Monday, May 20, 2024
Home » சுவீடன் நேட்டோவில் இணைய ஆதரவை வெளியிட்டது துருக்கி

சுவீடன் நேட்டோவில் இணைய ஆதரவை வெளியிட்டது துருக்கி

by sachintha
July 12, 2023 3:36 pm 0 comment

நேட்டோ அமைப்பில் இணையும் சுவீடன் நாட்டின் விண்ணப்பத்தை ஆதரிப்பதற்கு துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான இணங்கியதாக அந்த இராணுவ கூட்டமைப்பின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டொல்டன்பர்க் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்புதலை உறுதிப்படுத்துவதற்கு துருக்கி பாராளுமன்றத்திற்கு சுவீடனின் விண்ணப்பத்தை அங்கீகாரத்திற்காக எர்துவான் முன்வைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது சுவீடனுக்கு சிறந்த நாள் என்றும் தாம் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் சுவீடன் பிரதமர் உல்ப் கிரிஸ்டெர்சன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக குர்திஷ் போராளிகளுக்கு இடம் அளிப்பதாக குற்றம்சாட்டி சுவீடனின் விண்ணப்பத்தை துருக்கி கடந்த பல மாதங்களாக தடுத்து வந்தது.

நேட்டோவின் 31 அங்கத்துவ நாடுகளில் ஒன்றாக இருப்பதால், அந்த அமைப்பில் புதிய நாடு ஒன்று இணைவதற்கு எதிராக துருக்கிக்கு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்தே இதுவரையும் நடுநிலை வகித்து வந்த சுவீடன் மற்றும் அதன் கிழக்கு அண்டை நாடான பின்லாந்து நேட்டோவில் இணைய கடந்த ஆண்டு மே மாதம் விண்ணப்பித்தது.

இந்நிலையில் துருக்கியின் பாதுகாப்பு கவலையை கருத்தில் கொண்ட சுவீடன் நாட்டின் அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவந்து குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை விரிவுபடுத்தியதோடு துருக்கிக்கு ஆயுத ஏற்றுமதியையும் ஆரம்பித்தது.

சுவீடனின் நேட்டோ விண்ணப்பத்தை துருக்கிய மற்றும் ஹங்கேரி நாடுகள் மாத்திரமே எதிர்த்து வந்தன. இந்நிலையில் ஹங்கேரி தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும் என்று நேட்டோ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேட்டோவில் சுவீடனுக்கு ஆதரவு அளிப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் துருக்கியின் எதிர்பார்ப்பையும் எர்துவான் இணைத்து பேசியுள்ளார்.

எனினும் இந்தக் கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உடன் நிராகரித்திருப்பதோடு இரண்டும் வெவ்வேறு விவகாரங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு துருக்கி 1987 ஆம் ஆண்டே விண்ணப்பித்தபோதும் எர்துகான் அந்நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் அந்த முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இதனிடையே இரண்டு நாட்கள் கொண்ட நேட்டோ மாநாடு லித்துவேனிய தலைநகர் வில்னியஸில் நேற்று (11) ஆரம்பமானது.

இதில் உக்ரைனுக்கு அங்கத்துவம் வழங்குவது குறித்து பிரதானமாக கவனம் செலுத்தப்படவுள்ளது. எனினும் போர் நீடிக்கும் நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைய முடியாது என்பதில் கூட்டணி நாடுகள் இணங்கியுள்ளன.

போர் முடிந்த பின்னரே உக்ரைன் நேட்டோவில் சேர்வது பற்றிப் பரிசீலிக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

நேட்டோவில் உக்ரைன் சேர்ந்தால் அது ஏற்கனவே பாதியாக உடைந்துகிடக்கும் ஐரோப்பியப் பாதுகாப்புக் கட்டமைப்பில் மேலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT