது நடப்பதில்லை. எனவே இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக, அரச வருவாயை அதிகரிக்க வேண்டும். இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டதுடன் அதற்கான பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. இன்று இந்த அறிக்கையைத் தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

வருமான வரியை உயர்த்த புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த அறிக்கையில் பல விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாராளுமன்றத்தில் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக பாராளுமன்றத்தில் ஆராயப்படாததும் சில சந்தர்ப்பங்களில் இவ்விடயத்தில் அக்கறையின்மையும் இந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். ஆனால் தற்போது வருமான வரி மற்றும் நிதி நிலைமை குறித்து ஆராய பல குழுக்களை நியமித்துள்ளோம். அந்தச் செயல்பாடுகளில் இந்தப் புதிய முறைகளைத் தேடிக்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது. யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்தப் பிரிவுகளை விட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால் டிஜிட்டல் மயமாக்கலுக்கு கால அவகாசம் வழங்கி, அதற்கேற்ப செயல்பட எதிர்பார்க்கிறேன். குறைபாடுகள் இருப்பின், உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

குறிப்பாக இந்த வருமானத்தை உருவாக்கும் முறையை இங்கிலாந்தில் இருந்து பெற்றுள்ளோம். இன்று, அந்த முறைகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எனவே, புதிய முறைமைகளை கவனித்து நமக்கு தேவையான முறைமையைத் தயார் செய்ய வேண்டும். கணக்காய்வுச் சட்டத்தில் அதற்கான புதிய சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

பிரதமர் கெமரூனின் கீழ் இது தொடர்பில் பணியாற்றியவர் அமைச்சர் பிரான்சிஸ் மௌட் ஆவார். இந்தத் துறையின் சீர்திருத்தம் குறித்து அவரது கருத்துக்களைப் பெற இலங்கைக்கு வருமாறும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வந்த பிறகு, அவர்கள் வருவாய் சேகரிப்பில் அதிக கவனம் செலுத்தினர். அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். முழுப்பிரதேசமும் தனியொரு முகவரின் கீழ் ஆளப்பட்டபோது, வருவாய்த்துறை அதிகாரிகளும், உள்ளூர் அதிகாரிகளும், வர்த்தகர்களும், வருவாய் சேகரிப்பதில் தனிக் கவனம் செலுத்தினர். அதனால், எந்த சந்தர்ப்பத்திலும் வருமானம் குறையவில்லை. தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் தொழில்களின் வளர்ச்சியுடன் வருமானம் அதிகரித்தது. ஆனால் 70 களில் இருந்து, வருமானத்தை மறந்து செயற்பட்டனர். நாட்டின் நிர்வாகத் துறையிலிருந்து வருவாய் ஈட்டுதல் நீக்கப்பட்டுள்ளது. வருவாயை மறந்துவிட்டது மட்டுமின்றி அரசின் பணமும் வரையறை இல்லாமல் செலவிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,

தற்போதுள்ள வருமான வழிகளை நெறிப்படுத்துவதற்கும், மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் புதிய வருமான வழிகளை அறிமுகப்படுத்தி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரச வருவாய் தொடர்பான சவாலில் பல அனுபவங்களை எதிர்கொண்டு தற்போது ஜனாதிபதியின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்டளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். மேலும், மொத்த தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடும் போது நமது அரச வருவாயை அதிகரிப்பதற்கு இன்னும் பல இலக்குகளை அடைய வேண்டும்.

புதிய வரிகளை அறிமுகப்படுத்தல், வரி சதவீதத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் நாம் உச்ச வரம்பை எட்டியுள்ளோம். எனவே, வரி அடிப்படையை விரிவுபடுத்துவதிலும், வரி வலையில் உள்ள ஓட்டைகளைக் குறைப்பதிலும் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும். மேலும், போட்டித்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையின் மூலம் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம். நீண்டகாலமாக சர்ச்சைக்குள்ளான விடயங்களை நியாயமான மட்டத்திற்குக் கொண்டுவர இந்த கலந்துரையாடல்கள் உதவியது.

இந்நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, நிதி அமைச்சின் பதில் செயலாளர் ஆர்.எம். பி. ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT