Monday, May 20, 2024
Home » கிடைத்துள்ள சுமார் 10 இலட்சம் மேன்முறையீடுகளில், 6.5 இலட்சம் ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களே

கிடைத்துள்ள சுமார் 10 இலட்சம் மேன்முறையீடுகளில், 6.5 இலட்சம் ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களே

- அதிக தொகைக்குரிய பிரிவிற்கு மாற்றுமாறே பெருமளவான கோரிக்கை

by Rizwan Segu Mohideen
July 12, 2023 6:16 pm 0 comment

– புதிதாக 3.5 இலட்சம் மேன்முறையீடுகளே கிடைத்துள்ளன
– ‘அஸ்வெசும’ வறுமை ஒழிப்பு திட்டத்தில் வருடாந்தம் ரூ. 206 பில்லியன் ஒதுக்கத் திட்டம்

– இம்மாதம் முதல் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் நடத்திய கலந்துரையாடல்களில் வறிய மக்களை அந்த நிலைமையில் இருந்து மீட்பதற்கு குறைந்தது 187 பில்லியன் ரூபா ஒதுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அரசாங்கம் அதனை 206 பில்லியன் ரூபா வரை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மையுடன் மிகவும் பொருத்தமான குழுவிற்கு இதன் கீழ் நன்மைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இந்த மாதத்திலேயே நன்மைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிப்படைத் தன்மையுடன் மிகவும் பொருத்தமான குழுவைத் தெரிவு செய்து, ‘அஸ்வெசும’ நலன்புரி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், கடந்த வருடம் 144 பில்லியன் ரூபாவை அரசாங்கம் நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக செலவிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் நாட்டில் வறுமை ஒழிப்புக்காக வருடாந்தம் 206 பில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்த்துள்ளதாகவும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த ‘அஸ்வெசும’ நலன்புரி வேலைத்திட்டத்தில் சுமார் 20 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு நன்மைகள் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது சமுர்த்திக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களில் 1,280,747 குடும்பங்கள் இந்த ‘அஸ்வெசும’ வேலைத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன. அதில் சுமார் 887,653 (70%) குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அவ்வாறாயின் தற்போது சமுர்த்தி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களில் ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளவர்களில் 70 வீதமான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது அங்கவீனர்கள், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுபவர்களுக்கு அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அதுவரையில், புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் முன்வைக்கப்படாது தெரிவுசெய்யப்பட்டுள்ள அனைவருக்கும் இம்மாத இறுதிக்குள் முதலாவது கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளவைகள் தொடர்பில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு தகுதியுள்ளவர்களாக தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு ஓகஸ்ட் மாதக் கொடுப்பனவுடன் சேர்த்து ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவையும் வழங்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அதன்படி இதுவரை 982,770 மேன்முறையீடுகளும் 62,368 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன.

தற்போது கிடைத்துள்ள 982,770 இலட்சம் மேன்முறையீடுகளில் சுமார் 650,000 மேன்முறையீடுகள், ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு பெயர்ப் பட்டியலில் உள்ள குடும்பங்களில் இருந்தே கிடைத்துள்ளன. நாம் நான்கு பிரிவுகளில் இந்த அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்கவுள்ளோம்.

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பிரிவில் இருந்து கூடுதலான தொகையை நலன்புரி கொடுப்பனவாக வழங்கும் பிரிவுக்கு தம்மை மாற்றுமாறு கோரியே குறித்த மேன்முறையீடுகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவை தவிர புதிதாக சுமார் 350,000 மேன்முறையீடுகளே கிடைக்கப் பெற்றுள்ளன.

வறுமையை அடிப்படையாக வைத்து அரசியலில் ஈடுபடும் கூட்டம் மற்றும் சில தொழிற்சங்கங்கள் இந்தத் திட்டத்தை செயலிழக்கச் செய்யவும், பயனாளிகள் மற்றும் கணக்கெடுப்புகளுக்கு இடையூறு விளைவிக்க முயன்றாலும், அந்த அலுத்தங்கள் காரணமாக பொருத்தமற்றவர்களை நன்மைகளுக்குத் தகுதியானவர்களாக மாற்ற முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மிகவும் தகுதியான குழுவினர் பயனடைவதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்தில் இதற்கு மேலதிகமாக மேலும் தகுதியானவர்கள் உள்ளார்களா என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த பொறிமுறையை விட நிவாரணம் வழங்கக்கூடியதும், மக்களை வலுவூட்டக்கூடியதுமான வேலைத்திட்டம் இருந்தால், அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்தும், ஆனால் இதனை எதிர்ப்பவர்களிடமிருந்து அத்தகைய சாதகமான முன்மொழிவு எதுவும் கிடைப்பதில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தற்பொழுது சமுர்த்தி திட்டத்தின் கீழ் உள்ள நிதியை சமூக வலுவூட்டல் திட்டத்திற்கு பாதுகாப்பான முறையில் மாற்றுவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT